கலாத்தியர் முன்னுரை


உரோமையருக்கு எழுதிய திருமுகம் போல் நம்பிக்கையினால் ஏற்புடைமை ஆதல் பற்றிச் சுருக்கமாகப் பேசும் இன்னொரு திருமுகம் கலாத்தியர் திருமுகமாகும். உரோமையர் திருமுகத்தை இத்திருமுகத்தின் விளக்கவுரையாகப் பலர் பார்க்கின்றனர். குறிப்பாக உரோ 1-8 அதிகாரங்கள் கலா 2:15-21 பகுதியின் விரிவுரையாக அமைகின்றன.

சூழலும் நோக்கமும்

கலாத்திய சபையில் யூதமயமாக்கும் கிறிஸ்தவர்கள் சிலர் புகுந்து பவுல் எடுத்துரைத்த போதனைக்கு எதிராகப் பேசினர். அவர்கள் திருச்சட்டத்தினால்தான் மீட்புப் பெற இயலும் என வாதிட்டனர்; பிற இனத்துக் கிறிஸ்தவர்கள் மோசேயின் சட்டமாகிய விருத்தசேதனம் போன்றவற்றைக் கடைப்பிடித்தாக வேண்டும் என்றனர். வேற்றினத்துக் கிறிஸ்தவர்களிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதற்காக சில சட்ட எதிர்பார்ப்புகளைப் பவுல் நீக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் யூதமயமாக்கும் கிறிஸ்தவர்களின் போதனையை முறியடிக்கக் கடுமையான முறையில் பவுல் இத்திருமுகத்தை எழுதுகிறார். இதனைக் கி.பி. 52-53 ஆண்டுகளில் எழுதியிருக்கலாம் என்பது பொதுவான கருத்து. எனினும் ஒரு சிலர் இத்திருமுகம் எருசலேம் சங்கத்துக்கு முன்பே, அதாவது கி.பி. 49க்கு முன்பே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

உள்ளடக்கம்

இத்திருமுகத்தின் முதற்பகுதியில் பவுல் தம்மைக் குறித்துப் பேசுகிறார். தாம் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர் என்பதை நிலைநாட்டப் பார்க்கிறார்; தம் திருத்தூதுப் பணிக்கான அழைப்பு எந்த மனித அதிகாரத்திடமிருந்தும் வரவில்லை, மாறாகக் கடவுளிடமிருந்தே வந்தது என்கிறார்; யூதரல்லாதார்க்கும் நற்செய்தி போதிப்பதே தம்முடைய பணி என அடித்துச் சொல்கிறார் (1-2).

நம்பிக்கையால் மட்டுமே நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகிறோம் என்கிறார் பவுல்; கிறிஸ்தவர் தூய்மையாக்கப்படுவது சட்டம் சார்பான செயல்களால் அல்ல, மாறாக நம்பிக்கையால் விளையும் கீழ்ப்படிதலால் என்கிறார்; கிறிஸ்துவைச் சார்ந்தோர் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார் (3-4).

கிறிஸ்தவ வாழ்வு கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையால் விளையும் அன்பின் அடிப்படையில் உள்ளது என அவர் விளக்குகிறார் (5-6).

அமைப்பு

 1. முன்னுரை
   வாழ்த்தும், நற்செய்தியும் 1: 1 - 10
 2. நிகழ்ச்சிப் பகுதி:
   பவுல் திருத்தூதராக அழைப்பு பெறல், எருசலேம் சங்கம், பவுல் அறிவிக்கும் நற்செய்தி 1:11 - 2:21
 3. கொள்கைப்பகுதி:
   நம்பிக்கையால் இறைவனுக்கு ஏற்புடைமை ஆதல் 3:1 - 4:31
 4. அறிவுரைப்பகுதி:
   கிறிஸ்தவரின் உரிமை வாழ்வு, நம்பிக்கை ஆகியவற்றை வாழ்ந்து காட்டுதல் 5:1 - 6:10
 5. முடிவுரை 6:11 - 18