ஆல்கிமும் நிக்கானோரும் புரிந்த போர்கள்

1நூற்று ஐம்பத்தோராம் ஆண்டு* செலூக்கின் மகன் தெமேத்திரி உரோமையினின்று புறப்பட்டுச் சிலரோடு கடற்கரை நகரம் ஒன்றை அடைந்து அங்கு ஆட்சிசெய்யத் தொடங்கினான்.
2தன் மூதாதையருடைய அரண்மனையை நோக்கி அவன் சென்று கொண்டிருந்தபோது அந்தியோக்கையும் லீசியாவையும் அவனிடம் கொண்டு வருவதற்காக அவனுடைய படைவீரர்கள் அவர்களைப் பிடித்தார்கள்.
3தெமேத்திரி இதுபற்றி அறியவந்தபோது, “அவர்களின் முகத்தில் விழிக்க நான் விரும்பவில்லை” என்றான்.
4ஆகவே படைவீரர்கள் அவர்களைக் கொன்றுவிட்டார்கள். தெமேத்திரி அரியணையில் அமர்ந்தான்.
5இஸ்ரயேலைச் சேர்ந்த நெறிகெட்டவர்கள், இறைப்பற்றில்லாதவர்கள் ஆகிய அனைவரும் தெமேத்திரியிடம் வந்தார்கள். தலைமைக் குருவாக விரும்பிய ஆல்கிம் இவர்களை வழிநடத்தி வந்திருந்தான்.
6அவர்கள் இஸ்ரயேல் மக்களைப்பற்றி மன்னனிடம் குற்றம் சாட்டி, “யூதாவும் அவனுடைய சகோதரர்களும் உம்முடைய நண்பர்களும் எல்லாரையும் கொன்று எங்களையும் எங்கள் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டார்கள்.
7ஆதலால் இப்போது உமக்கு நம்பிக்கையுள்ள ஒரு மனிதரை அனுப்பும். அவர் போய் எங்களுக்கும் மன்னருடைய நாட்டுக்கும் யூதா செய்துள்ள கொடுமைகள் அனைத்தையும் பார்க்கட்டும்; பின்னர் அவர்களையும் அவர்களுக்கு உதவி செய்பவர்களையும் தண்டிக்கட்டும்” என்றார்கள்.
8மன்னன் தன் நண்பர்களுள் ஒருவனான பாக்கீதைத் தேர்ந்து கொண்டான். இவன் யூப்பிரத்தீசின் மேற்குப் பகுதியில் தலைவனாக இருந்தவன்; பேரரசில் பெரியவன்; மன்னனின் நம்பிக்கைக்கு உரியவன்.
9மன்னன் அவனையும் அவனோடு இறைப்பற்றில்லாதவனும் தான் தலைமைக் குருவாக ஏற்படுத்தியிருந்தவனுமான ஆல்கிமையும் அனுப்பிவைத்தான்; இஸ்ரயேல் மக்களைப் பழிவாங்க அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
10அவர்கள் புறப்பட்டுப் பெரும் படையுடன் யூதேயா நாட்டை அடைந்தார்கள்; யூதாவிடமும் அவருடைய சகோதரர்களிடமும் தூதர்களை அனுப்பி அமைதிச் சொற்களை வஞ்சகமாய்க் கூறினார்கள்.
11ஆனால் அவர்கள் அச்சொற்களுக்குச் செவி சாய்க்கவில்லை; ஏனெனில் பெரும் படையோடு அவர்கள் வந்திருக்கக் கண்டார்கள்.
12நீதி கோரி மறைநூலறிஞர் குழு ஒன்று ஆல்கிமிடமும் பாக்கீதிடமும் சென்றது.
13இஸ்ரயேல் மக்களுள் கசிதேயரே முதன்முதலில் அவர்களோடு சமாதானம் செய்து கொள்ள முயன்றார்கள்.
14ஏனெனில், “ஆரோன் வழிமரபைச் சேர்ந்த குரு ஒருவர் படையோடு வந்திருக்கிறார்; அவர் நமக்குத் தீங்கிழைக்கமாட்டார்” என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.
15ஆல்கிம் அவர்களுக்கு அமைதிச் சொற்களைக் கூறி, “உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ தீங்கிழைக்க முயலமாட்டோம்” என்று ஆணையிட்டான்.
16எனவே அவர்கள் அவனை நம்பினார்கள். ஆனால் அவன் அவர்களுள் அறுபது பேரைப் பிடித்து ஒரே நாளில் கொன்றான். மறைநூலில் எழுதியுள்ள வாக்கு இவ்வாறு நிறைவேறியது:

17“எருசலேமைச் சுற்றிலும்

உம் தூயவர்களுடைய

உடலைச் சிதறடித்தார்கள்;

அவர்களின் இரத்தத்தைச் சிந்தினார்கள்;

அவர்களை அடக்கம்செய்ய

ஒருவரும் இல்லை.”

18அவர்களைப்பற்றிய அச்சமும் திகிலும் மக்கள் எல்லாரையும் ஆட்கொண்டன. “அவர்களிடம் உண்மையோ நீதியோ இல்லை; ஏனெனில் அவர்கள் செய்திருந்த ஒப்பந்தத்தையும் கொடுத்திருந்த உறுதிமொழியையும் மீறிவிட்டார்கள்” என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.
19பாக்கீது எருசலேமைவிட்டு அகன்று பெத்சாயிதாவில் பாசறை அமைத்தான்; ஆள்களை அனுப்பித் தன்னிடம் தப்பியோடி வந்திருந்தவர்களுள் பலரையும் மக்களுள் சிலரையும் பிடித்துக்கொன்று அவர்களை ஒரு பெரும் பள்ளத்தில் எறிந்தான்.
20பாக்கீது நாட்டை ஆல்கிமின் பொறுப்பில் ஒப்படைத்து அவனுக்கு உதவியாக ஒரு படையை விட்டுவிட்டு மன்னனிடம் திரும்பினான்.
21ஆல்கிம் தலைமைக் குருபீடத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பெரிதும் போராடினான்.
22மக்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் எல்லாரும் அவனோடு சேர்ந்துகொண்டு, யூதேயா நாட்டைக் கைப்பற்றி இஸ்ரயேலில் பெரும் தீங்கு விளைவித்தனர்.
23ஆல்கிமும் அவனுடன் இருந்தவர்களும் இஸ்ரயேல் மக்கள் நடுவே செய்திருந்த தீங்குகள் அனைத்தையும் யூதா கண்டார். பிற இனத்தார் செய்தவற்றைவிட அவை மிகக் கொடுமையாய் இருந்தன.
24ஆகவே அவர் யூதேயா நாடெங்கும் சுற்றி வந்து தம்மைவிட்டு ஓடிப் போயிருந்தவர்களைப் பழிவாங்கினார். நகரில் இருந்தவர்களுள் எவரும் நாட்டுப்புறத்திற்குப் போகாமல் தடுத்தார்.
25யூதாவும் அவருடன் இருந்தவர்களும் வலிமை பெற்றுவருகிறார்கள் என்று ஆல்கிம் கண்டு அவர்களை எதிர்க்கத் தன்னால் முடியாது என்று உணர்ந்து, மன்னனிடம் திரும்பிச் சென்று அவர்கள்மீது பல கொடிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தினான்.
26மன்னன் தான் பெரிதும் மதித்து வந்த தலைவர்களுள் ஒருவனான நிக்கானோரை அனுப்பினான். அவன் இஸ்ரயேலை வெறுத்துப் பகைத்தவன். அம்மக்களை அழித்தொழிக்கும்படி மன்னன் அவனுக்குக் கட்டளையிட்டான்.
27ஆகவே நிக்கானோர் பெரும்படையோடு எருசலேம் சென்று யூதாவுக்கும் அவருடைய சகோதரகளுக்கும் அமைதிச் சொற்களை வஞ்சகமாய்ச் சொல்லியனுப்பினான்;
28“நமக்கிடையே போராட்டம் வேண்டாம். நட்புறவோடு உம்மைச் சந்திக்கச் சிலரோடு வருவேன்” என்றான்.
29அவன் யூதாவிடம் சென்றதும் அவர்கள் ஒருவர் மற்றவரை நலம் பெற வாழ்த்திக்கொண்டார்கள்; ஆனால் பகைவர்கள் யூதாவைப் பிடிக்க முன்னேற்பாடாய் இருந்தார்கள்.
30நிக்கானோர் வஞ்சக நோக்கத்துடன் தம்மிடம் வந்துள்ளான் என்பது யூதாவுக்குத் தெரியவந்தது. எனவே யூதா அச்சம் கொண்டு அவனைச் சந்திக்க விரும்பவில்லை.
31நிக்கானோர் தன் திட்டம் வெளியாகிவிட்டதை அறிந்து, கபர்சலாமா அருகில் யூதாவைப் போரில் சந்திக்கச் சென்றான்.
32நிக்கானோரின் படையில் ஏறக்குறைய ஐந்நூறு பேர் மாண்டனர்; மற்றவர்கள் தாவீதின் நகருக்கு ஓடிப்போனார்கள்.
33இந்நிகழ்ச்சிகளுக்குப்பின் நிக்கானோர் சீயோன் மலைக்கு ஏறிச் சென்றான். அப்பொழுது திருஉறைவிடத்தினின்று குருக்களுள் சிலரும் மக்களுள் மூப்பர்கள் சிலரும் அவனை வாழ்த்தி வரவேற்கவும், மன்னனுக்காக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்த எரிபலியை அவனிடம் காட்டவும் வெளியே வந்தனர்.
34அவன் அவர்களை ஏளனம் செய்து எள்ளி நகையாடினான்; இழிவுபடுத்திச் செருக்குடன் பேசினான்.
35சினத்தில் அவன், “யூதாவையும் அவனது படையையும் என் கையில் உடனே ஒப்படைக்காவிடில், நான் வெற்றியுடன் திரும்பி வரும்போது இத்திருஉறைவிடத்தைத் தீக்கிரையாக்குவேன்” என்று சொல்லி ஆணையிட்டுக் கடுஞ்சினத்துடன் வெளியேறினான்.
36குருக்கள் உள்ளே சென்று பலிபீடத்துக்கும் கோவிலுக்கும் முன்பாக நின்றுகொண்டு அழுது,

37“உமது பெயர் விளங்கவும்,

வேண்டுதலினுடையவும்

மன்றாட்டினுடையவும் இல்லமாக

உம் மக்களுக்கு இலங்கவும்

நீர் இவ்விடத்தைத்

தெரிந்து கொண்டீர்.

38இந்த மனிதனையும் அவனது

படையையும் பழிவாங்கும்;

அவர்கள் வாளுக்கு இரையாகட்டும்;

அவர்கள் செய்த இறைப்

பழிப்புகளை நினைவுகூரும்;

அவர்களை வாழ விட்டு

விடாதேயும்” என்று மன்றாடினார்கள்.

39நிக்கானோர் எருசலேமைவிட்டு நீங்கிப் பெத்கோரோனில் பாசறை அமைத்தான். சிரியாவின் படை அவனோடு சேர்ந்துகொண்டது.
40யூதாவும் மூவாயிரம் பேரோடு அதசாவில் பாசறை அமைத்தார்; பின்னர் கடவுளை நோக்கி,
41“மன்னனால் அனுப்பப்பட்டவர்கள் உம்மைப் பழித்துரைத்ததால் உம் வானதூதர் போய் அசீரியர்களுள் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றனர்.
42அவ்வாறே எங்களுக்கு முன்பாக இன்று இப்படையை அழித்துவிடும். இதனால் நிக்கானோர் உம் திருஉறைவிடத்துக்கு எதிராகப் பழிச்சொல் கூறியுள்ளான் என மற்றவர்கள் அறிந்து கொள்ளட்டும். அவனது தீமைக்கு ஏற்ப அவனைத் தண்டியும்” என்று வேண்டினார்.
43அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் படைகள் போர் முனையில் சந்தித்துக்கொண்டன. நிக்கானோரின் படை தோல்வி அடைந்தது. போரில் முதலில் மடிந்தவன் அவனே.
44நிக்கானோர் மடிந்ததைக் கண்ட அவனுடைய படைவீரர்கள் தங்கள் படைக்கலங்களை எரிந்துவிட்டுத் தப்பியோடினார்கள்.
45யூதர்கள் அவர்களை அதசா முதல் கசாரா வரை அந்த நாள் முழுவதும் துரத்திச் சென்றார்கள்; அப்போது எக்காளங்களை முழங்கி மக்களைப் போருக்கு அழைத்தார்கள்.
46சுற்றிலும் இருந்த யூதேயாவின் ஊர்கள் அனைத்திலுமிருந்து மக்கள் வெளியே வந்து பகைவர்களைப் பக்கவாட்டில் தாக்கினார்கள். பகைவர்கள் தங்களைத் துரத்தியவர்களிடம் திருப்பி விரட்டப்படவே, எல்லாரும் வாளுக்கு இரையாயினர். அவர்களுள் ஒருவன்கூட உயிர் தப்பவில்லை.
47யூதர்கள் கொள்ளைப் பொருள்களைக் கைப்பற்றினார்கள். நிக்கானோரின் தலையைக் கொய்தார்கள்; அவன் இறுமாப்போடு நீட்டிக்காட்டிய வலக்கையைத் துண்டித்தார்கள்; அவற்றைக் கொண்டுவந்து எருசலேமுக்கு வெளியே மக்கள் காணும்படி தொங்கவிட்டார்கள்.
48மேலும் பெரிதும் களிப்புற்ற அந்த நாளை மகிழ்ச்சிப் பெருவிழாவாகக் கொண்டாடினார்கள்.
49அந்த விழாவை ஆண்டுதோறும் அதார் மாதம் பதின்மூன்றாம்நாளில் கொண்டாடவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
50சிறிது காலம் யூதேயா நாட்டில் அமைதி நிலவியது.

7:1-50 2 மக் 14:1-36; 15:1-36. 7:17 திபா 79:2-3. 7:41 2 அர 19:35. 7:47 2 மக் 15:30.
7:1 கி.மு. 161.