பாவத்தைவிட்டு கிறிஸ்துவோடு இணைந்து வாழ்தல்

1அப்படியானால் என்ன சொல்வோம்? அருள் பெருகுவதற்காக நாம் பாவத்தில் நிலைத்திருக்கலாமா?
2ஒருபோதும் கூடாது. பாவத்தைப் பொறுத்தமட்டில் செத்துவிட்ட நாம் எவ்வாறு தொடர்ந்து பாவ வாழ்க்கை வாழ முடியும்?
3திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா?
4இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.
5அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்.
6நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு, பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும்.
7ஏனெனில், இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ?
8கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை.
9இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம்.
10அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார்.
11அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொருத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.
12ஆகவே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்தவிடாதீர்கள்.
13நீங்களோ உங்கள் உறுப்புக்களைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்; மாறாக, இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகளை அவரிடமே ஒப்படையுங்கள்.
14பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில், நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.

கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை நெறி

15அதனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டவர்களாய் இல்லாமல், அருளின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதால் நாம் பாவம் செய்யலாமா? ஒருபோதும் கூடாது.
16எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியும் அன்றோ? அப்படியிருக்க, நீங்கள் பாவத்திற்கு உங்களையே அடிமையாக்கினால் சாவீர்கள்; நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவீர்கள்.
17-18முன்பு பாவத்திற்கு அடிமைகளாய் இருந்த நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் அடங்கிய ஒழுக்க நெறியை உளமாரக் கடைப்பிடிக்கிறீர்கள். பாவத்தினின்று விடுதலை பெற்ற நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை நெறிக்கு அடிமைகளாயிருக்கிறீர்கள். அதற்காகக் கடவுளுக்கு நன்றி.
19நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு எளிய முறையில் பேசுகிறேன். முன்பு கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் கெட்ட நடத்தைக்கும் நெறிகேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை நீங்கள் அடிமையாக்கியிருந்தீர்கள். அதுபோல இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள்.
20நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாய் இருந்தபோது கடவுளுக்கு ஏற்புடையவற்றைச் செய்யக் கடமைப்பட்டிருக்கவில்லை.
21அப்போது நீங்கள் செய்த செயல்களை எண்ணி இப்போது நீங்களே வெட்கப்படுகிறீர்கள். அவற்றால் நீங்கள் கண்ட பயன் யாது? அவற்றின் முடிவு சாவு அல்லவா?
22ஆனால், இப்பொழுது, நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலைவாழ்வு.
23பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.

6:3 கலா 3:27. 6:4 கொலோ 2:12. 6:21-22 இச 30:15-20. 6:23 கலா 6:7-9; யாக் 1:15.