இந்நூல் மக்கபேயர் முதல் நூலின் தொடர்ச்சியன்று; ஒரு வகையில் அதற்கு இணையானது. அந்தியோக்கு எப்பிபானின் தந்தை நான்காம் செலூக்குவின் ஆட்சி தொடங்கி நிக்கானோரை யூதா மக்கபே வெற்றி பெற்றது வரையிலான காலக்கட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 180-161) நடந்த நிகழ்ச்சிகள் இங்கு இடம்பெறுகின்றன. இவை ஏற்கெனவே மக்கபேயர் முதல் நூலின் முதல் ஏழு அதிகாரங்களில் காணப்படுகின்றன.
சீரேனைச் சேர்ந்த யாசோன் கிரேக்க மொழியில் ஐந்து தொகுதிகளில் விரிவாக எழுதிய வரலாற்றின் இரத்தினச் சுருக்கம் இந்நூல் (2:19-32). எருசலேம் யூதர்கள் எகிப்துவாழ் யூதர்களுக்கு விடுத்த இரண்டு மடல்கள் இதற்கு முன்னுரையாக (1:1 - 2:18) அமைகின்றன. “படிக்க விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிக்கவும், மனப்பாடம் செய்ய விரும்புவோருக்கு எளிதாக அமையவும், அனைவருக்கும் பயன் தரவும்” (2:25) ஏறத்தாழ கி.மு. 124இல் இது எழுதப்பெற்றதால், வரலாற்றுக் கண்ணோட்டத்தைவிடத் திருவுரைப் பாணியில் அமைந்த இறையியல் கண்ணோட்டமே இதில் முன்னிடம் பெறுகிறது. இறைத் தலையீட்டை விளக்கும்பொருட்டு வெளிப்பாட்டு இலக்கிய நடைக்குரிய காட்சிகள் ஆங்காங்கே (2:21; 3:24-34; 5:2-4; 10:29-30; 15:11-16) புகுத்தப்பட்டுள்ளன.
திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்போர்க்குக் கடவுள் கைம்மாறு அளிப்பார் என்னும் மையக் கருத்தை இந்நூல் விளக்குகிறது. நீதிமான்களின் உயிர்ப்பு (7:9, 11, 14, 23; 14:46), இறந்தோருக்காக வேண்டுதல் (12:39-46), மறைசாட்சி இறப்பின் சிறப்பு (6:18-7:42; 14:37-46), மண்ணக மனிதருக்காக விண்ணகப் புனிதர்களின் மன்றாட்டு (15:12-16) போன்ற பழைய ஏற்பாட்டின் பிற நூல்களில் இடம்பெற்றிராத புதிய கருத்துகள் இதில் காணக்கிடக்கின்றன.