மாற்கு முன்னுரை


ஆசிரியர்

மாற்கு நற்செய்தி நூலின் ஆசிரியர் யோவான் மாற்கு என்பது திருச்சபை மரபு. மாற்குவின் தாய் பெயர் மரியா. இவர்களுடைய வீட்டில் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் கூடி வழிபட்டு வந்தனர் (திப 12:12). மாற்கு 14:51, 52-இல் குறிப்பிடப்பட்டிருக்கும் இளைஞர் இவராக இருக்கலாம். இவர் பர்னபாவின் உறவினர். தொடக்கத்தில் பவுலோடு பயணம் செய்தவர். பவுலுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் (2 திமொ 4:11). இவர் திருத்தூதர் பேதுருவுக்கும் துணையாகத் திருத்தொண்டில் ஈடுபட்டிருந்தார். பேதுருவின் போதனைகளின் அடிப்படையில் தான் இந்நற்செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பலரது கருத்து.

சூழல்

நற்செய்தி நூல்களுள் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. கி.பி.64- ஆம் ஆண்டில் இருந்து 70-ஆம் ஆண்டுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். எருசலேம் அழிக்கப்படவிருந்த சூழலில், உரோமையரால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டக் காலத்தில், உரோமை நகரிலிருந்த மாற்கு இதனை எழுதியிருக்க வேண்டும். பேதுரு, பவுல் போன்ற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்ட காலக் கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியைத் தொகுத்து அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாத தேவையாகத் தெரிந்திருக்க வேண்டும்.

இந்நற்செய்தி நூல் பிற இனத்துக் கிறிஸ்தவர்களைக் குறிப்பாகக் கண்முன் கொண்டு எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இந்நூலின் ஆசிரியர், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய மரபுகளை, சிறப்பாக அவருடைய வல்ல செயல்கள், உவமைகள், கூற்றுகள் ஆகியவற்றைத் தமக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாகத் தொகுத்து எழுதியுள்ளார். இவ்வாறு இயேசுவே மெசியா, இறைமகன் என்னும் உறுதியில் பிற இனத்துக் கிறிஸ்தவர்கள் வளர இந்நூல் பெரிதும் உதவியாக அமைகிறது.

உள்ளடக்கம்

“கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி” என்னும் தொடக்கச் சொற்களே நற்செய்தி நூலுக்கு நல்ல தலைப்பாக அமைகின்றன.

இந்நூலின் முதல் பகுதியில் இயேசு கிறிஸ்து மாட்சிமை மிக்க இறைமகனாகிய மெசியா (1:1) என்பதையும் மனம்மாறும் மக்கள் பாவமன்னிப்புப் பெற்று, இறையாட்சியில் உரிமைக் குடிமக்களாகும் தகுதி பெறுகின்றனர் (1:15) என்பதையும் இவ்வாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு கலிலேயாவில் மக்கள் திரளுக்குப் பணிபுரியும் இயேசு, சீடர்களோடு இணைந்து செயல்பட்டு, பேய்கள் மற்றும் சமயத் தலைவர்களின் அதிகாரத்தை அடக்குகின்றார் என்பதை, மற்ற நற்செய்தி ஆசிரியர்களைவிட விளக்கமாக இவர் எடுத்துரைக்கிறார்.

இயேசு கிறிஸ்து மக்கள் அனைவருக்கும் மீட்பு வழங்கும் துன்புறும் மானிட மகன் (10:45) என்ற கருத்து, இரண்டாம் பகுதியில் வலியுறுத்தப்படுகின்றது. “இயேசு கிறிஸ்து துன்பங்கள் பட்டு இறந்து உயிர்பெற்றெழுந்து மீட்பரானார்” என்னும் தொடக்கக் காலத் திருச்சபையின் மையப் போதனையை, இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் இந்நூல் ஆசிரியர் விரித்துக் கூறுகின்றார்.

அமைப்பு

பகுதி 1 முன்னுரை 1:1 - 13

பகுதி 2. இயேசுவே மெசியா (1:14 - 8:30)

  1. இயேசுவும் மக்கள் கூட்டமும் 1:14 - 3:6
  2. இயேசுவும் சீடர்களும் 3:7 - 6:6அ
  3. இயேசு தம்மைச் சீடருக்கு வெளிப்படுத்தல் 6:6ஆ - 8:26
  4. இயேசு மெசியா என்னும் அறிக்கை 8:27 - 30

பகுதி 3. இயேசுவே மானிடமகன் (8:31 - 16:8)

  1. பயணம் செய்யும் மானிடமகன் 8:31 - 10:52
  2. எருசலேமில் மானிடமகன் 11:1 - 13:37
  3. மானிடமகன் முழுமையாய் வெளிப்படுத்தப்படல் 14:1 -16:8

பகுதி 4. முடிவுரை 16:9 - 20