ஆபிரகாம் ஓர் எடுத்துக்காட்டு

1அப்படியானால், இதுகாறும் கூறியவை நம் இனத்தின் தந்தையாகிய ஆபிரகாமுக்கு எப்படிப் பொருந்தும்?
2தாம் செய்த செயல்களினால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால், பெருமை பாராட்ட அவருக்கு இடமுண்டு; ஆனால், கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை பாராட்ட இடமே இல்லை.
3ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன?

“ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை

கொண்டார்; அதைக் கடவுள்

அவருக்கு நீதியாகக் கருதினார்.”

4வேலை செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவதில்லை; அது அவர்கள் உரிமை.
5தம் செயல்கள்மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்றில்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரை, அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருகிறார்.
6அவ்வாறே, கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர் என்று தாவீது கூறியிருக்கிறார்:

7“எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ,

எவரது பாவம் மறைக்கப்பட்டதோ

அவர் பேறுபெற்றவர்.

8ஆண்டவர் எந்த மனிதரின் தீச் செயலைக்

கருத்தில் கொள்ளவில்லையோ

அவர் பேறு பெற்றவர்.”

9பேறுபெற்றோர் விருத்தசேதனம் செய்து கொண்டோர் மட்டுமா? செய்யாதோரும் கூடவா?

“ஆபிரகாம் ஆண்டவர்மீது

நம்பிக்கை கொண்டார்;

அதை ஆண்டவர் அவருக்கு

நீதியாகக் கருதினார்”

என்றோமே.
10அவர் எந்த நிலையில் இருந்தபோது கடவுள் அவ்வாறு கருதினார்? விருத்தசேனம் செய்துகொண்ட நிலையிலா? செய்துகொள்ளாத நிலையிலா? விருத்தசேதனம் செய்துகொண்ட நிலையில் அல்ல; செய்து கொள்ளாத நிலையில்தான்.
11விருத்தசேதனம் இல்லாத நிலையிலேயே அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளுக்கு ஏற்புடையவர் என்று கருதப்பட்டார்; அதை உறுதிப்படுத்தும் அடையாளமாக விருத்தசேதனத்தைப் பெற்றார். இவ்வாறு விருத்தசேதனம் இல்லாதிருந்தும், கடவுள்மீது நம்பிக்கை கொள்வதால் அவருக்கு ஏற்புடையவர்களாகக் கருதப்படும் அனைவருக்கும் அவர் தந்தையானார்.
12அதேபோல, விருத்தசேதனம் பெற்றிருந்தும், அதுவே போதுமென்றிருந்திடாமல் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும் அவர் தந்தையானார்; எப்படியெனில், நம் தந்தையாம் ஆபிரகாம் விருத்தசேதனம் பெறுமுன்பே நம்பிக்கை கொண்டிருந்ததுபோல, இவர்களும் நம்பிக்கை கொண்டவர்களாய் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார்கள்.

நம்பினோர்க்கே வாக்குறுதி பயன்தரும்

13உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது.
14ஏனெனில், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குத்தான் அந்த உரிமைச் சொத்து கிடைக்கும் எனின், நம்பிக்கை கொள்வது பொருளற்றதாகும்; அந்த வாக்குறுதியும் செல்லாததாகும்.
15திருச்சட்டம் இறைவனின் சினத்தை வருவிக்கிறது. சட்டம் இல்லையெனில் அதை மீறவும் இயலாது.
16ஆகவே ,கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு, வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் — திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப்போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் — உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை.
17ஏனெனில் “எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார்.
18“உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்” என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே, அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார்.
19தமக்கு ஏறத்தாழ நூறு வயது ஆகிவிட்டதால் தமது உடலும் சாராவுடைய கருப்பையும் செத்தவைபோல் ஆற்றலற்றுப் போய்விட்டதை எண்ணிப் பார்த்தபோதுகூட, அவர் நம்பிக்கையில் உறுதி தளரவில்லை;
20கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவே இல்லை; நம்பிக்கையில் அவர் மேலும் வலுப் பெற்றார்; கடவுளைப் பெருமைப்படுத்தினார்.
21தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர் என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார்.
22ஆகவே, “அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.”
23“நீதியாகக் கருதினார்” என்று எழுதியுள்ளது அவரைமட்டும் குறிக்கவில்லை;
24நம்மையும் குறிக்கின்றது; இறந்த நம் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் அவ்வாறே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம்.
25நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச்செய்தார்.

4:3 தொநூ 15:6; கலா 3:6; யாக் 2:23. 4:7 திபா 32:1,2. 4:11 தொநூ 17:10; யோவா 7:22. 4:13 தொநூ 17:4-6; 22:17-18; கலா 3:29. 4:14 கலா 3:18. 4:15 கலா 3:10. 4:16 கலா 3:7. 4:17 தொநூ 17:5. 4:18 தொநூ 15:5. 4:19 தொநூ 17:17. 4:25 எசா 53:4,5.