அஞ்சாதீர்கள்
(மத் 10:28-31)

1ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம் கூறியது:
“பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.
2வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.
3ஆகவே, நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்.
4என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்; உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
5நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரமுள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
6இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும், அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே.
7உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.

மக்கள் முன்னிலையில் கிறிஸ்துவை ஏற்று அறிக்கையிடுதல்
(மத் 10:32-33; 12:32; 10:19-20)

8“நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார்.
9மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார்.
10மானிடமகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்.
11தொழுகைக் கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதிலளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
12ஏனெனில், நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.

அறிவற்ற செல்வன் உவமை

13கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்றார்.
14அவர் அந்த ஆளை நோக்கி,
“என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?”
என்று கேட்டார்.
15பின்பு அவர் அவர்களை நோக்கி,
“எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது”
என்றார்.
16அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்:
“செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
17அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான்.
18‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’.
19பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
20ஆனால், கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார்.
21கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”

கவலை வேண்டாம்
(மத் 6:25-34, 19-21)

22இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:
“ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர்.
23உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?
24காகங்களைக் கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை; அவற்றுக்குச் சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா?
25கவலைப்படுவதால் உங்களுள் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?
26ஆதலால், மிகச் சிறிய ஒரு செயலைக் கூடச் செய்யமுடியாத நீங்கள் மற்றவை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?
27காட்டுச் செடிகள் எப்படி வளர்கின்றன எனக் கூர்ந்து கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை; ஆனால், சாலமோன்கூடத் தம் மேன்மையிலெல்லாம் அவற்றில் ஒன்றைப்போல் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
28“நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறிப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் மிகுதியாகச் செய்வார் அல்லவா!
29ஆதலால், எதை உண்பது, எதைக் குடிப்பது என நீங்கள் தேடிக்கொண்டிருக்க வேண்டாம்; கவலை கொண்டிருக்கவும் வேண்டாம்.
30ஏனெனில், உலகு சார்ந்த பிற இனத்தவரே இவற்றையெல்லாம் தேடுவர். உங்களுக்கு இவை தேவையென உங்கள் தந்தைக்குத் தெரியும்.
31நீங்கள் அவருடைய ஆட்சியை நாடுங்கள்; அப்பொழுது இவை உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.”
32“சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.
33உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.
34உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்
(மத் 24:45-51)

35“உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும்.
36திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.
37தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
38தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.
39எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.
40நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.”
41அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டார்.
42அதற்கு ஆண்டவர் கூறியது:
“தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?
43தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்.
44அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.
45ஆனால், அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில்
46அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.
47தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.
48ஆனால், அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.”

பிளவு ஏற்படுதல்
(மத் 10:34-36)

49“மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
50ஆயினும், நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.
51மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.
52இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர்.
53தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.”

காலத்தைக் கண்டுணர்தல்
(மத் 16:2-3)

54இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து,
“மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழைவரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது.
55தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது.
56வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?

எதிரியோடு உடன்பாடு செய்துகொள்தல்
(மத் 5:25-26)

57“நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?
58நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார்.
59கடைசிக் காசுவரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறமாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

12:1 மத் 16:6; மாற் 8:15. 12:2 மத் 4:22; லூக் 8:17. 12:10 மத் 12:32; மாற் 3:29. 12:11-12 மத் 10:19,20; மாற் 13:11; லூக் 21:14,15. 12:27 1 அர 10:4-7; 2 குறி 9:3-6. 12:35 மத் 25:1-13. 12:36 மாற் 13:34-36; 1 பேது 1:13. 12:39-40 மத் 24:43,44. 12:50 மாற் 10:38. 12:53 மீக் 7:6.