இயேசு சோதிக்கப்படுதல்
(மாற் 1:12-13; லூக் 4:1-13)

1அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.
2அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.
3சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான்.
4அவர் மறுமொழியாக,
“‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’
என மறைநூலில் எழுதியுள்ளதே”
என்றார்.
5பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,
6“நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்;
‘கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’
என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அலகை அவரிடம் சொன்னது.
7இயேசு அதனிடம்,
“‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்’
எனவும் எழுதியுள்ளதே”
என்று சொன்னார்.
8மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச்சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,
9அவரிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்றது.
10அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து,
“அகன்று போ, சாத்தானே,
‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’
என்றும் மறைநூலில் எழுதியுள்ளது”
என்றார்.
11பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(மாற் 1:14-15; லூக் 4:14-15)

12யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
13அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.
14இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:

15“செபுலோன் நாடே! நப்தலி நாடே!

பெருங்கடல் வழிப்பகுதியே!

யோர்தானுக்கு அப்பாலுள்ள

நிலப்பரப்பே!

பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!

16காரிருளில் இருந்த மக்கள்

பேரொளியைக் கண்டார்கள்.

சாவின் நிழல் சூழ்ந்துள்ள

நாட்டில் குடியிருப்போர் மேல்

சுடரொளி உதித்துள்ளது.”

17அதுமுதல் இயேசு,
“மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது”
எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

முதல் சீடர்களை அழைத்தல்
(மாற் 1:15-20; லூக் 5:1-11)

18இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.
19இயேசு அவர்களைப் பார்த்து,
“என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்”
என்றார்.
20உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
21அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.
22உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

திரளான மக்களுக்குப் பணி புரிதல்
(லூக் 6:17-19)

23அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
24அவரைப் பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய் பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார்.
25ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.

4:1 விப 24:18; 34:28; எபி 2:18; 4:15. 4:4 இச 8:3. 4:6 திபா 91:12. 4:7 இச 6:16. 4:10 இச 6:13. 4:12 மத் 14:3; மாற் 6:17; லூக் 3:19,20. 4:13 யோவா 2:12. 4:15,16 எசா 9:1,2. 4:17 மத் 3:2; மாற் 1:15. 4:23 மத் 9:35; மாற் 1:39.