திருத்தொண்டர்களை நியமித்தல்
1அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.
2எனவே, பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, “நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல.
3ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம்.
4நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்” என்று கூறினர்.
5திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து
6அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்.
7கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.
ஸ்தேவான் கைது செய்யப்படல்
8ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார்.
9அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக்கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவனோடு வாதாடத் தொடங்கினர்.
10ஆனால், அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.
11பின்பு அவர்கள், “இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர்.
12அவ்வாறே, அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்து வந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்;
13மேலும், பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், “இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசி வருகிறான்” என்று கூறினார்கள்.
14மேலும் அவர்கள், “நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்” என்றார்கள்.
15தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப் பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.
6:2 விப 18:17-23. 6:3 1 திமொ 3:8-10. 6:6 1 திமொ 4:14. 6:10 லூக் 24:15.