சிலைவழிபாடு

1சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர்.
2அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள்.
3அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர்.
4அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை.
5அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
6அவர்கள் தீயனவற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன.
7அவர்களுள் சிலரைப்போல நீங்களும் சிலைகளை வழிபடாதீர்கள். அவர்களைக் குறித்தே,

“மக்கள் அமர்ந்து உண்டு குடித்தனர்;

எழுந்து மகிழ்ந்து ஆடினர்”

என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது.
8அவர்களுள் சிலர் பரத்தைமையில் ஈடுபட்டனர். அதனால் ஒரே நாளில் இருபத்து மூவாயிரம் பேர் மடிந்தனர். அவர்களைப்போல் நாமும் பரத்தைமையில் ஈடுபடக்கூடாது.
9அவர்களுள் சிலர் ஆண்டவரைச்* சோதித்தனர். அதனால் பாம்பினால் கடிபட்டு அழிந்து போயினர். அவர்களைப்போல் நாமும் அவரைச் சோதிக்கக்கூடாது.
10அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது.
11அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன.
12எனவே, தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்.
13உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார்.
14எனவே, என் அன்புக்குரியவர்களே, சிலைவழிபாட்டை விட்டு விலகுங்கள்.
15உங்களை அறிவாளிகள் என மதித்துப் பேசுகிறேன். நான் சொல்வதைக் குறித்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
16கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா!
17அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.
18இஸ்ரயேல் மக்களின் சடங்கு முறைகளைப் பாருங்கள். பலிப்பொருட்களை உண்கிறவர்கள் பலிக்குப் படைக்கப்பட்ட பலிபீடம் குறிக்கும் கடவுளோடு உறவு கொள்ளவில்லையா?
19எனவே, சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை அல்லது சிலைகளைப் பொருட்படுத்த வேண்டும் என்றா சொல்லுகிறேன்?
20மாறாக, சிலைகளுக்குப் பலியிடப்பட்டவை கடவுளுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடப்பட்டவையாகும். நீங்கள் பேய்களோடு உறவுகொள்வதை நான் விரும்பவில்லை.
21நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்கு கொள்ள முடியாது.
22நாம் ஆண்டவருக்கு எரிச்சலூட்டலாமா? நாம் அவரைவிட வலிமைமிக்கவர்களா?

எல்லாவிதத்திலும் கடவுளை மாட்சிப்படுத்துங்கள்

23‘எல்லாவற்றையும் செய்ய உரிமையுண்டு’; ஆனால், எல்லாம் நன்மை தரக்கூடியவை அல்ல. ‘எல்லாவற்றையும் செய்ய உரிமையுண்டு’; ஆனால், எல்லாம் வளர்ச்சிதரக் கூடியவை அல்ல.
24எவரும் தன்னலம் நாடக்கூடாது; மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்.
25இறைச்சிக் கடையில் விற்கப்படும் எதையும் நீங்கள் உண்ணலாம்; கேள்விகள் எழுப்பி உங்கள் மனச்சான்றைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
26ஏனெனில்,

“மண்ணுலகமும் அதில் நிறைந்துள்ள

அனைத்தும் ஆண்டவருடையவை.”

27நம்பிக்கை கொள்ளாதவருள் ஒருவர் உங்களை உணவருந்த அழைக்கும்போது நீங்கள் அவரோடு செல்ல விரும்பினால், அவர் உங்களுக்குப் பரிமாறும் எதையும் உண்ணுங்கள்; கேள்விகள் எழுப்பி உங்கள் மனச்சான்றைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
28எவராவது உங்களிடம், ‘இது படையல் உணவு’ என்று சொன்னால் அவ்வாறு தெரிவித்தவரை முன்னிட்டும் மனச்சான்றை முன்னிட்டும் அதை உண்ண வேண்டாம்.
29உங்கள் மனச்சான்றை முன்னிட்டல்ல, மற்றவருடைய மனச்சான்றை முன்னிட்டே இதைச் சொல்கிறேன். ‘ஏன் எனது தன்னுரிமை மற்றவருடைய மனச்சான்றின் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டும்?’
30‘நான் நன்றியுடன் உணவருந்தினால், நன்றி கூறி அருந்திய உணவைக் குறித்து ஏன் பழிப்புரைக்கு ஆளாக வேண்டும்?’ என்று ஒருவர் கேட்கலாம்.
31அதற்கு நான் சொல்வது; நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்.
32யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள்.
33நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்.

10:1 விப 13:21,22; 14:22-29. 10:3 விப 16:35. 10:4 விப 17:6; எண் 20:11. 10:5 எண் 14:29,30. 10:6 எண் 11:4. 10:7 விப 32:6. 10:8 எண் 25:1-16. 10:9 எண் 21:5,6. 10:10 எண் 16:41-49. 10:16 மத் 26:26-28; மாற் 14:22-24; லூக் 22:19,20. 10:18 லேவி 7:6. 10:20 இச 32:17. 10:22 இச 32:21. 10:23 1 கொரி 6:12. 10:26 திபா 24:1; 50:12. 10:31 கொலோ 3:17; 1 பேது 4:11. 10:33 உரோ 15:2.
10:9 சில முக்கிய பாடங்களில் ‘கிறிஸ்து’ என்று காணப்படுகிறது.