திருத்தூதர் பணிகள் முன்னுரை


ஆசிரியர்

திருத்தூதர் பணிகள் என்னும் நூல் லூக்கா நற்செய்தி நூலின் தொடர்ச்சியான இரண்டாவது பகுதி (1:1). ஆகவே மூன்றாவது நற்செய்தி நூலின் ஆசிரியரே இந்நூலின் ஆசிரியர் என்னும் மரபு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்நூலின் பிந்திய பகுதியில் ஆசிரியர் தாமே கண்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதாக எழுதுகிறார். ‘நாங்கள் பயணம்செய்தோம்’, ‘நாங்கள் தங்கியிருந்தோம்’, ‘நாங்கள் போதித்தோம்’ போன்ற பகுதிகள் இந்நூலின் ஆசிரியர் பவுலின் உடன்பணியாளர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன (16:10-17; 20:5-15; 21:1-18; 27:1-28:16). (ஆசிரியரைப்பற்றிய பிற குறிப்புகளை லூக்கா நற்செய்தி நூல் முன்னுரையில் காண்க).

சூழல்

கிறிஸ்துவோ அவர் வழியைப் பின்பற்றுபவர்களோ உரோமை அரசுக்கு எதிராகக் குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என விளக்கமளிக்கவும், பிற இனத்தாருக்குத் திருத்தூதராகத் தேர்ந்துகொள்ளப்பட்ட பவுல் யூதருக்கு எதிராகப் பெருந்தவறு ஒன்றும் செய்யவில்லை என்று எடுத்துரைக்கவும் இந்நூலை ஆசிரியர் எழுதுகிறார். இச்சூழலில் நற்செய்திப் பணியும் இறைவார்த்தைப் போதனையும் சிறப்பிடம் பெறுகின்றன. ஆவியார் துணையுடன் கடவுளது மீட்புத் திட்டத்துக்குச் சான்று பகர்வது திருச்சபையின் கடமை என்பது தெளிவாகிறது. திருத்தூதர்கள் - குறிப்பாகப் பேதுருவும் பவுலும் - எவ்வாறு திருத்தொண்டாற்றினர் என்பது விளக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. பவுல் உரோமையில் சான்று பகர்ந்து கொண்டிருப்பதே நூலின் முடிவுரையாக அமைகின்றது.

உள்ளடக்கம்

“தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” (1:8) என்னும் உயிர்த்தெழுந்த ஆண்டவரின் கூற்றே இந்நூலுக்கு மையச் செய்தியாக அமைகின்றது. யூதரும் சமாரியரும் கிரேக்கரும் பிற இனத்தவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு ஆண்டவரின் சாட்சிகளாகின்றனர். இறைவார்த்தைப் பணி வளர்ந்து பெருக, எங்கும் திருச்சபைகள் நிறுவப்படுகின்றன. எனவே, இந்நூலைத் “தூய ஆவியின் பணிகள்” எனவும் அழைக்கலாம். பேதுரு, ஸ்தேவான், பவுல் ஆகியோரின் அருளுரைகள் இயேசு கிறிஸ்து பற்றிய கிறிஸ்தியல் விளக்கங்களை அளிக்கின்றன. பேதுரு, பவுல் ஆகியோரின் மனமாற்ற அனுபவங்களும், எருசலேம் சங்கமும் உலகெங்கும் உருவாகும் பொதுவான திருச்சபைக்கு வித்திடுகின்றன. கிறிஸ்தவர்களைப் பற்றித் தொகுத்துக் கூறுமிடங்களில் நட்புறவு, அப்பம்பிடுதல், இறைவேண்டல், சான்றுபகர்தல், தொண்டாற்றுதல், அன்புப் பகிர்வு (11:27-30; 2:42-47; 4:32-37) போன்றவற்றைச் சீடர்களின் தனித்தன்மைகளாக இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.

அமைப்பு

  1. முன்னுரை (விண்ணேற்றம்) 1:1 - 11
  2. எருசலேமில் சான்று பகர்தல் 1:12 - 8:3
  3. யூதேயா, சமாரியாவில் சான்று பகர்தல் 8:4 - 12:25
  4. உலகின் கடையெல்லைவரை சான்று பகர்தல் 13:1 - 28:31