ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை
(மாற் 12:41-44)

1இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார்.
2வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை* அதில் போடுவதைக் கண்டார்.
3அவர்
“இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும்விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
4
ஏனெனில், அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்”
என்றார்.

எருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவித்தல்
(மத் 24:1-2; மாற் 13:1-2)

5கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.
6இயேசு,
“இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்”
என்றார்.

வரப்போகும் கேடுபற்றி அறிவித்தல்
(மத் 24:3-14; மாற் 13:3-13)

7அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.
8அதற்கு அவர்,
“நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில், பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.
9
ஆனால், போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில், இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால், உடனே முடிவு வராது”
என்றார்.
10மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது:
“நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.
11பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.
12இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.
13எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.
14அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
15ஏனெனில், நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.
16ஆனால், உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.
17என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.
18இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.
19நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.

எருசலேம் அழிவுபற்றிய முன்னறிவிப்பு
(மத் 24:15-21; மாற் 13:14-19)

20“எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்துகொள்ளுங்கள்.
21அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம்.
22ஏனெனில், அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும்.
23அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில், மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள் மீது கடவுளின் சினமும் வரும்.
24அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும் வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.

மானிடமகன் வருகை
(மத் 24:29-31; மாற் 13:24-27)

25“மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள்.
26உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.
27அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள்.
28இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”

அத்தி மர உவமை
(மத் 24:32-35; மாற் 13:28-31)

29இயேசு அவர்களுக்கு மேலும் ஓர் உவமை சொன்னார்:
“அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள்.
30அவை தளிர்விடும் போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக்காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்.
31அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
32அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
33விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.”

மானிடமகன் வரும் நாள்

34-35மேலும் இயேசு,
“உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.
36
ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்”
என்றார்.
37இயேசு பகல் நேரங்களில் கோவிலில் கற்பித்துவந்தார். இரவு நேரங்களிலோ ஒலிவம் என்று வழங்கப்பட்ட மலைக்குச் சென்று தங்கி வந்தார்.
38எல்லா மக்களும் கோவிலில் அவர் சொல்வதைக் கேட்கக் காலையிலேயே அவரிடம் வருவார்கள்.

21:10 தானி 9:2. 21:12-15 மத் 10:17-22; லூக் 12:11,12; யோவா 15:20. 21:22 ஓசே 9:7; 12:24; திவெ 11:2. 21:25 எசா 13:10; எசே 32:7; யோவே 2:31; திவெ 6:12,13. 21:27 தானி 7:13; திவெ 1:7. 21:37 லூக் 19:47.
21:2 இங்கு ‘காசு’ என்பது ஒரு தெனாரியத்தில் 1/128 பகுதி மதிப்புடைய ‘லெப்டான்’ ஆகும்.