மறுவாழ்வும் ஆசியும் பெறுதலுக்கான நிபந்தனைகள்

1இவை எல்லாம் நிகழும்போது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிதறடித்துள்ள மக்களினங்களுக்கிடையே வாழ்கையில், நான் உனக்கு முன்னே வைத்த ஆசி, சாபம் ஆகியவற்றை, உன் உள்ளத்தில் சிந்தனை செய்.
2நான் இன்று உனக்கு அளிக்கும் அனைத்துக் கட்டளைகளின்படி உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா. நீயும் உன் பிள்ளைகளும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால்,
3உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அடிமைத்தனத்தினின்று விடுவிப்பார். உன்மேல் இரக்கம்கொண்டு, உன்னை அவர் சிதறடித்துள்ள எல்லா நாடுகளிலுமிருந்து மீண்டும் கூட்டிச் சேர்ப்பார்.
4நீ வானத்தின் கடையெல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் கடவுளாகிய ஆண்டவர், அங்கிருந்து உன்னைக் கூட்டிச் சேர்ப்பார். ஆண்டவர் அங்கிருந்து உன்னை அழைத்துக் கொண்டு வருவார்.
5உன் கடவுளாகிய ஆண்டவர், உன் மூதாதையர் உடைமையாக்கியிருந்த நாட்டுக்குள் உன்னைக் கொணர்வார். நீயும் அதை உடைமையாக்கிக்கொள்வாய். உனக்கு நன்மைகள் ஈந்து உன் மூதாதையரைவிட உன்னைப் பெருகச் செய்வார்.
6உன் கடவுளாகிய ஆண்டவர் உன் உள்ளத்தையும் உன் வழிமரபின் உள்ளத்தையும் பண்படுத்துவார். அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர்மீது நீ முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்வாய். அப்போது, நீயும் வாழ்வு பெறுவாய்.
7உன் கடவுளாகிய ஆண்டவர், இந்தச் சாபங்களை எல்லாம் உன் பகைவர்மீதும், உன்னை வெறுப்பவர்மீதும், உன்னைக் கொடுமைப்படுத்துவோர் மீதும் வரச்செய்வார்.
8நீ ஆண்டவரிடம் திரும்பிவா. அவரது குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் கடைப்பிடி.
9நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீ நிறைவு பெறும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் செய்வார். உனது கருவின் கனி, உன் கால்நடைகளின் ஈற்று உனது நிலத்தின் பயன் அனைத்தும் நலமே அமையுமாறு செய்வார். உன் மூதாதையரில் மகிழ்வு கொண்டது போல், உன் நன்மையின் பொருட்டு உன்மீது மீண்டும் மகிழ்வார்.
10எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.
11ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை; உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை.
12‘நாம் அதைக்கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை.
13‘நாம் அதைக்கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை.
14ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.
15இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்.
16அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசிவழங்குவார்.
17ஆனால், உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால்,
18இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்துபோவாய். நீ உரிமையாக்கிக் கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது.
19உன் மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள்.
20உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக் கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்.

30:12-14 உரோ 10:6-8. 30:20 தொநூ 12:7; 26:3; 28:13.