தோற்றுவாய்

1யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும் இடையே, சூபுக்குக் கிழக்கே அமைந்த அராபா பாலை நிலத்தில் இஸ்ரயேலர் அனைவருக்கும் மோசே உரைத்த வார்த்தைகள் இவையே.
2காதேசுபர்னேயா என்ற அந்த இடம் ஓரேபிலிருந்து சேயிர் மலை வழியாகப் பதினொரு நாள் பயணத் தொலையில் இருந்தது.
3இஸ்ரயேல் மக்களுக்கென ஆண்டவர் கட்டளையிட்ட யாவற்றையும் நாற்பதாவது ஆண்டின் பதினொன்றாம் திங்கள் முதல் நாளன்று மோசே அவர்களுக்கு உரைத்தார்.
4எஸ்போனில் வாழ்ந்த எமோரியரின் அரசன் சீகோனையும், எதிரேயி அருகே அசித்தரோத்தில் வாழ்ந்த பாசானின் அரசன் ஓகையும் முறியடித்த பின்னர்,
5யோர்தானுக்கு அப்பால் மோவாபு நாட்டில், பின்வரும் இந்தச் சட்டங்களை மோசே எடுத்துரைத்தார். அவர் கூறியது:
6“ஆண்டவராகிய நம் கடவுள் ஓரேபில் நமக்கு உரைத்தது; ‘இந்த மலைப்பகுதியில் நீங்கள் நெடுநாள் தங்கிவிட்டீர்கள்.
7புறப்படுங்கள், எமோரியரின் மலைப்பகுதி நோக்கிப் பயணமாகுங்கள். சமவெளியிலும், குன்றுகளிலும், பள்ளத்தாக்கிலும், நெகேபிலும், கடற்கரையோரங்களிலும் வாழும் எல்லா மக்களிடமும் செல்லுங்கள். கானானிய நாட்டுக்கும், லெபனோனுக்கும், யூப்பிரத்தீசு பேராறு வரைக்கும் செல்லுங்கள்.
8இதோ! அந்த நாட்டை உங்கள்முன் வைத்துள்ளேன். ஆண்டவர் உங்கள் மூதாதையராகிய, ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் வழி மரபினருக்கும் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியபடி நீங்கள் போய் அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுங்கள்.’

மோசே தலைவர்களை நியமித்தல்
(விப 18:13-27)

9அப்பொழுது நான் உங்களுக்குக் கூறியது: ‘என்னால் தனியாளாக உங்களைத் தாங்க முடியாது.
10உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைப் பலுகச் செய்துள்ளார். இதோ, இப்பொழுது நீங்கள் விண்மீன்களைப் போல் பெருந்திரளாய் உள்ளீர்கள்.
11உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் இப்பொழுது இருப்பதைவிட ஆயிரம் மடங்கு உங்களைப் பெருகச் செய்வாராக! வாக்களித்தது போல உங்களுக்கு ஆசி வழங்குவாராக!
12உங்கள் பளுவையும் துன்பத்தையும் வழக்குகளையும் என்னால் தனியாளாகத் தாங்கமுடியுமா?
13உங்கள் ஒவ்வொரு குலத்திலும் ஞானமும், அறிவாற்றலும், நற்பெயரும் கொண்டவர்களைத் தேர்வு செய்யுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன்’.
14நீங்களும் எனக்கு மறுமொழியாக, ‘செய்ய வேண்டியது குறித்து நீர் சொன்னது நன்று!’ என்றீர்கள்.
15எனவே, ஞானமும் நற்பெயரும் கொண்ட உங்கள் குலத் தலைவர்களை நான் தேர்ந்தெடுத்தேன்; அவர்களை ஆயிரவர் தலைவராக, நூற்றுவர் தலைவராக, ஐம்பதின்மர் தலைவராக, பதின்மர் தலைவராக, மற்றும் உங்கள் ஒவ்வொரு குலத்தின் அலுவலர்களாக ஏற்படுத்தினேன்.
16மேலும், உங்கள் நீதித்தலைவர்களுக்கு நான் கட்டளையிட்டு, ‘உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேளுங்கள், ஒருவனுக்கும் அவன் சகோதரனுக்குமிடையே அல்லது அவனோடு தங்கும் அந்நியனுக்குமிடையே நீதியின்படி தீர்ப்பிடுங்கள்.
17விருப்பு வெறுப்பின்றித் தீர்ப்பிடுங்கள்; உயர்ந்தோனுக்கும் தாழ்ந்தோனுக்கும் ஒன்றுபோல் செவிகொடுங்கள்; எந்த மனிதனுக்கும் அஞ்ச வேண்டாம், ஏனெனில், நீதித்தீர்ப்பு கடவுளுக்கே உரியது. உங்களால் தீர்க்க இயலாததை என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் வழக்கைக் கேட்பேன்’ என்றேன்.
18இவ்வாறு, நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் அந்நேரத்தில் நான் உங்களுக்குக் கட்டளையாகக் கூறினேன்.

ஒற்றர்களை அனுப்புதல்
(எண் 13:1-33)

19பின்னர், நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருந்தபடி, நாம் ஓரேபை விட்டுப் புறப்பட்டு, நீங்களே கண்டு அஞ்சிய பெரும் பாலை நிலம் முழுவதும், எமோரியரின் மலைப்பாதை வழி நடந்து, காதேசுபர்னேயாவுக்கு வந்து சேர்ந்தோம்.
20அங்கு, நான் உங்களை நோக்கி, ‘நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருக்கும் எமோரியரின் மலை நாட்டுக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள்;
21இதோ, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குத் தந்துள்ள நாட்டைப் பாருங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் மூதாதையருக்கு அளித்த வாக்கிற்கிணங்க நீங்கள் போய் அதை உரிமையாக்கிக் கொள்ளுங்கள். அஞ்சவேண்டாம். கலக்கமுற வேண்டாம்’ என்றேன்.
22அப்பொழுது, நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து, ‘நமக்கு முன் ஆள்களை அனுப்புவோம், அவர்கள் நமக்காக அந்த நாட்டை ஆய்ந்து பார்ப்பார்கள், நாம் அதனுள் செல்லவேண்டிய பாதையைப் பற்றியும் நாம் செல்ல வேண்டிய நகர்களைக் குறித்தும் அவர்கள் செய்தியுடன் நம்மிடம் திரும்புவார்கள்’ என்றீர்கள்.
23அது நல்லதாக எனக்குத் தோன்றியது. உங்களிலிருந்து குலத்துக்கு ஒருவராகப் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தேன்.
24அவர்கள் புறப்பட்டு, மலையில் ஏறி, எசுக்கோல் பள்ளத்தாக்கு வரை சென்று, அதை உளவு பார்த்தனர்.
25மேலும், அவர்கள் அந்த நாட்டின் கனிகளில் சிலவற்றைப் பறித்து நம்மிடம் கொணர்ந்து, ‘நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருப்பது நல்ல நாடு’ என்று நமக்குச் செய்தி சொன்னார்கள்.
26ஆயினும், நீங்கள் முன்னேறிச் செல்ல மறுத்தீர்கள். மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய வார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தீர்கள்.
27உங்கள் கூடாரங்களில் நீங்கள் முறுமுறுத்து, ‘ஆண்டவர் நம்மை வெறுத்ததால், நம்மை அழிக்கும்படி, எமோரியரிடம் கையளிப்பதற்காக, எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டு வரச் செய்துள்ளார்.
28நாம் எங்கே போவது? நம்மைவிட வலிமையிலும் உயரத்திலும் மிகுந்த மக்களையும், அவர்களுடைய வானளாவிய மதில்கள் கொண்ட மாபெரும் நகர்களையும், மற்றும் ஏனாக்கின் புதல்வர்களையும் அங்கு கண்டோம் என்று சொல்லி நம் சகோதரர்கள் நம் உள்ளங்களைக் கலங்கடித்தார்களே’ என்று கூறினீர்கள்.
29ஆனால், நான் உங்களுக்குச் சொன்னேன்: ‘நீங்கள் கலக்கமுற வேண்டாம், அவர்களுக்கு அஞ்சவும் வேண்டாம்.
30உங்களுக்கு முன்னே செல்கின்ற உங்கள் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் காண எகிப்தில் எல்லாவற்றிலும் அவர் செய்தது போலவே, இப்பொழுதும் உங்களுக்காகப் போர் புரிவார்.
31பாலை நிலத்தில், நீங்கள் நடந்து வந்த வழிகளில் எல்லாம் இங்கு வந்து சேரும்வரை ஒருவன் தன் மகனைத் தூக்கிச் செல்வது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைத் தூக்கி வந்ததைக் கண்டீர்களே!
32ஆயினும், இவற்றுக்குப் பின்னும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் உறுதியுடன் பற்றிக் கொள்ளவில்லை.
33பாளையமிறங்கத் தக்க இடத்தை உங்களுக்காகத் தேடவும், நீங்கள் செல்ல வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும், இரவில் நெருப்பிலும் பகலில் மேகத்திலும் உங்கள் முன் அவர் நடந்து சென்றாரே!’

ஆண்டவர் இஸ்ரயேலைத் தண்டித்தல்
(எண் 14:20-45)

34ஆகையால், உங்கள் முறையீட்டுக் குரலைக் கேட்டுக் கடுஞ்சினமுற்று ஆண்டவர் ஆணையிட்டுக் கூறியதாவது:
35‘உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த நல்ல நாட்டை இந்தக் கெட்ட தலைமுறையின் மனிதருள் எவனும் காணப் போவதில்லை.
36எப்புன்னேயின் மகனாகிய காலேபு மட்டும் அதைக் காண்பான். அவன் நடந்து வந்த நாட்டை அவனுக்கும் அவன் புதல்வருக்கும் நான் கொடுப்பேன். ஏனெனில், அவன் ஆண்டவரை முற்றிலும் பின்பற்றினான்.
37அன்றியும், உங்கள் பொருட்டு ஆண்டவர் என்மீதும் சினம் கொண்டு, நீயும் அங்குப் போகமாட்டாய்.
38நூனின் மகனும் உன் ஊழியனுமாகிய யோசுவா அங்குச் செல்வான். நீ அவனை உறுதிப்படுத்து. ஏனெனில், அவன் இஸ்ரயேல் அதை உரிமையாக்கிக் கொள்ளுமாறுசெய்வான்.
39இவர்கள் கடத்திச் செல்லப்படுவர் என்று நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சிறுவரும், இன்றுவரை நன்மை தீமை பற்றிய அறிவற்ற உங்கள் புதல்வரும் அதனுள் செல்வர். அவர்களுக்கே அதை நான் கொடுப்பேன். அவர்கள் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
40நீங்களோ புறப்பட்டு, செங்கடல் நெடுஞ்சாலை வழியே பாலை நிலத்துக்குப் பயணமாகுங்கள்’ என்றார்.
41உடனே நீங்கள் எனக்கு மறுமொழியாக, ‘நாங்கள் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாங்கள் போய்ப் போர் புரிவோம்’ என்றீர்கள். பிறகு, நீங்கள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டீர்கள். மலைமீது ஏறிப்போவது எளிது என்றும் எண்ணினீர்கள்.
42அப்பொழுது ஆண்டவர் என்னிடம், ‘நீங்கள் போக வேண்டாம்; போர்புரியவும் வேண்டாம்; உங்கள் பகைவர் உங்களை முறியடிப்பார்; ஏனெனில், நான் உங்கள் நடுவே இருக்கமாட்டேன் என்று அவர்களுக்குச் சொல்’ என்றார்.
43நானும் உங்களுக்கு அதையே சொன்னேன். நீங்களோ கேட்கவில்லை. மாறாக, நீங்கள் செருக்குற்று ஆண்டவரின் வாக்கை மீறி மலைமீது ஏறினீர்கள்.
44அந்த மலைப் பகுதிவாழ் எமோரியர் உங்களுக்கு எதிராகப் புறப்பட்டு, தேனீக்கள் போல் உங்களைத் துரத்தியடித்தனர். சேயிர் தொடங்கி ஓர்மாவரையிலும் உங்களை முறியடித்தனர்.
45அப்பொழுது, நீங்கள் திரும்பி வந்து ஆண்டவர்முன் அழுதீர்கள். ஆனால், ஆண்டவர் உங்கள் குரலைக் கேட்கவில்லை, உங்களுக்காகச் செவி சாய்க்கவும் இல்லை.
46இவ்வாறு, நீங்கள் வெகு நாள்கள் காதேசில் தங்க நேர்ந்தது.

1:4 எண் 2:21-35. 1:26 இச 9:23; எபி 3:16. 1:31 திப 13:8. 1:32 எபி 3:19. 1:34-35 எபி 3:18.