7. பணிபற்றிய குற்றச்சாட்டுக்கு மறுமொழி

1உங்களை நேரில் காணும்போது தாழ்ந்து போகிறேன்; ஆனால், தொலையில் இருக்கும் போது துணிவுடன் செயல்படுகிறேன் என்றா நினைக்கிறீர்கள்? கிறிஸ்துவின் பணிவோடும் கனிவோடும் பவுலாகிய நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது:
2நான் உங்களோடு இருக்கும்போது என் துணிச்சலைக் காட்டத் தேவையில்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; என் துணிச்சலைக் காட்டமுடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. நாங்கள் உலகப் போக்கில் நடப்பதாகக் கருதும் சிலரிடம் அந்தத் துணிச்சலைக் காட்ட உறுதி கொண்டுள்ளேன்.
3நாங்கள் உலகில் தான் வாழ்கிறோம்; எனினும் எங்கள் போராட்டம் உலகைச் சார்ந்தது அல்ல.
4எங்கள் போராட்டத்தில் நாங்கள் பயன்படுத்தும் கருவிகள் உலகு சார்ந்தவை அல்ல; மாறாக அவை கடவுளின் வல்லமையால் அரண்களைத் தகர்த்தெறியக் கூடியவை. அவற்றைக் கொண்டு குதர்க்க வாதங்களையும்,
5கடவுளைப்பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்கும் அனைத்து மேட்டிமையையும் தகர்த்தெறிகிறோம். மனித எண்ணங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் வருமாறு கட்டாயப்படுத்துகிறோம்.
6நீங்கள் முழுமையாகக் கீழ்ப்படிந்த பிறகு கீழ்ப்படியாதவர்கள் யாவருக்கும் தக்க தண்டனை கொடுக்க நாங்கள் தயாராயிருக்கிறோம்.
7கண்திறந்து பாருங்கள். தாம் கிறிஸ்துவுக்குச் சொந்தம் என உரிமை கொண்டாடும் எவரும் சற்று சிந்தித்துப் பார்க்கட்டும். அவர் கிறிஸ்துவுக்குச் சொந்தமாயிருப்பது போன்று நாங்களும் கிறிஸ்துவுக்குச் சொந்தமே.
8எங்களுடைய அதிகாரத்தை உங்கள் அழிவுக்காக அல்ல, உங்கள் வளர்ச்சிக்காகவே ஆண்டவர் தந்திருக்கிறார். அவ்வதிகாரத்தைப் பற்றி நான் சற்று அதிகமாகவே பெருமை பாராட்டினாலும் அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை.
9திருமுகத்தின் வாயிலாக மட்டும் உங்களை அச்சுறுத்துகிறேன் என நான் நினைக்கவில்லை.
10“அவருடைய திருமுகங்கள் கடுமையானவை, ஆற்றல்மிக்கவை. ஆனால், அவர் நேரில் வந்தால் பார்க்கச் சகிக்காது; பேச்சும் எடுபடாது” என்கிறார்கள்.
11அப்படிச் சொல்பவர்கள், எங்கள் திருமுகங்களில் நாங்கள் வெளிப்படுவது போலவே நேரில் வரும்போதும் செயல்படுவோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
12சிலர் தங்களுக்குத் தாங்களே நற்சான்று கொடுக்கின்றனர். அவர்களோடு எங்களைச் சேர்த்துக் கொள்ளவோ ஒப்பிடவோ நாங்கள் துணியவில்லை. அவர்கள் தங்களையே அளவு கோலாகக் கொண்டு தங்களை அளவிட்டுக் கொள்கிறார்கள். தங்களைத் தங்களோடே ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். இது அறிவீனம் அல்லவா!
13ஆனால், நாங்கள் அளவுமீறிப் பெருமை கொள்வதில்லை; அதற்கென்று எங்களுக்கு ஓர் எல்லை இருக்கிறது. அது கடவுளே வரையறுத்த எல்லை. அந்த எல்லைக்கு உட்பட்டே உங்கள் நகர் வரை வந்தோம்.
14உங்கள் நகர் வரை நாங்கள் வராமல் இருந்திருந்தால் அளவுமீறிப் பெருமை கொண்டவர்கள் ஆவோம். ஆனால், கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க உங்கள் நகருக்கு முதன்முதல் வந்தவர்கள் நாங்களே.
15மற்றவர்களின் உழைப்பைக் காட்டி நாங்கள் பெருமை பாராட்டினால் அது அளவு மீறிச் செயல்படுவதாகும். நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை வளரவளர உங்களிடையே நாங்கள் ஆற்றும் பணி விரிவடையும்; கடவுள் வரையறுத்துக்கொடுத்த எல்லைக்குள்ளேயே இருப்போம் என்றே நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
16இவ்வாறு, உங்கள் எல்லைக்கு அப்பால் வாழ்வோரிடமும் நாங்கள் நற்செய்தியை அறிவிக்க முடியும். அப்போது மற்றவர்களுக்குக் குறிக்கப்பட்ட எல்லையை மீறிச் செயல்பட்டு அவர்கள் செய்த வேலையைக் குறித்து நாங்கள் பெருமை பாராட்டவும் இடம் இராது.

17“பெருமைபாராட்ட விரும்புகிறவர்

ஆண்டவரைக் குறித்தே

பெருமை பாராட்டட்டும்.”

18தமக்குத் தாமே நற்சான்று கொடுப்போர் அல்ல, மாறாக ஆண்டவரின் நற்சான்று பெற்றவரே ஏற்புடையவர் ஆவர்.

10:12 நீமொ 27:2. 10:17 எரே 9:24.