பிலிப்பியர் முன்னுரை


இத்திருமுகம் ஒற்றுமை பற்றியும் மகிழ்ச்சி பற்றியும் அருமையான கருத்துகளை எடுத்துக்கூறுகிறது; கிறிஸ்து இயேசுவின் வழியாய் அவற்றைப் பெற இயலும் என அழுத்தமாக எடுத்துரைக்கிறது.

ஆசிரியர்

பவுலது மிக உயர்ந்த சிந்தனைகள் பலவற்றைக் கொண்டுள்ள இத்திருமுகம் பவுல் எழுதியவற்றுள் மிகச் சிறந்த திருமுகமாகப் பலரால் கருதப்படுகிறது.

சூழலும் நோக்கமும்

பவுல் தம் இரண்டாம் நற்செய்திப் பயணத்தின்போது பிலிப்பியில் பலரை மனம் மாற்றினார். சிறைப்பிடிக்கப்பட்டு, வியத்தகு முறையில் சிறையிலிருந்து தப்பினார். மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போதும் அங்கு வந்தார் (திப 20:1,6).

பின்னாளில் பவுல் சிறைப்பட்டபோது பிலிப்பியர்கள் எப்பப்பிராதித்திடம் பணம் கொடுத்துப் பவுலுக்குப் பணிவிடை செய்யுமாறு அவரை அனுப்பினர் (4:18). எப்பப்பிராதித்து கடுமையாக நோயுற்றார். குணம் பெற்ற பின் பவுல் பிலிப்பியர் திருமுகத்தை எழுதி அவரிடம் கொடுத்து அனுப்பியிருக்க வேண்டும் (2:25-30). தமக்கு உதவி செய்த பிலிப்பியருக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அவர்கள் மகிழ்வோடும் மன உறுதியோடும் கிறிஸ்தவ நம்பிக்கையோடு இலங்கவேண்டும் என்பதற்காகவும் இந்நூலை எழுதுகிறார்.

அவர் எங்குச் சிறைப்பட்டிருந்தபோது இந்தத் திருமுகத்தை எழுதினார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. உரோமைச் சிறையிலிருந்து எழுதினார் என்பதே மரபுக் கருத்து. எனினும் அவரது மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போது அவர் எபேசிலிருந்து இதனை எழுதியிருக்க வேண்டும் என்றே பல அறிஞர்கள் கருதுகின்றனர்.

உள்ளடக்கம்

இத்திருமுகத்தில் பவுல் தன்னிலை விளக்கம் தருகிறார் (1:12-26; 4:10-19); தாம் சிறைப்பட்டதைப் பற்றி எடுத்துரைக்கிறார்; துன்பங்களில் பிலிப்பியர் மனவுறுதியோடு இருக்குமாறு கேட்டுக் கொள்கிறார் (1:27,30; 4:4); பிலிப்பியர் தாழ்மையுடனும் ஒற்றுமையுடனும் இருக்குமாறு வேண்டுகின்றார்; தம்மை மிகவும் தாழ்த்திப் பின்னர் தந்தையால் உயர்த்தப்பட்ட இயேசுவை முன்மாதிரியாகக் காட்டுகிறார் (2:1-11; 4:2-3).

திமொத்தேயுவையும் எப்பப்பிராதித்துவையும் பிலிப்பியத் திருச்சபை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பவுல் விரும்புகிறார் (2:19-30); யூதமயமாக்கலைக் குறித்துப் பிலிப்பியரை எச்சரிக்கிறார் (3:1-21); தமக்கு உதவி செய்த பிலிப்பியருக்கு நன்றி செலுத்துகிறார் (4:10-20).

பிலிப்பியர் திருமுகத்தில் பழைய ஏற்பாட்டு மேற்கோள்கள் இல்லை. இக்கடிதம் மகிழ்வின் கடிதமாகும். மகிழ்வைக் குறிக்கும் ‘காரா’ எனும் கிரேக்கச் சொல் 16 முறை இத்திருமுகத்தில் வருகிறது. கிறிஸ்துவின் தாழ்மை, உயர்வு பற்றிய கிறிஸ்தியல் பாடல் (2:5-11) மிகச் சிறப்பானது.

அமைப்பு

  1. முன்னுரை (வாழ்த்தும், நன்றியும் இறைவேண்டலும்) 1:1 - 11
  2. பவுலின் தன்னிலை விளக்கம் 1:12 - 26
  3. கிறிஸ்தவ வாழ்வு 1:27 - 2:18
  4. திமொத்தேயு, எப்பப்பிராதித்து குறித்த திட்டம் 2:19 - 30
  5. எதிரிகள் குறித்து எச்சரிக்கை 3:1 - 4:9
  6. பவுலும் பிலிப்பிய நண்பர்களும் 4:10 - 20
  7. முடிவுரை 4:21 - 23