கோர்கியாவின் தோல்வி

1கோர்கியா ஐயாயிரம் காலாட்படையினரையும் தேர்ந்தெடுத்த ஆயிரம் குதிரைப்படையினரையும் கூட்டிச்சேர்த்தான். அப்படை இரவில் புறப்பட்டு,
2யூதர்களுடைய பாசறை மீது பாய்ந்து திடீரென்று அதைத் தாக்கச் சென்றது. கோட்டையில் இருந்தவர்கள் கோர்கியாவுக்கு வழிகாட்டினார்கள்.
3இதைக் கேள்வியுற்ற யூதா, தம் படைவீரர்களோடு எம்மாவுவில் இருந்த மன்னனின் படையைத் தாக்கச் சென்றார்.
4அப்போது அப்படை பாசறைக்கு வெளியே சிதறியிருந்தது.
5கோர்கியா இரவில் யூதாவின் பாசறைக்கு வந்து ஒருவரையும் காணாமல் அவர்களை மலையில் தேடினான்; “இவர்கள் நம்மைக் கண்டு ஓடிவிட்டார்கள்” என்று சொன்னான்.
6பொழுது விடிந்தபோது மூவாயிரம் ஆள்களோடு யூதா சமவெளியில் காணப்பட்டார். அவர்கள் விரும்பிய போர்க்கவசமும் இல்லை, வாளும் இல்லை.
7பிற இனத்தார் தங்களது பாசறையை அரண்செய்து வலிமைப்படுத்தியிருந்தனர் என்றும், போருக்குப் பயிற்சி பெற்ற குதிரைவீரர்கள் அதைச் சுற்றிக் காவல் புரிந்தார்கள் என்றும் யூதா கண்டார்.
8யூதா தம்மோடு இருந்தவர்களை நோக்கி, “அவர்களின் எண்ணிக்கையைக் கண்டு அஞ்சாதீர்கள்; அவர்கள் தாக்குவதைக் கண்டு கலங்காதீர்கள்.
9பார்வோன் தன் படையோடு நம் மூதாதையரைத் துரத்திவந்த போது, அவர்கள் எவ்வாறு செங்கடலில் காப்பாற்றப்பட்டார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.
10இப்போது விண்ணக இறைவனைத் துணைக்கு அழைப்போம்; ஆண்டவர் நம்மீது அன்பு செலுத்தி, நம் மூதாதையரோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, இந்தப் படையை நம் கண்முன் இன்று முறியடிப்பாரா எனப் பார்ப்போம்.
11இஸ்ரயேலை மீட்டுக் காப்பாற்றுகிறவர் ஒருவர் இருக்கிறார் எனப் பிற இனத்தார் அனைவரும் அப்போது அறிந்து கொள்வர்” என்றார்.
12அயல்நாட்டார் தலை நிமிர்ந்து பார்த்தபோது யூதர்கள் தங்களை எதிர்த்துவரக் கண்டனர்.
13உடனே போர்தொடுக்கத் தங்கள் பாசறையினின்று புறப்பட்டனர். யூதாவோடு இருந்தவர்களும் எக்காளம் முழக்கி,
14போர் தொடுத்தார்கள். பிற இனத்தார் முறியடிக்கப்பட்டுச் சமவெளிக்குத் தப்பியோடினர்.
15பின்னணிப் படையினர் எல்லாரும் வாளுக்கு இரையாயினர். மற்றவர்களைக் கசாரோ வரையிலும், இதுமேயாவின் சமவெளிகள் வரையிலும் ஆசோத்து யாம்னியா வரையிலும் துரத்திச் சென்றார்கள். அவர்களுள் மூவாயிரம் பேர் மடிந்தனர்.
16அவர்களைத் துரத்துவதை நிறுத்திவிட்டு யூதாவும் அவருடைய படைவீரர்களும் திரும்பிவந்தார்கள்.
17அவர் மக்களைநோக்கி, “கொள்ளைப் பொருள்கள்மீது பேராவல் கொள்ள வேண்டாம். போர் இன்னும் முடியவில்லை.
18கோர்கியாவும் அவனுடைய படைகளும் நமக்கு அருகிலேயே மலையில் இருக்கிறார்கள். இப்போது நம் பகைவர்களை எதிர்த்து நின்று போர்செய்யுங்கள்; பிறகு துணிவோடு கொள்ளைப் பொருள்களை எடுத்துச் செல்லலாம்” என்றார்.
19யூதா பேசிக்கொண்டிருந்தபோதே பிற இனத்தாரின் படையில் ஒரு பகுதியினர் கீழ் நோக்கிப் பார்த்த வண்ணம் மலைமீது காணப்பட்டனர்.
20அவர்கள் தங்களின் படைகள் துரத்தியடிக்கப்பட்டதையும் தங்களின் பாசறை தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதையும் கண்டார்கள்; அங்குக் காணப்பட்ட புகையால் நடந்ததை உணர்ந்து கொண்டார்கள்.
21அவர்கள் இதைப் பார்த்தபொழுது பெரிதும் அஞ்சினார்கள்; சமவெளியில் யூதாவின் படை போருக்கு அணிவகுத்து நின்றதையும் கண்டபோது,
22அவர்கள் எல்லாரும் பெலிஸ்தியரின் நாட்டுக்கு ஓடிப்போனார்கள்.
23யூதா அவர்களின் பாசறையைக் கொள்ளையிடுவதற்குத் திரும்பி வந்தார். அவருடைய வீரர்கள் மிகுதியான பொன், வெள்ளி, நீல, கருஞ் சிவப்பு நிறமுடைய ஆடைகள், பெரும் செல்வம் ஆகியவற்றைக் கைப்பற்றினார்கள்;
24“ஆண்டவர் நல்லவர்; அவரது இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது” என்று பாடி விண்ணக இறைவனைப் போற்றிய வண்ணம் தங்களது பாசறைக்குத் திரும்பினார்கள்.
25இவ்வாறு அன்று இஸ்ரயேலுக்குப் பெரும் மீட்புக் கிடைத்தது.

லீசியாவின் தோல்வி

26அயல்நாட்டவருள் தப்பியவர்கள் வந்து, நடந்த யாவற்றையும் லீசியாவிடம் அறிவித்தார்கள்.
27அவன் அவற்றைக் கேள்வியுற்று மனம் குழம்பி ஊக்கம் இழந்தான்; ஏனெனில் தான் எண்ணியவாறு இஸ்ரயேலுக்கு நடவாமலும், மன்னன் தனக்குக் கட்டளையிட்டவாறு நிறைவேறாமலும் போயிற்று.
28அடுத்த ஆண்டு லீசியா அவர்களை முறியடிக்க அறுபதாயிரம் தேர்ந்தெடுத்த காலாட்படையினரையும் ஐயாயிரம் குதிரைப்படையினரையும் திரட்டினான்.
29அவர்கள் இதுமேயா நாட்டுக்கு வந்து பெத்சூரில் பாசறை அமைக்கவே, யூதாவும் பத்தாயிரம் வீரர்களோடு அவர்களை எதிர்த்துவந்தார்.
30பகைவருடைய படை வலிமைமிக்கதாய் இருக்கக் கண்ட யூதா கடவுளை நோக்கி, “இஸ்ரயேலின் மீட்பரே, போற்றி! உம் அடியாராகிய தாவீதின் கைவன்மையால் வலியோனுடைய தாக்குதலை நீர் அடக்கினீர்; சவுலின் மகன் யோனத்தானும் அவருடைய படைக்கலம் சுமப்போரும் பெலிஸ்தியருடைய படைகளை முறியடிக்கச் செய்தீர்.
31அதேபோல் இந்தப் பகைவரின் படையை உம் மக்களாகிய இஸ்ரயேலின் கையில் சிக்கவைத்திடும்; தங்கள் படை, குதிரைவீரர்கள் பொருட்டு அவர்கள் நாணம் அடையச்செய்திடும்.
32அவர்களிடத்தில் கோழைத்தனத்தை ஊட்டி, அவர்களின் வலிமைத் திமிரை அடக்கிடும்; தங்களது அழிவு கண்டு அவர்களை அஞ்சி நடுங்கச் செய்திடும்.
33உம்மீது அன்பு செலுத்துகிறவர்களுடைய வாளால் அவர்களை அழித்திடும்; உமது பெயரை அறியும் யாவரும் புகழ்ப்பாக்களால் உம்மைப் போற்றச் செய்திடும்” என்று மன்றாடினார்.
34இரு படைகளும் போரிட்டுக் கொண்டன. நேருக்கு நேர் போரிட்டதில் லீசியாவின் படையில் ஐயாயிரம் பேர் மடிந்தனர்.
35தன் படையினர் நிலைகுலைந்து ஓடினதையும், யூதாவோடு இருந்தவர்கள் துணிவு கொண்டிருந்ததையும், அவர்கள் வாழவோ புகழோடு மாளவோ ஆயத்தமாய் இருந்ததையும் கண்ட லீசியா, அந்தியோக்கி நகரக்குச் சென்று, முன்னிலும் திரளான படையோடு யூதேயாவை மீண்டும் தாக்கக் கூலிப்படையினரைச் சேர்த்தான்.

கோவில் தூய்மைப்பாடு

36யூதாவும் அவருடைய சகோதரர்களும், “நம் பகைவர்கள் முறியடிக்கப்பட்டார்கள். இப்போது நாம் புறப்பட்டுப் போய்த் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்” என்றார்கள்.
37எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலைக்கு ஏறிச்சென்றார்கள்.
38திருஉறைவிடம் பாழடைந்திருந்ததையும், பலிபீடம் தீட்டுப்பட்டுக் கிடந்ததையும், கதவுகள் தீக்கிரையானதையும், காட்டிலும் மலையிலும் இருப்பதுபோல முற்றங்களில் முட்செடிகள் அடர்ந்திருந்ததையும், குருக்களுடைய அறைகள் இடிபட்டுக் கிடந்ததையும் அவர்கள் கண்டார்கள்;
39தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு பெரிதும் அழுது புலம்பி, தங்கள்மீது சாம்பலைத் தூவிக் கொண்டார்கள்;
40நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தார்கள்; எக்காளத்தால் அடையாள ஒலி எழும்பியதும் விண்ணக இறைவனை நோக்கி மன்றாடினார்கள்
.
41தாம் தூய இடத்தைத் தூய்மைப்படுத்தும்வரை கோட்டையில் இருந்தவர்களோடு போர்புரியும்படி யூதா சிலரை ஒதுக்கிவைத்தார்;
42திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டிருந்த குற்றமற்ற குருக்களைத் தேடிக்கொண்டார்.
43அவர்கள் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி, தீட்டுப்பட்ட கற்களை அழுக்கடைந்த இடத்தில் எறிந்துவிட்டார்கள்;
44தீட்டுப்பட்ட எரிபலிப் பீடத்தை என்ன செய்வது என்று அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள்;
45அதை வேற்றினத்தார் தீட்டுப்படுத்தியிருந்ததால், தங்களுக்குத் தொடர்ந்து இகழ்ச்சியாய் இராதவாறுஅதை இடித்துவிட வேண்டும் என்ற நல்ல முடிவுக்கு வந்தார்கள்; அவ்வாறே அதனை இடித்துவிட்டார்கள்.
46அக்கற்களை என்ன செய்வது என்று அறிவிக்க ஓர் இறைவாக்கினர் தோன்றும்வரை, அவற்றைக் கோவில் மலையில் தகுந்ததோர் இடத்தில் குவித்து வைத்தார்கள்;
47திருச்சட்டப்படி முழுக்கற்களைக்கொண்டு* முன்பு இருந்த வண்ணம் புதிய பலிபீடத்தைக் கட்டினார்கள்;
48தூயகத்தையும் கோவிலின் உட்பகுதிகளையும் பழுதுபார்த்தார்கள்; முற்றங்களையும் தூய்மைப்படுத்தினார்கள்;
49தூய கலன்களைப் புதிதாகச் செய்தார்கள்; விளக்குத் தண்டையும் தூபபீடத்தையும் காணிக்கை அப்ப மேசையையும் கோவிலுக்குள் கொண்டுவந்தார்கள்;
50பீடத்தின் மீது சாம்பிராணியைப் புகைத்துத் தண்டின்மீது இருந்த விளக்குகளை ஏற்றியதும் கோவில் ஒளிர்ந்தது;
51மேசைமீது அப்பங்களை வைத்துத் திரைகளைத் தொங்கவிட்டார்கள்; இவ்வாறு தாங்கள் மேற்கொண்ட வேலைகளையெல்லாம் செய்து முடித்தார்கள்.
52நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு* கிஸ்லேவு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்திருந்து,
53தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள்.
54வேற்றினத்தார் பலிபீடத்தைத் தீட்டுப்படுத்தியிருந்த அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது. அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும் யாழ்களும் கைத்தாளங்களும் முழங்கின.
55எல்லா மக்களும் குப்புற விழுந்து தங்களுக்கு வெற்றி அளித்த விண்ணக இறைவனை வழிபட்டு வாழ்த்தினார்கள்;
56பலிபீட அர்ப்பணிப்பு விழாவை எட்டு நாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு எரிபலிகளைச் செலுத்தினார்கள்; நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள்;
57பொன் முடிகளாலும் குமிழ்களாலும் கோவிலின் முகப்பை அணிசெய்து, வாயில்களையும் அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள்.
58மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது; வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது.
59ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், அதாவது கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள்வரை அக்களிப்போடும் அகமகிழ்வோடும் பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட யூதாவும் அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு செய்தார்கள்.
60முன்புபோல வேற்றினத்தார் உள்ளே சென்று தீட்டுப்படுத்தாதவாறு அவர்கள் சீயோன் மலையைச் சுற்றிலும் உயர்ந்த மதில்களையும் உறுதியான காவல்மாடங்களையும் அப்போது எழுப்பினார்கள்.
61மேலும் காவற்படை ஒன்றை யூதா அங்கு நிறுத்தினார்; இதுமேயாவுக்கு எதிரே இஸ்ரயேல் மக்களுக்குக் கோட்டையாக விளங்கும்படி பெத்சூரையும் வலுப்படுத்தினார்.

4:8 2 மக் 8:16. 4:9 விப 14:10-31. 4:24 திபா 118:1-29; 136:1. 4:26-35 2 மக் 11:1-12. 4:30 1 சாமு 17:41-54; 14:1-23. 4:36-61 2 மக் 10:1-8. 4:50 2 மக் 10:3. 4:56 2 குறி 7:8-9.
4:47 ‘உளி படாத கற்களைக்கொண்டு’ என்பது மூலப்பாடம் (காண் விப 20:25; இச 27:5-6). 4:52 கி.மு. 164.