1மேலை யோர்தானில் இருந்த எமோரிய நாட்டு அரசர்களும் கடலுக்கு அருகிலிருந்த கானானிய மன்னர்களும் ஆண்டவர் யோர்தான் நீரை இஸ்ரயேலர் கண்முன் அவர்கள் கடக்கும் வரையில் வற்றச்செய்தார் என்று கேள்வியுற்றபொழுது, அவர்களின் இதயங்கள் கலக்கமுற்றன. இஸ்ரயேலர்முன் அவர்கள் மனந்தளர்ந்தனர்.
கில்காலில் விருத்தசேதனம்
2அப்பொழுது ஆண்டவர் யோசுவாவிடம், “கற்களால் கத்திகள் செய்துகொள். இஸ்ரயேலருக்கு மீண்டும் விருத்தசேதனம் செய்” என்றார்.
3அவ்வாறே யோசுவா கற்களால் கத்திகள் செய்து கொண்டார். கிபயத்துகாரலோத்து என்னுமிடத்தில் அவர் இஸ்ரயேலருக்கு விருத்தசேதனம் செய்தார்.
4விருத்தசேதனம் செய்ததன் காரணம்; எகிப்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரிலும் போர்வீரர்களான ஆண்கள் எல்லாரும் வழியில் பாலைநிலத்தில் இறந்துவிட்டனர்.
5வெளியேறிய மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தனர். எகிப்திலிருந்து வெளியேறியபின் வழியில் பாலைநிலத்தில் பிறந்தவர் எவருக்கும் விருத்தசேதனம் செய்யப்படவில்லை.
6எகிப்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரிலும் போர்வீரர்களான ஆண்கள் எல்லாரும் அழியும்வரை, இஸ்ரயேலர் நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் அலைந்தனர். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் குரலைக் கேட்கவில்லை. ஆகவே, ஆண்டவர் அவர்களுக்குக் கொடுப்பதாக ஏற்கெனவே அவர்கள் மூதாதையருக்கு உறுதியளித்திருந்த அந்தப் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை அவர்கள் காணக் கூடாதென ஆணையிட்டுக் கூறினார்.
7அழிந்தவர்களுக்குப் பதிலாக அவர்களின் பிள்ளைகளுக்கு யோசுவா விருத்தசேதனம் செய்தார். ஏனெனில், வழியில் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படவில்லை.
8எல்லா மக்களும் விருத்தசேதனம் செய்யப்பெற்று முடிந்ததும், அவர்கள் குணமாகும் வரையில் அங்கேயே பாளையத்தில் தங்கினர்.
9ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்” என்றார். ஆகவே, அந்த இடம் இந்நாள்வரை ‘கில்கால்’* என்று அழைக்கப்படுகின்றது.
10இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர்.
11பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர்.
12நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது.இஸ்ராயேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.
யோசுவா கண்ட காட்சி
13அச்சமயத்தில் யோசுவா எரிகோவில் இருந்தார். அப்போது அவர் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ! ஓர் ஆடவர் அவர் எதிரில் தோன்றினார். கையில் உருவிய கத்தியுடன் அவர்நின்று கொண்டிருந்தார். யோசுவா அவரிடம் சென்று, “நீர் எங்கள் பக்கமா? அல்லது எதிரிகள் பக்கமா?” என்று கேட்டார்.
14அவரோ, “இல்லை, நான் ஆண்டவரின் படைத்தலைவன் என்ற முறையில் இப்பொழுது வந்துள்ளேன்” என்றார். யோசுவா முகம் தரையில்பட வீழ்ந்து வணங்கி அவரிடம், “என் ஆண்டவர் தம் அடியானுக்கு என்ன கூறியுள்ளார்?” என்று கேட்டார்.
15ஆண்டவரின் படைத்தலைவர் யோசுவாவிடம், “உன் காலணியை உன் காலிலிருந்து அகற்று. ஏனெனில், நீ நிற்கும் இடம் புனிதமானது” என்றார். யோசுவாவும் அப்படியே செய்தார்.
5:6 எண் 14:28-35. 5:10 விப 12:1-13. 5:12 விப 16:35.