1திரிபோவை எதிர்த்துப் போரிட உதவி கேட்கும்படி நூற்று எழுபத்திரண்டாம் ஆண்டு* தெமேத்திரி மன்னன் தன் படைகளைத் திரட்டிக்கொண்டு மேதியாவுக்குச் சென்றான்;
2தெமேத்திரி தன் எல்லைக்குள் நுழைந்துவிட்டான் என்று பாரசீகம், மேதியா நாடுகளின் மன்னனான அர்சாகு கேள்விப்பட்டு அவனை உயிரோடு பிடித்துத் தன்னிடம் கொண்டு வருவதற்காகத் தன் படைத்தலைவர்களுள் ஒருவனை அனுப்பினான்.
3அவன் சென்று தெமேத்திரியின் படையை முறியடித்து அவனைப் பிடித்து அர்சாகு அரசனிடம் கூட்டிச் சென்றான். அரசன் அவனைச் சிறையில் அடைத்தான்.

சீமோனின் புகழ்ச்சி

4சீமோனுடைய காலம் முழுவதும் யூதா நாடு அமைதியாய் இருந்தது. அவர் தம் இனத்தாரின் நலனையே நாடினார். அவருடைய அதிகாரமும் மாட்சியும் அவர்தம் ஆட்சிக்காலம் முழுவதும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தன.
5யாப்பா நகர்த் துறைமுகத்தைக் கைப்பற்றினார்; தீவுகளுக்குச் செல்லும் வாயிலாக அதை அமைத்தார்; இச்செயல் அவரது மாட்சிக்கே மணிமுடி ஆயிற்று.
6தம் அரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார்; நாட்டைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
7மிகப் பல போர்க் கைதிகளை ஒன்றுசேர்த்தார்; கசாராவையும் பெத்சூரையும் எருசலேம் கோட்டையையும் அடிபணியச்செய்தார்; கோட்டையிலிருந்து தீட்டுகளை நீக்கித் தூய்மைப்படுத்தினார். அவரை எதிர்த்தெழ யாரும் இல்லை.
8மக்கள் தங்கள் நிலத்தை அமைதியாகப் பயிரிட்டு வந்தார்கள்; நிலம் நல்ல விளைச்சலைத் தந்தது; சமவெளி மரங்கள் கனி கொடுத்தன.
9மூப்பர்கள் அனைவரும் தெருக்களில் அமர்ந்தார்கள்; நடந்த நல்லவைபற்றிக் கூடிப் பேசினார்கள்; இளைஞர்கள் பகட்டான போருடைகளை அணிந்தார்கள்.
10சீமோன் உணவுப்பொருள்களைச் சேகரித்து நகரங்களுக்கு வழங்கினார்; பாதுகாப்புக்கான வழிவகைகளை அமைத்துக் கொடுத்தார். அவரது மாட்சியின் புகழ் உலகின் கடை எல்லைவரை பரவியது.
11அவரது நாட்டில் அமைதி நிலவியது; இஸ்ரயேலில் மகிழ்ச்சி பொங்கிவழிந்தது.
12அனைவரும் அவரவர்தம் திராட்சைக்கொடிக்கு அடியிலும் அத்தி மரத்துக்கு அடியிலும் அமைதியாக அமர்ந்திருந்தனர்; அவர்களை அச்சுறுத்துவார் எவரும் இல்லை.
13நாட்டில் இஸ்ரயேலரை எதிர்க்க எவரும் இல்லை; அக்காலத்தில் எதிரி நாட்டு மன்னர்களும் முறியடிக்கப்பட்டார்கள்.
14அவர் தம் மக்களுள் நலிந்தோர் அனைவருக்கும் வலுவூட்டினார். திருச்சட்டத்தின் மீது பற்றார்வம் கொண்டிருந்தார்; நெறிகெட்டவர்களையும் தீயவர்களையும் அழித்தொழித்தார்.
15அவர் திருஉறைவிடத்தை மாட்சிமைப்படுத்தினார்; திரளான கலன்களால் அதை அணிசெய்தார்.

உரோமை, ஸ்பார்த்தாவோடு ஒப்பந்தம்

16யோனத்தான் இறந்ததுபற்றி உரோமையர்கள் கேள்விப்பட்டார்கள்; ஸ்பார்த்தர்களுக்கும் அச்செய்தி எட்டியது. அவர்கள் எல்லாரும் பெரிதும் வருந்தினார்கள்.
17அவருக்குப் பதிலாக அவருடைய சகோதரரான சிமோன் தலைமைக் குருவானார் என்றும் நாட்டையும் அதன் நகரங்களையும் ஆண்டுவந்தார் என்றும் ஸ்பார்த்தர்கள் கேள்வியுற்றார்கள்.
18அவருடைய சகோதரர்களான யூதாவோடும் யோனத்தானோடும் தாங்கள் முன்பு செய்திருந்த நட்புறவையும் ஒப்பந்தத்தையும் புதுப்பிக்கும்படி வெண்கலத் தகடுகளில் அவருக்கு எழுதியனுப்பினார்கள்.
19அவை எருசலேமில் சபை முன்னிலையில் படிக்கப்பட்டன.
20ஸ்பார்த்தர்கள் அனுப்பியிருந்த மடலின் நகல் பின்வருமாறு; “தலைமைக் குருவாகிய சீமோனுக்கும் மூப்பர்களுக்கும் குருக்களுக்கும் மற்ற யூத மக்களாகிய எங்கள் சகோதரர்களுக்கும் ஸ்பார்த்தாவின் ஆளுநர்களும் நகரத்தாரும் வாழ்த்துக் கூறி எழுதுவது;
21எங்கள் மக்களிடம் நீங்கள் அனுப்பிய தூதர்கள் உங்கள் பெருமை, புகழ் பற்றி எங்களுக்கு அறிவித்தார்கள். நாங்களும் அவர்களது வருகையினால் மகிழ்ச்சி அடைந்தோம்.
22அவர்கள் சொன்ன யாவற்றையும் நாங்கள் பொதுப் பதிவேடுகளில் பின்வருமாறு எழுதிக் கொண்டோம்; ‘யூதர்களுடைய தூதர்களான அந்தியோக்கின் மகன் நூமேனியும், யாசோன் மகன் அந்திப்பாத்தரும் எங்களோடு தங்களுக்குள்ள நட்புறவைப் புதுப்பித்துக் கொள்ள எங்களிடம் வந்தார்கள்.
23அவர்களைச் சிறப்புடன் வரவேற்கவும், அவர்கள் கூறிய சொற்களை ஸ்பார்த்தர்கள் தங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுமாறு பொது ஆவணங்களில் அவற்றை எழுதி வைக்கவும் மக்கள் விருப்பம் கொண்டார்கள். இவற்றின் நகல் ஒன்றைத் தலைமைக் குருவாகிய சீமோனுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.’”
24இதன் பிறகு, உரோமையர்களோடு செய்திருந்த ஒப்பந்தத்தை உறுதிசெய்ய ஆயிரம் மினா* எடையுள்ள ஒரு பெரிய பொற் கேடயத்தோடு நூமேனியைச் சீமோன் உரோமைக்கு அனுப்பினார்.
25இஸ்ரயேல் மக்கள் இவற்றைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, “ சீமோனுக்கும் அவருடைய மைந்தர்களுக்கும் நாங்கள் எவ்வாறு நன்றி செலுத்துவோம்?
26ஏனெனில் அவரும் அவருடைய சகோதரர்களும் அவருடைய தந்தை வீட்டாரும் உறுதியாக இருந்தார்கள்; இஸ்ரயேலின் பகைவர்களோடு போரிட்டு அவர்களைத் துரத்தியடித்தார்கள்; இவ்வாறு அதன் விடுதலையை நிலை நாட்டினார்கள்” என்று சொல்லி வியந்தார்கள். எனவே இச்சொற்களை வெண்கலத் தகடுகளில் பொறித்துச் சீயோன் மலையில் இருந்த தூண்கள்மீது வைத்தார்கள்.
27இதுதான் அவர்கள் எழுதியதன் நகல்: “சீமோன் பெரிய தலைமைக் குருபீடப் பொறுப்பு ஏற்ற மூன்றாம் ஆண்டாகிய நூற்று எழுபத்திரண்டாம் ஆண்டு* எலூல் மாதம் பதினெட்டாம் நாள் அசராமேலில்**
28குருக்கள், மக்கள், மக்களின் தலைவர்கள், நாட்டின் மூப்பர்கள் ஆகியொர் கூடியிருந்த பேரவையில் பின்வருமாறு எங்களுக்கு அறிவிக்கப்பட்டது:
29‘நாட்டில் அடிக்கடிபோர் மூண்டதால், யோவாரிபின் வழிமரபில் வந்த குருவான மத்தத்தியாசின் மகன் சீமோன் அவருடைய சகோதரர்களும் தங்கள் உயிரையே பணயம் வைத்தார்கள்; தங்கள் திருஉறைவிடத்தையும் திருச்சட்டத்தையும் காப்பதற்குத் தங்கள் நாட்டின் பகைவர்களை எதிர்த்தார்கள்; இவ்வாறு தங்கள் நாட்டுக்குச் சீரிய பெருமை சேர்த்தார்கள்.
30யோனத்தான் தம் இனத்தாரை ஒன்றுகூட்டினார்; அவர்களின் தலைமைக் குருவானார்; தம் நாட்டு மக்களோடு துயில்கொண்டார்.
31பகைவர்கள் அவர்களின் நாட்டின்மீது படையெடுக்கவும் அவர்களது திருஉறைவிடத்தைக் கைப்பற்றவும் திட்டமிட்டார்கள்.
32அப்போது சீமோன் ஆர்த்தெழுந்து தம் இனத்தாருக்காகப் போர் செய்தார்; தம் நாட்டின் படைவீரர்களுக்குப் படைக்கலங்களும் ஊதியமும் வழங்குவதில் திரளான சொந்தப் பணத்தைச் செலவழித்தார்;
33யூதேயாவின் நகர்களையும், குறிப்பாக யூதேயாவின் எல்லையில் இருந்த பெத்சூரையும் வலுப்படுத்தினார்; முன்பு பகைவர்கள் தங்கள் படைக்கலங்களைச் சேமித்து வைத்திருந்த அந்நகரில் யூதக் காவற்படையை நிறுவினார்;
34கடலோரத்தில் இருக்கும் யாப்பாவையும் முன்பு பகைவர்கள் கைப்பற்றியிருந்த அசோத்து எல்லையில் உள்ள கசாராவையும் வலுப்படுத்தி அவ்விடங்களிலும் யூதர்களைக் குடியேற்றினார்; அங்குஅவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையானவையெல்லாம் கொடுத்தார்.
35‘மக்கள் சீமோனின் பற்றுறுதியையும் தம் இனத்தாருக்கு அவர் பெற்றுத்தர எண்ணியிருந்த பெருமையையும் கண்டு அவரைத் தங்கள் தலைவராகவும் தலைமைக் குருவாகவும் ஏற்படுத்தினார்கள்; ஏனென்றால் அவர் தம் இனத்தார்பால் நீதியுணர்வும் பற்றுறுதியும் கொண்டு எல்லா வகையிலும் தம் மக்களைப் பெருமைப்படுத்த விரும்பிப் பணிகள் பல செய்திருந்தார்.
36அவரது காலத்தில் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. நாட்டினின்று பிற இனத்தார் துரத்தப்பட்டனர்; தாவீதின் நகராகிய எருசலேமில் கோட்டை ஒன்று அமைத்து அதிலிருந்து புறப்பட்டுத் திருஉறைவிடத்தின் சுற்றுப்புறத்தைத் தீட்டுப்படுத்தி, அதன் தூய்மைக்குப் பெரும் களங்கம் உண்டாக்கியிருந்தோரும் துரத்தப்பட்டனர்.
37சீமோன் எருசலேம் கோட்டையில் யூதர்களைக் குடியேற்றி நாட்டினுடையவும் நகரினுடையவும் பாதுகாப்புக்காக அதை வலுப்படுத்தி நகர மதில்களை உயர்த்தினார்.
38இவற்றின்பொருட்டு தெமேத்திரி மன்னன் சீமோனைத் தலைமைக் குருவாகத் தொடர்ந்து இருக்கச் செய்தான்;
39தன் நண்பர்களுள் ஒருவராக உயர்த்திப் பெரிதும் பெருமைப்படுத்தினான்.
40ஏனென்றால் உரோமையர்கள் யூதர்களைத் தங்களின் நண்பர்கள், தோழர்கள், சகோதரர்கள் என்று அழைத்ததைப்பற்றியும், சீமோனுடைய தூதர்களைச் சிறப்புடன் வரவேற்றதைப்பற்றியும் கேள்விப்பட்டிருந்தான்.
41‘எனவே யூதர்களும் அவர்களின் குருக்களும் கீழ்க்கண்டவாறு முடிவு செய்தார்கள்: நம்பிக்கையுள்ள இறைவாக்கினர் ஒருவர் தோன்றும் வரை காலமெல்லாம் சீமோனே தங்கள்தலைவரும் தலைமைக் குருவுமாய் இருக்க வேண்டும்;
42அவரே தங்களுக்கு ஆளுநராக இருக்கவேண்டும்; தங்கள் திருஉறைவிடத்தின் பொறுப்பை அவர் ஏற்று அதன் பணிகளுக்கும் நாட்டுக்கும் படைக்கலங்களுக்கும் கோட்டைகளுக்கும் பொறுப்பாளிகளை ஏற்படுத்தவேண்டும். திருஉறைவிடத்தின் பொறுப்பு அவருக்கே உரியது.
43அனைவரும் அவருக்குக் கீழ்ப்படியவேண்டும்; அவர் பெயராலேயே நாட்டின் எல்லா ஒப்பந்தங்களையும் எழுதவேண்டும்; அவர் கருஞ்சிவப்பு ஆடையும் பொன் அணிகலன்களும் அணிந்துகொள்ளவேண்டும்.
44‘இம்முடிவுகளுள் எதையும் செயலற்றதாக்கவோ அவருடைய கட்டளைகளை எதிர்க்கவோ அவரது இசைவின்றி மக்களவையைக் கூட்டவோ, அரசருக்குரிய கருஞ்சிவப்பு ஆடை உடுத்திக்கொள்ளவோ, பொன் அணியூக்கு அணிந்து கொள்ளவோ மக்கள், குருக்கள் ஆகியோருள் யாருக்கும் உரிமை இல்லை.
45இம்முடிவுகளுக்கு எதிராகச் செயல்புரிவோர் அல்லது இவற்றுள் எதையும் மீறுவோர் தண்டனைக்கு ஆளாவார்.
46‘இவற்றின்படி செயல்புரியும் உரிமையைச் சீமோனுக்கு அளிக்க மக்கள் அனைவரும் உடன்பட்டார்கள்.
47சீமோனும் இதற்கு இசைந்து தலைமைக்குருவாகவும் படைத்தளபதியாகவும் யூதர்களுக்கும் குருக்களுக்கும் ஆட்சியாளராகவும் அனைவருக்கும் காப்பாளராகவும் இருக்க ஒப்புக்கொண்டார்’.”
48இம்முடிவுகளை வெண்கலத்தகடுகளில் பொறித்துத் திருஉறைவிடத்தின் வாளகத்திற்குள் எல்லாரும் காணக்கூடிய இடத்தில் அவற்றை வைக்க அவர்கள் கட்டளையிட்டார்கள்.
49சீமோனுக்கும் அவருடைய மைந்தர்களுக்கும் பயன்படுமாறு அவற்றின் நகல்களைக் கருவூலத்தில் வைக்கவும் ஆணையிட்டார்கள்.

14:18 1 மக் 8:22.
14:1 கி.மு. 140. 14:24 ஒரு ‘மினா’ என்பது 1300 ‘திராக்மா’வுக்குச் சமம். ஒரு ‘திராக்மா’ என்பது தொழிலாளியின் ஒருநாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம். 14:27 இச்சொல்லின் பொருள் தெரியவில்லை; ‘இறைமக்களின் முற்றம்’ என்பதற்கான எபிரேயச் சொல்லின் கிரேக்க ஒலிபெயர்ப்பாக இருக்கலாம். 14:27 கி.மு. 140.