4. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை
1சகோதர சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம்.
2ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.
3நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம்; பரத்தைமையை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
4உங்களில் ஒவ்வொருவரும் தம் மனைவியைத்* தூயவராகக் கருதி, மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும்.
5கடவுளை அறியாத பிற இனத்தாரைப் போன்று நீங்கள் கட்டுக்கடங்காப் பாலுணர்வுக்கு இடம் கொடுக்கலாகாது.
6இதில் எவரும் தவறிழைத்துத் தம் சகோதரரை வஞ்சிக்கக் கூடாது. ஏனெனில், இத்தகைய செயல்கள் அனைத்தையும் ஆண்டவரே தண்டிப்பார். இதை நாங்கள் முன்னமே உங்களிடம் எடுத்துரைத்திருக்கிறோம்; எச்சரித்தும் இருக்கிறோம்.
7கடவுள் நம்மை ஒழுக்கக்கேட்டிற்கு அல்ல, தூய வாழ்வுக்கே அழைத்தார்.
8எனவே, இக்கட்டளைகளைப் புறக்கணிப்போர், மனிதரை அல்ல, தம்முடைய தூய ஆவியை உங்களுக்கும் அளிக்கும் கடவுளையே புறக்கணிக்கின்றனர்.
9சகோதர அன்பைப்பற்றி உங்களுக்கு எழுதவேண்டிய தேவையில்லை. ஏனெனில், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த, கடவுளிடமிருந்து நீங்களே கற்றுக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள்.
10உண்மையிலேயே நீங்கள் மாசிதோனியாவிலுள்ள சகோதரர் சகோதரிகள் அனைவரிடமும் அன்பு செலுத்தி வருகிறீர்கள். அன்பர்களே! இதில் இன்னும் முன்னேற வேண்டுமென்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
11நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதுபோல, உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
12அப்பொழுது திருச்சபைக்கு வெளியே இருப்பவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்; பிறர் கையை நம்பாதபடி வாழ்வீர்கள்.
5. ஆண்டவரின் வருகை
13சகோதர சகோதரிகளே! இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.
14இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.
15ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே; ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.
16கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்.
17பின்னர், உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.
18எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.
4:15-17 1 கொரி 15:51,52.