யோசுவாவின் இறுதிமொழிகள்

1ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு, அவர்களைச் சூழ்ந்திருந்த எதிரிகள் அனைவரிடமிருந்தும் அமைதி அளித்த பல நாள்களுக்குப்பின், யோசுவா மிகவும் வயதாகி முதுமை எய்தினார்.
2யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும், அவர்களுடைய முதியோர்களையும், தலைவர்களையும், நீதிபதிகளையும், அதிகாரிகளையும் அழைத்து அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “நான் வயதாகி முதுமை எய்திவிட்டேன்.
3உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை முன்னிட்டு வேற்றினத்தாருக்குச் செய்த அனைத்தையும் கண்டீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களுக்காகப் போரிட்டார்.
4பாருங்கள்! யோர்தானிலிருந்து மேற்கே பெருங்கடல்வரை நான் சிதறடித்த எல்லா நாடுகளையும் மீதியிருக்கின்ற நாடுகளையும் உங்கள் குலங்களுக்கு உரிமையாகக் கொடுத்துள்ளேன்.
5உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னிருந்து அவர்களைத் துரத்தி வெளியேற்றுவார். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கூறியபடி, அவர்கள் நிலங்களை உங்கள் உடைமைகளாக்கிக் கொள்வீர்கள்.
6மோசேயின் திருச்சட்டநூலில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் கைக்கொள்வதில் கவனமாயிருங்கள். அதனின்று வலப்புறமோ இடப்புறமோ விலகாதபடி உறுதிகொண்டிருங்கள்.
7உங்கள் நடுவில் எஞ்சியிருக்கும் இந்த வேற்றினத்தாருடன் சேராதிருங்கள். அவர்களுடைய தெய்வங்களின் பெயரைச் சொல்லாமலும், அவற்றின்மீது ஆணையிடாமலும், அவற்றுக்கு ஊழியம் செய்யாமலும், அவற்றை வணங்காமலும் இருப்பதில் உறுதியாக இருங்கள்.
8இந்நாள் வரை நீங்கள் செய்ததுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மட்டும் பற்றிக்கொள்ளுங்கள்.
9ஆண்டவர் மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்த வேற்றினங்களை உங்கள் முன்னிருந்து விரட்டினார். இந்நாள்வரை எவனாலும் உங்களை எதிர்த்து நிற்க இயலவில்லை.
10உங்களுள் ஒரே மனிதன் ஆயிரம் பேரை வெல்வான். ஏனெனில், தம் வாக்குறுதிக்கிணங்க உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்.
11உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்புகூர்வதில் மட்டும் கருத்தாயிருங்கள்.
12மாறாக, நீங்கள் வழிவிலகி இங்கு எஞ்சியுள்ள வேற்றினத்தாருடன் சேர்ந்துகொண்டு அவர்களுடன் கலப்புமணம் செய்து கொண்டால்,
13உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னிருந்து அவ்வேற்றினத்தவரைத் தொடர்ந்து விரட்டிக் கொண்டிருக்கமாட்டார் என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள். மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு கொடுத்த இந்த நல்ல நாட்டிலிருந்து நீங்கள் அழிந்துபோகும் வரையிலும் அவர்கள் உங்களுக்கு வலைப்பொறியாகவும் கண்ணிகளாகவும், உங்கள் பக்கங்களில் தொல்லையாகவும், உங்கள் கண்களில் முற்களாகவும் இருப்பார்கள்.
14இதோ! மண்ணில் தோன்றிய யாவரும் செல்லும் வழியில் இப்பொழுது நானும் செல்லவிருக்கிறேன். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த எல்லா நல்ல வாக்குறுதிகளிலும் ஒன்றுகூடத் தவறவில்லை என்பதை உங்கள் முழு இதயத்துடனும் முழு உள்ளத்துடனும் அறிந்து கொள்ளுங்கள். அவை அனைத்தும் உங்களுக்கு நிறைவேறின; ஒன்றுகூடத் தவறவில்லை.
15உங்கள் கடவுளாகிய ஆண்டவர், உங்களுக்குக் கொடுத்த எல்லா நல்ல வாக்குறுதிகளும், உங்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுபோலவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர், உங்களுக்கு அளித்த இந்த நல்ல நிலத்திலிருந்து உங்களை அழிக்கும்வரை உங்கள்மீது ஆண்டவர் எல்லாத் தீமைகளையும் விழச்செய்வார்.
16உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறி, நீங்கள் சென்று வேற்றுத் தெய்வங்களை வணங்கி, அவற்றுக்கு ஊழியம் செய்தால் ஆண்டவரின் சினம் உங்களுக்கெதிராகப் பற்றி எரியும். அவர் உங்களுக்கு அளித்த நல்ல நிலத்திலிருந்து விரைவில் அழிந்து போவீர்கள்.

23:10 இச 3:22; 32:30.