9இயேசு அவரிடம் கூறியது:
“பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்?
10நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.
11நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.
12நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
13நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார்.
14நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.
15நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.
16“உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.
17அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.
18நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்.
19இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்.
20நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
21என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.”