சீசரின் விசாரணையை பவுல் நாடுதல்

1பெஸ்து, மாநிலத் தலைவராக பதவியேற்று மூன்று நாள் ஆன பிறகு செசரியாவிலிருந்து எருசலேம் சென்றார்.
2-3தலைமைக் குருக்களும் யூத முதன்மைக் குடிமக்களும் பவுலுக்கு எதிராக அவரிடம் முறையிட்டுத் தங்களுக்குத் தயவு காட்டிப் பவுலை மீண்டும் எருசலேமுக்குக் கொண்டுவருமாறு வேண்டிக் கொண்டார்கள்; ஏனெனில், வழியில் அவரைக் கொன்றுவிட சூழ்ச்சி செய்திருந்தார்கள்.
4பெஸ்து அவர்களைப் பார்த்து, “பவுல் செசரியாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; நானும் விரைவில் அங்குச் செல்லவிருக்கிறேன்.
5உங்கள் தலைவர்கள் என்னுடன் வந்து அவரிடம் ஏதாவது தவறு இருந்தால் அவர்மீது குற்றம் சுமத்தட்டும்” என்றார்.
6பெஸ்து மேலும் எட்டு அல்லது பத்து நாள்கள் தங்கிவிட்டுச் செசரியாவுக்குத் திரும்பிச் சென்றார். மறுநாள் அவர் நடுவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு பவுலைக் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தார்.
7பவுல் வந்து சேர்ந்ததும், எருசலேமிலிருந்து வந்திருந்த யூதர் அவரைச் சூழ நின்று, தங்களால் மெய்ப்பிக்க முடியாத பல பெருங் குற்றங்களை அவர்மீது சுமத்தினார்கள்.
8“நான் யூதருடைய திருச்சட்டத்துக்கோ, கோவிலுக்கோ, சீசருக்கோ எதிராகத் தவறு எதுவும் செய்யவில்லை” என்று பவுல் தம் நிலையை விளக்கினார்.
9பெஸ்து யூதரின் நல்லெண்ணத்தைப் பெற விரும்பிப் பவுலைப் பார்த்து, “நீர் எருசலேம் வந்து அங்கே இந்தக் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட விரும்புகிறீரா?” எனக் கேட்டார்.
10பவுல் அவரிடம், “நான் சீசருடைய நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்; அங்குதான் எனக்குத் தீர்ப்பு வழங்கப்படவேண்டும். நான் யூதருக்கு எதிராக எந்தத் தீங்கும் செய்யவில்லை. இது உமக்கு நன்றாகத் தெரியும்.
11நான் மரண தண்டனைக்குரிய குற்றம் ஏதாவது செய்திருந்தால் அத்தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், இவர்கள் என்மீது சுமத்தும் குற்றச் சாட்டுகளில் உண்மை எதுவும் இல்லையெனில் என்னை யாரும் இவர்களிடம் ஒப்பவிக்க முடியாது. சீசரே என்னை விசாரிக்க வேண்டும்” என்றார்.
12பின் பெஸ்து தன் ஆலோசகருடன் கலந்து பேசி, “நீர் உம்மை சீசர் விசாரிக்க வேண்டும் என்று கூறினீர். எனவே, நீர் சீசரிடமே செல்லும்” என்றார்.

அகிரிப்பா பெர்னிக்கியிடம் பவுல் கொண்டுவரப்படுதல்

13சில நாள்களுக்குப் பின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தனர்.
14அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது பெஸ்து பவுலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்; “பெலிக்சு கைதியாக விட்டுச் சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார்.
15நான் எருசலேமிலிருந்தபோது தலைமைக் குருக்களும், யூதரின் மூப்பர்களும் அவரைப்பற்றிய வழக்கை என்னிடம் தெரிவித்து அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.
16நான் அவர்களைப் பார்த்து, “குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் குற்றம் சாட்டியவர்க்கு முன் நின்று தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப் பற்றி விளக்குவதற்கான வாய்பைப் பெற வேண்டும். அதற்குமுன் அவருக்குத் தீர்ப்பு அளிப்பது உரோமையரின் வழக்கமல்ல” என்று கூறினேன்.
17எனவே, அவர்கள் இங்கே வந்தபோது, சற்றும் காலம் தாழ்த்தாமல் மறுநாளிலேயே நான் நடுவர் இருக்கையில் அமர்ந்து அவரை என்னிடம் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தேன்.
18குற்றம் சுமத்தியவர்கள் எழுந்து பேசியபோது நான் நினைத்திருந்த கொடிய குற்றம் எதுவும் அவர்மீது சுமத்தவில்லை.
19அவர்கள் அவருக்கு எதிராகச் சொன்னதெல்லாம் தங்கள் சமயத்திலுள்ள சில கருத்து வேறுபாடுகளாகத்தான் இருந்தன. இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள். இந்த இயேசு உயிரோடு இருப்பதாக பவுல் சாதித்தார்.
20இக்கருத்துச்சிக்கல்களைப் பற்றிக் கேட்டதும் நான் குழம்பிப்போய், “நீர் எருசலேமுக்கு வருகிறீரா? அங்கு இவை பற்றி விசாரிக்கப்பட விரும்பகிறீரா?” எனக் கேட்டேன்.
21பவுல், பேரரசரே விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும் வரை தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆதலால், இவரைச் சீசரிடம் அனுப்பும்வரை காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தேன்.”
22அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “அவர் பேசுவதை நானும் நேரில் கேட்க விரும்புகிறேன்” என்றார். அதற்குப் பெஸ்து, “நாளை நீர் கேட்கலாம்” என்றார்.
23மறுநாளில் அகிரிப்பாவும், பெர்னிக்கியுவும் மிகுந்த பகட்டு ஆடம்பரத்துடனும் ஆயிரத்தவர் தலைவர்களுடனும், நகரத்தின் உயர்குடி மக்களோடும் அவைக் கூடத்திற்கு வந்தார்கள். பெஸ்துவின் ஆணைப்படி பவுலும் அங்குக் கூட்டிக்கொண்டு வரப்பட்டார்.
24அப்போது பெஸ்து, “அகிரிப்பா அரசே! எம்மோடு இங்குக் குழுமியிருக்கும் மக்களே! இவரைப் பாருங்கள். எருசலேமிலும், இங்கும் யூதரனைவரும் திரண்டு வந்து இவருக்கு எதிராக என்னிடம் முறையிட்டு, ‘இவன் இனியும் உயிரோடு இருக்கக்கூடாது’ என்று கூச்சலிட்டனர்.
25நான் இவர் மரணதண்டனைக்குரிய குற்றமொன்றையும் செய்யவில்லை என்பதைக் கண்டேன். ஆயினும் ,இவர் தம்மைப் பேரரசரே விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அவரிடமே அனுப்பத் தீர்மானித்தேன்.
26இவரைப் பற்றிப் பேரரசரருக்கு திட்டவட்டமாய் எழுத என்னிடத்தில் எதுவுமில்லை. எனவே, அவரை இங்கே உங்கள் முன்னிலையிலும், குறிப்பாக, அகிரிப்பா அரசே! உமக்கு முன்பாகவும் கூட்டிக் கொண்டு வந்துள்ளேன். நாம் அவரை விசாரித்தபின் எனக்கு எழுதுவதற்கு ஏதாவது கிடைக்குமென நினைக்கிறேன்.
27ஒரு கைதியின் மேல் சாட்டப்பட்டுள்ள குற்றங்களைக் குறிப்பிடாமல் அவனை அனுப்புவது அறிவீனம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார்.