லூக்கா முன்னுரை


ஆசிரியர்

மூன்றாம் நற்செய்தி நூலின் ஆசிரியர் சிரியநாட்டு அந்தியோக்கியாவைச் சேர்ந்த லூக்கா என்பது திருச்சபை மரபு. இவர் மருத்துவம் தெரிந்தவர். திருத்தூதர் பவுலோடு சேர்ந்து நற்செய்திப் பணி ஆற்றியவர். பிற இனக் கிறிஸ்தவச் சபைகளோடு மிகநெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவரும் பிற இனக் கிறிஸ்தவர்தான் என்பது பெரும்பாலோர் கருத்து (பில 24; 2 திமொ 4:11; கொலோ 4:11-14).

சூழல்

‘மாண்புமிகு’ தியோபிலுக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்படுகிறது; நல்ல கிரேக்க மொழிநடையில் அமைந்துள்ளது. தம் காலத்துத் திருச்சபையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கும் நோக்கத்தோடு ஆசிரியர் இந்நூலைப் படைத்துள்ளார். இயேசுவைப் பற்றிப் பிற நூல்கள் இதற்குமுன் எழுதப்பட்டிருந்தாலும் முறையாகவும் முழுமையாகவும் வரலாற்றுப் பின்னணியோடும் யாவற்றையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்நூலை இவர் எழுதுகிறார் (லூக் 1:1-4). பிற இனத்தவருக்கென்றே எழுதுவதால் எபிரேயச் சொல்லாட்சி இந்நூலில் தவிர்க்கப்படுகிறது.

எருசலேம் நகரம் தீத்துவால் அழிக்கப்பட்டபோது நிகழ்ந்தவை இந்நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மாற்கு நற்செய்தி நூலில் காணப்படும் எருசலேம் கோவில்பற்றிய தானியேல் மறைபொருள் வெளிப்பாட்டு இலக்கியச் செய்தி எருசலேம் நகர அழிவைப்பற்றிய செய்தியாக மாற்றப்படுகிறது (லூக் 21:5, 20; 13:35). எனவே இந்நூல் கி.பி. 70-க்கு பின்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும். அந்தியோக்கியா, உரோமை போன்ற ஏதேனும் ஒரு நகரிலிருந்து இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம்.

உள்ளடக்கம்

லூக்கா நற்செய்தியாளர் மீட்பு வரலாற்றை, யோவான் வரை உள்ள இஸ்ரயேல் மக்களின் காலம், இயேசுவின் காலம், திருச்சபையின் காலம் என்னும் முப்பெரும் கட்டங்களாகப் பிரிக்கின்றார் (16:16). ‘உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது’ என மீட்பளிக்கும் வருங்காலத்தைக் குறிப்பிட்டாலும் (21:28) இறையாட்சி மக்களிடையே மலர்ந்துவிட்டது (17:21), இப்பொழுதே இயேசுவின் வாழ்வில் நிறைவேறிவிட்டது (1:1; 4:21) என நிகழ்கால மீட்பையே வலியுறுத்திக் கூறுகிறார். இந்நூலில் எருசலேம் உலக மீட்பின் திட்டத்துக்கு மையமாகத் திகழ்கிறது. இந்நற்செய்தி நூல் எருசலேமில் தொடங்கி எருசலேமில் முடிகிறது. இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்தார் என்னும் கருத்து முதன்மைச் செய்தியாக விளங்குகிறது (19:10). இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாவிகள், பெண்கள், ஏழைகள், சமாரியர் ஆகியோர் சிறப்பிடம் பெறுகின்றனர். தூய ஆவியின் செயல்பாடு, இயேசுவின் இரக்கம், திருப்பணி, மனம் மாற்றம், பாவ மன்னிப்பு, இவற்றால் ஏற்படும் மகிழ்ச்சி ஆகியவை வலியுறுத்தப் பெறுகின்றன. இறைவேண்டல், சான்றுபகருதல், பொறுப்புடன் செல்வத்தைப் பயன்படுத்தல், அமைதி பெறுதல், சிலுவை சுமத்தல் ஆகியன சீடத்துவத்தின் சிறப்புத் தகுதிகளாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன.

அமைப்பு

  1. அர்ப்பணம் 1:1 - 4
  2. குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் 1:5 - 2:52
  3. திருப்பணிக்குத் தயார் செய்தல் 3:1 - 4:13
  4. கலிலேயப் பணி 4:14 - 9:50
  5. எருசலேம் நோக்கிப் பயணம் 9:51 - 19:27
  6. எருசலேம் பணி 19:28 - 21:38
  7. இயேசு துன்புற்று இறந்து உயிர்த்தெழுதலும் விண்ணேற்றமடைதலும் 22 - 24