1நான் மானிடரின் மொழிகளிலும்

வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும்

அன்பு எனக்கில்லையேல்

ஒலிக்கும் வெண்கலமும்

ஓசையிடும் தாளமும் போலாவேன்.

2இறைவாக்கு உரைக்கும் ஆற்றல்

எனக்கு இருப்பினும், மறைபொருள்கள்

அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும்,
அறிவெல்லாம் பெற்றிருப்பினும்,

மலைகளை இடம்பெயரச்

செய்யும் அளவுக்கு நிறைந்த

நம்பிக்கை கொண்டிருப்பினும்

என்னிடம் அன்பு இல்லையேல்

நான் ஒன்றுமில்லை.

3என் உடைமையை எல்லாம்

நான் வாரி வழங்கினாலும்

என் உடலையே

சுட்டெரிப்பதற்கென* ஒப்புவித்தாலும்

என்னிடம் அன்பு இல்லையேல்

எனக்குப் பயன் ஒன்றுமில்லை.

4அன்பு பொறுமையுள்ளது;

நன்மை செய்யும்;

பொறாமைப்படாது;

தற்புகழ்ச்சி கொள்ளாது;

இறுமாப்பு அடையாது.

5அன்பு இழிவானதைச் செய்யாது;

தன்னலம் நாடாது;

எரிச்சலுக்கு இடம் கொடாது;

தீங்கு நினையாது.

6அன்பு தீவினையில் மகிழ்வுறாது;

மாறாக உண்மையில் அது மகிழும்.

7அன்பு அனைத்தையும்

பொறுத்துக் கொள்ளும்;

அனைத்தையும் நம்பும்;

அனைத்தையும்

எதிர்நோக்கி இருக்கும்;

அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.

8இறைவாக்கு உரைக்கும் கொடை

ஒழிந்துபோம்;

பரவசப்பேச்சு பேசும் கொடையும்

ஓய்ந்துபோம்;

அறிவும் அழிந்துபோம்.

ஆனால், அன்பு ஒருபோதும் அழியாது.

9ஏனெனில், நமது அறிவு

அரைகுறையானது;

நாம் அரைகுறையாகவே

இறைவாக்கும் உரைக்கிறோம்.

10நிறைவானது வரும் போது

அரைகுறையானது ஒழிந்துபோம்.

11நான் குழந்தையாய் இருந்தபோது

குழந்தையைப்போலப் பேசினேன்;

குழந்தையின் மனநிலையைப்

பெற்றிருந்தேன்;

குழந்தையைப்போல எண்ணினேன்.

நான் பெரியவனானபோது

குழந்தைக்குரியவற்றை

அறவே விட்டுவிட்டேன்.

12ஏனெனில், இப்போது நாம்

கண்ணாடியில் காண்பதுபோல்

மங்கலாய்க் காண்கிறோம்;

ஆனால் அப்போது

நாம் நேரில் காண்போம்.

இப்போது நான்

அரைகுறையாய் அறிகிறேன்;

அப்போது கடவுள்

என்னை அறிந்துள்ளதுபோல்

முழுமையாய் அறிவேன்.

13ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு,

அன்பு ஆகிய மூன்றுமே

நிலையாய் உள்ளன.

இவற்றுள் அன்பே தலைசிறந்தது.


13:2 மத் 17:20; 21:21; மாற் 11:23. 13:12 1 யோவா 3:2.
13:3 ‘பெருமையடைவதற்கென’ எனப் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகின்றது.