முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துதல்
(மாற் 2:1-12; லூக் 5:17-26)

1இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார்.
2அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம்,
“மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன”
என்றார்.
3அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், “இவன் கடவுளைப் பழிக்கிறான்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர்.
4அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி,
“உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்?
5‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா, ‘எழுந்து நட’ என்பதா, எது எளிது?
6
மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்”
என்றார். எனவே, அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,
“நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ”
என்றார்.
7அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.
8இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

மத்தேயுவை அழைத்தல்
(மாற் 2:13-17; லூக் 5:27-32)

9இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம்,
“என்னைப் பின்பற்றி வா”
என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
10பின்பு, அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.
11இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர்.
12இயேசு இதைக் கேட்டவுடன்,
“நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.
13
‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில், நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்”
என்றார்.

நோன்புபற்றிய கேள்வி
(மாற் 2:18-22; லூக் 5:33-39)

14பின்பு, யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர்.
15அதற்கு இயேசு அவர்களை நோக்கி,
“மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
16மேலும், எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில், அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும்.
17
அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா”
என்றார்.

இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும் சிறுமி உயிர்த்தெழுதலும்
(மாற் 5:21-43; லூக் 8:40-56)

18அவர்களுடன் இவ்வாறு இயேசு பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்” என்றார்.
19இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
20அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப்பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்.
21ஏனெனில், அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார்.
22இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து,
“மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று”
என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.
23இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார்.
24அவர்,
“விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்”
என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
25அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர்பெற்று எழுந்தாள்.
26இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.

பார்வையற்றோர் இருவர் பார்வை பெறுதல்

27இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர்.
28அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து,
“நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?”
என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள்.
29பின்பு, அவர் அவர்களின் கண்களைத் தொட்டு,
“நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்”
என்றார்.
30உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி.
“யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்”
என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார்.
31ஆனால், அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

பேச்சிழந்தவர் பேசுதல்

32அவர்கள் சென்றபின் பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்.
33பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர்.
34ஆனால், பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.

இயேசுவின் பரிவுள்ளம்

35இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
36திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்.
37அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி,
“அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.
38
ஆகையால், தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்”
என்றார்.

9:10-11 லூக் 15:1,2. 9:13 மத் 12:7; ஓசே 6:6. 9:24 யோவா 11:11. 9:34 மத் 10:25; மாற் 3:22; லூக் 11:15. 9:35 மத் 4:23; மாற் 1:39; லூக் 4:44. 9:36 எண் 27:17; 1 அர 22:17; 2 குறி 18:16; எசே 34:5; சக் 10:2; மாற் 6:34. 9:37-38 லூக் 10:2.