நறுமணத் தைலம் பூசுதல்
(மத் 26:6-13; மாற் 14:3-9)

1பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார்.
2அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார்.
3மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம்* கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது.
4இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து,
5“இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான்.
6ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு.
7அப்போது இயேசு,
“மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.
8
ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால், நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை”
என்றார்.

இலாசரைக் கொலை செய்யத் திட்டம்

9இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச் செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள்.
10ஆதலால், தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள்.
11ஏனெனில், இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல்
(மத் 21:1-11; மாற் 11:1-11; லூக் 19:28-40)

12மறுநாள் திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று,
13குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய்,

“ஓசன்னா!* ஆண்டவரின் பெயரால்

வருகிறவர் போற்றப்பெறுக!

இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!”

என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.
14-15இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார்.

“மகளே சீயோன், அஞ்சாதே!

இதோ! உன் அரசர் வருகிறார்;

கழுதைக் குட்டியின்மேல்,

ஏறி வருகிறார்”

என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார்.
16அந்நேரத்தில் அவருடைய சீடர்கள் இச்செயல்களின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. அவரைப்பற்றி மறைநூலில் எழுதப்பட்டிருந்தவாறே இவையனைத்தும் நிகழ்ந்தன என்பது இயேசு மாட்சி பெற்ற பிறகே அவர்கள் நினைவுக்கு வந்தது.
17இறந்து கல்லறையில் வைக்கப்பட்டிருந்த இலாசாரை இயேசு கூப்பிட்டு உயிர்த்தெழச் செய்தபோது அவரோடு இருந்த மக்கள் நடந்ததைக் குறித்துச் சான்று பகர்ந்தனர்.
18இயேசு இந்த அரும் அடையாளத்தைச் செய்தார் என்று கேள்வியுற்றதால் மக்கள் திரளாய் அவரை எதிர்கொண்டு சென்றார்கள்.
19இதைக் கண்ட பரிசேயர், “பார்த்தீர்களா! நம் திட்டம் எதுவும் பயனளிக்கவில்லை. உலகமே அவன் பின்னே போய்விட்டது” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

கிரேக்கர் இயேசுவைக் காண விரும்புதல்

20வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.
21இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று கேட்டுக் கொண்டார்கள்.
22பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.
23இயேசு அவர்களைப் பார்த்து,
“மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
24கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
25தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.
26
எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்”
என்றார்.

மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்

27மேலும் இயேசு,
“இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ‘தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்’ என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.
28
தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்”
என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், “மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்” என்று ஒலித்தது.
29அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, “அது இடிமுழக்கம்” என்றனர். வேறு சிலர், “அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு” என்றனர்.
30இயேசு அவர்களைப் பார்த்து,
“இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.
31இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.
32
நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்”
என்றார்.
33தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
34மக்கள் கூட்டத்தினர் அவரைப் பார்த்து, “மெசியா என்றும் நிலைத்திருப்பார் எனத் திருச்சட்ட நூலில் கூறியுள்ளதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அப்படியிருக்க, மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும் என நீர் எப்படிச் சொல்லலாம்? யார் இந்த மானிடமகன்?” என்று கேட்டனர்.
35இயேசு அவர்களிடம்,
“இன்னும் சிறிது காலமே ஒளி உங்களோடு இருக்கும். இருள் உங்கள்மேல் வெற்றி கொள்ளாதவாறு ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்து செல்லுங்கள். இருளில் நடப்பவர் எங்கே செல்கிறார் என்பது அவருக்குத் தெரியாது.
36
ஒளி உங்களோடு இருக்கும்போதே ஒளியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது ஒளியைச் சார்ந்தவர்கள் ஆவீர்கள்”
என்றார். இப்படிச் சொன்னபின் இயேசு அவர்களிடமிருந்து மறைவாகப் போய்விட்டார்.
37அவர்கள் முன் இயேசு இத்தனை அரும் அடையாளங்களைச் செய்திருந்தும் அவர்கள் அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

38“ஆண்டவரே, நாங்கள்

அறிவித்ததை நம்பியவர் யார்?

ஆண்டவரின் ஆற்றல்

யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?”

என்ற இறைவாக்கினர் எசாயாவின் கூற்று இவ்வாறு நிறைவேறியது.

39-40“அவர்கள் கண்ணால் காணாமலும்

உள்ளத்தால் உணராமலும்,

மனம்மாறிக் குணமாகாமலும்

இருக்கும்படி அவர்களுடைய

கண்ணை மூடச்செய்தார்.

உள்ளத்தை மழுங்கச் செய்தார்”

என்பது அவர்களால் நம்பமுடியாத காரணத்தை விளக்கும் எசாயாவின் இன்னொரு கூற்று.
41எசாயா மெசியாவின் மாட்சியைக் கண்டதால்தான் அவரைப்பற்றி இவ்வாறு கூறினார்.
42எனினும் தலைவர்களில்கூடப் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். ஆனால், பரிசேயருக்கு அஞ்சி அவர்கள் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி ஒப்புகொண்டால் அவர்கள் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள்.
43அவர்கள் கடவுள் அளிக்கும் பெருமையைவிட மனிதர் அளிக்கும் பெருமையையே விரும்பினார்கள்.

தீர்ப்பு அளிப்பது இயேசுவின் வார்த்தை

44இயேசு உரத்த குரலில் கூறியது:
“என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்.
45என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்.
46என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்.
47நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில், நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்.
48என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும்.
49ஏனெனில், நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்லவேண்டும், என்ன பேசவேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார்.
50
அவருடைய கட்டளை நிலை வாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே, நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்”
.

12:3 லூக் 7:37,38. 12:8 இச 15:11. 12:13 திபா 118:26; திவெ 7:9. 12:15 செக் 9:9. 12:19 யோவா 11:47,48. 12:24 1 கொரி 15:36. 12:25 மத் 10:39; 16:25; மாற் 8:35; லூக் 9:24; 17:33. 12:27 மத் 26:37; லூக் 22:40-46; யோவா 6:38; 11:33; 13:21; 18:4; எபி 5:7,8. 12:31 லூக் 10:18; திவெ 12:9; 20:1-6. 12:34 திபா 110:4; எசா 9:7; எசே 37:25; தானி 7:14. 12:38 எசா 53:1. 12:40 எசா 6:9,10. 12:49 இச 18:18,19.
12:3 ஒரு லித்ரா என்பது கிரேக்க பாடம். 12:13 ‘ஓசன்னா’ என்னும் எபிரேயச் சொல்லுக்கு ‘விடுவித்தருளும்’ என்பது பொருள். ஆனால் எபிரேய வழக்கில் வாழ்த்தைத் தெரிவிக்கும் சொல்லாகவும் அது அமைந்தது.