பவுல் உரோமைக்குச் செல்லுதல்

1நாங்கள் கப்பலேறி இத்தாலியா செல்ல வேண்டுமெனத் தீர்மானித்தவுடன் அவர்கள் பவுலையும் வேறுசில கைதிகளையும் அகுஸ்து படைப் பிரிவைச் சேர்ந்த யூலியு என்னும் நூற்றுவர் தலைவரிடம் ஒப்படைத்தனர்.
2நாங்கள் அதிராமித்தியக் கப்பலொன்றில் ஏறினோம். அது ஆசிய மாநிலத்துத் துறைமுகங்களுக்குச் செல்லவிருந்தது. எங்களுடன் தெசலோனிக்காவைச் சேர்ந்த அரிஸ்தர்க்கு என்னும் மாசிதோனியரும் இருந்தார்.
3மறுநாள் நாங்கள் சீதோன் துறைமுகம் போய்ச் சேர்ந்தோம். யூலியு பவுலை மனித நேயத்துடன் நடத்தினார். அவர் தம் நண்பர்களிடம் செல்லவும் அவர்கள் அவரைக் கவனித்துக் கொள்ளவும் யூலியு அனுமதித்தார்.
4அங்கிருந்து நாங்கள் கப்பலேறி, எதிர்க்காற்று வீசியபடியால் சைப்பிரசு தீவின் பாதுகாப்பான பகுதி வழியாகச் சென்றோம்;
5பின் சிலிசியா, பம்பிலியா பகுதிகளை ஒட்டியுள்ள ஆழ்கடலைக் கடந்து லீக்கியா நாட்டின் மீரா நகர் வந்து சேர்ந்தோம்.
6நூற்றுவர் தலைவர் அங்கே இத்தாலியா செல்லும் அலக்சாந்திரியக் கப்பலொன்றையும் கண்டு அதில் எங்களெல்லாரையும் ஏற்றினார்.
7பல நாள்கள் நாங்கள் மெதுவாகப் பயணம் செய்தோம்; அரும்பாடுபட்டுக் கினிதுவுக்கு எதிரே வந்தோம். எதிர்க்காற்று வீசியபடியால் தொடர்ந்து செல்ல முடியாமல் சல்மோன் முனையைக் கடந்து கிரேத்துத் தீவின் பாதுகாப்பான பகுதி வழியாகச் சென்றோம்;
8பின் அரும்பாடுபட்டுக் கரை ஓரமாகப் பயணம் செய்து இலசயா பட்டணத்துக்கு அருகிலுள்ள “செந்துறை”* என்னுமிடம் வந்து சேர்ந்தோம்.
9இவ்வாறு பல நாள்கள் கழிந்தன. நோன்பு நாளும் ஏற்கெனவே கடந்துவிட்டது. அதன்பிறகு கப்பலில் பயணம் செய்வது ஆபத்தானது என்று பவுல் ஆலோசனை கூறினார்.
10அவர் அவர்களைப் பார்த்து, “நண்பர்களே! இக்கப்பல் பயணம் கப்பலுக்கும் அதிலுள்ள சரக்குகளுக்கும் மட்டுமல்ல, நம் உயிருக்கும் கூட ஆபத்தானது; பெருங்கேட்டை விளைவிக்கக் கூடியது” என்று கூறினார்.
11ஆனால், நூற்றுவர் தலைவர் பவுல் கூறியவற்றை நம்பாமல் கப்பல் தலைவரும் கப்பலோட்டுநரும் கூறியதையே நம்பினார்.
12அந்தத் துறைமுகம் குளிர்காலத்தில் தங்க ஏற்றதாயில்லை. ஆகவே, பெரும்பான்மையோர் அங்கிருந்து கப்பலேறி எப்படியாவது குளிர்காலத்தைச் செலவிட பெனிக்சு வந்து சேர்ந்து விட வேண்டும் என்று விரும்பினர். கிரேத்துத் தீவின் இத்துறைமுகம் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கி அமைந்துள்ளது.

கடலில் பேய்ப்புயல்

13தென்றல் காற்று வீசியபோது எங்களது நோக்கம் கைகூடியது என எண்ணி நங்கூரத்தைத் தூக்கிவிட்டு கிரேத்துத் தீவு கரையோரமாகச் சென்றோம்.
14சிறிது நேரத்தில் “வாடைக் கொண்டல்”* என்னும் பேய்க் காற்று வீசத் தொடங்கியது.
15கப்பல் அதில் அகப்பட்டுக் கொண்டதால் காற்று வீசிய திசைக்கு எதிராக அதைச் செலுத்த முடியவில்லை; எனவே, காற்று வீசிய திசையிலேயே கப்பலோடு அடித்துச் செல்லப்பட்டோம்.
16கவுதா என்னும் சிறு தீவின் பாதுகாப்பான பகுதியில் கப்பல் செல்லும்போது கப்பலின் பின்னால் இணைக்கப்பட்டுள்ள படகை அரும்பாடுபட்டுக் கட்டுப்படுத்த முடிந்தது.
17அவர்கள் அதைக் தூக்கிக் கப்பலில் வைத்த பின் வடத்தால் கப்பலை இறுகக் கட்டினார்கள். கப்பல் புதைமணலில்* விழுந்துவிடாதபடி, கப்பற்பாயை இறக்கிக் காற்று வீசிய திசையிலேயே அடித்துச் செல்ல விட்டோம்.
18புயலால் நாங்கள் மிகவும் அலைக்கழிக்கப்பட்டதால் மறுநாள் கப்பலிலுள்ள சரக்குகளை அவர்கள் கடலில் எறியத் தொடங்கினார்கள்.
19மூன்றாம் நாளில் கப்பலின் தளவாடங்களை அவர்கள் தங்கள் கையாலேயே எடுத்துக் கடலில் வீசினார்கள்.
20கதிரவனோ, விண்மீன்களோ பல நாள்களாய்த் தென்படவில்லை. கடும்புயல் வீசி மழை பெய்து கொண்டிருந்தது. இனி தப்பிப் பிழைப்போம் என்னும் எதிர்நோக்கே எங்களுக்குச் சிறிதும் இல்லாமல் போய்விட்டது.
21பல நாள்களாக் கப்பலில் இருந்தோர் எதுவும் உண்ணாமலிருந்தனர். பவுல் அவர்கள் நடுவில் எழுந்து நின்று கூறியது: “நண்பர்களே! நீங்கள் நான் சொல்வதைக் கேட்டுக் கிரேத்துத் தீவை விட்டுப் புறப்படாமலிருந்திருக்க வேண்டும். அப்போது இந்தக் கேடும் இழப்பும் நேர்ந்திருக்காது.
22இப்போதும் நீங்கள் மனஉறுதியுடன் இருக்குமாறு உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். கப்பலுக்குத்தான் இழப்பு நேரிடுமேயன்றி உங்களுள் எவருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படாது.
23என்மேல் உரிமையுடையவரும் நான் வழிபடுபவருமான கடவுளின் தூதர் நேற்றிரவு என்னிடம் வந்து,
24“பவுலே, அஞ்சாதீர்! நீர் சீசர் முன்பாக விசாரிக்கப்படவேண்டும். உம்மோடுகூடக் கப்பலிலுள்ள அனைவரையும் கடவுள் உம் பொருட்டுக் காப்பாற்றப் போகிறார்” என்று கூறினார்.
25ஆகவே நண்பர்களே! மன உறுதியுடனிருங்கள். நான் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அவர் என்னிடம் சொன்னவாறே நடக்கும்.
26எனினும் நாம் ஒரு தீவில் தள்ளப்படுவது உறுதி.”
27பதினான்காம் நாள் இரவு வந்தபோது நாங்கள் ஆதிரியா கடலில் அங்குமிங்குமாக அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தோம். நள்ளிரவில் நாங்கள் ஒருகரைப் பக்கம் வந்து கொண்டிருப்பதாகக் கப்பலோட்டுநர்கள் நினைத்தார்கள்.
28அவர்கள் ஆழத்தை அளந்து பார்த்து இருபது ஆள் ஆழம்* என்று கண்டார்கள். சற்று தூரம் சென்று மீண்டும் அளந்து பார்த்து பதினைந்து ஆள் ஆழம் எனக் கண்டார்கள்.
29பாறையில் எங்காவது மோதி விடுவோமோ என அவர்கள் அஞ்சிக் கப்பலின் பின்பகுதியிலிருந்து நான்கு நங்கூரங்களை இறக்கி எப்போது விடியுமோ என ஆவலோடு காத்திருந்தார்கள்.
30கப்பலோட்டுநர்கள் கப்பலில் இருந்து தப்பி ஓட வழி தேடினார்கள். கப்பலின் முன் புறத்தில் இருந்து நங்கூரங்களை இறக்கப் போவதுபோல் நடித்துக் கப்பலிலிருந்த படகைக் கடலில் இறக்கினார்கள்.
31பவுல் நூற்றுவர் தலைவரையும் படைவீரர்களையும் பார்த்து, “இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப்பிழைக்க முடியாது” என்று கூறினார்.
32ஆகவே, படைவீரர்கள் படகைக் கட்டியிருந்த கயிறுகளை வெட்டி அது கடலில் அடித்துச் செல்லப்படவிட்டுவிட்டார்கள்.
33பொழுது விடியம் வேளை வந்தபோது பவுல் அனைவரையும் கூப்பிட்டு அவர்களை உணவருந்தமாறு வேண்டிக் கொண்டார். “இன்றோடு பதினான்கு நாள்காளாக நீங்கள் தொடர்ந்து எதுவும் உண்ணாமல் பட்டினிகிடந்து என்ன நிகழுமோவெனக் காத்திருக்கிறீர்களே!
34எனவே, நீங்கள் உணவருந்தும்படி கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் நீங்கள் உயிர்பிழைக்க முடியும். ஏனெனில், உங்களுள் எவர் தலையிலிருந்தும் ஒருமுடி கூட விழாது” என்றார்.
35இவற்றைக் கூறியபின் பவுல் அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி கூறி, அதைப் பிட்டு அனைவர் முன்னிலையிலும் உண்ணத் தொடங்கினார்.
36உடனே அனைவரும் மனஉறுதி பெற்று உணவுண்டனர்.
37கப்பலில் மொத்தம் இருநூற்று எழுபத்தாறு பேர் இருந்தோம்.
38அனைவரும் வயிறார உண்டதும் அவர்கள் கப்பலில் இருந்த கோதுமையைக் கடலில் தூக்கி எறிந்து அதன் பளுவைக் குறைத்தார்கள்.

கப்பல் புயலில் சிக்குதல்

39பொழுது விடிந்தபோது தாங்கள் இருந்த இடம் எதுவென்று அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், ஏதோ மணல்கரையுள்ள வளைகுடாப்பகுதி வருகிறதென்று கண்டு, முடிந்தால் கப்பலைக் கரையில் சேர்க்கலாமென்று அவர்கள் விரும்பினார்கள்.
40எனவே, நங்கூரங்களை அவிழ்த்து அவற்றைக் கடலில் விட்டு விட்டார்கள்; அதே வேளையில் சுக்கான்களின் கயிறுகளையும் தளர்த்தினார்கள்; காற்று வீச்சுக்கேற்ப முன்பாயை உயர்த்திக் கட்டிக் கப்பலைக் கரையை நோக்கிச் செலுத்தினார்கள்;
41ஆனால், கப்பல் நீரடி மணல் திட்டையில் மோதியது. கப்பலின் முன் பகுதி புதைந்து அசையாமல் இருந்தது. பின்பகுதி அலைகளின் வேகத்தால் உடைந்து போயிற்று.
42கைதிகளில் எவரும் நீந்தித் தப்பிவிடக் கூடாதென்று படைவீரர்கள் அவர்களைக் கொன்றுவிட திட்டமிட்டார்கள்.
43நூற்றுவர் தலைவர் பவுலைக் காப்பாற்ற விரும்பி அவர்கள் திட்டத்தை நிறைவேற்றவிடவில்லை. எனவே, நீந்தத் கூடியவர்கள் கடலில் குதித்து முதலில் கரைசேரவும்.
44மற்றவர்கள் பலகைகளையாவது கப்பலின் உடைந்த துண்டுகளையாவது பற்றிக் கொண்டு கரைசேரவும் ஆணை பிறப்பித்தார். இவ்வாறு எல்லாரும் பாதுகாப்பாய்க் கரை சேர்ந்தார்கள்.

27:8 ‘செந்துறை’ என்பது ‘கலோயிலிமெனசு’ என்னும் கிரேக்க பெயரின் தமிழாக்கம். 27:14 ‘வாடைக் கொண்டல்’ என்பது ‘யூரக்கிலோன்’ என்னும் கிரேக்க பெயரின் தமிழாக்கம். 27:17 புதை மணல் என்பது சீர்த்தி என்னும் கிரேக்க பெயரின் தமிழாக்கம். இப்புதை மணல் லிபியா கடல் பகுதியில் உள்ளது. 27:28 ‘ஆள் ஆழம்’ என்பதன் கிரேக்க சொல் ‘ஒர்கியா’ ஆகும்.