உரோமையோடும் ஸ்பார்த்தாவோடும் உடன்படிக்கை
1காலம் தமக்கு ஏற்றதாக இருந்ததைக் கண்ட யோனத்தான் சிலரைத் தேர்ந்தெடுத்து உரோமையர்களோடு தமக்குள்ள நட்புறவை உறதிப்படுத்திப் புதுப்பிக்க அவர்களை உரோமைக்கு அனுப்பினார்;
2அதே நோக்குடன் ஸ்பார்த்தாவுக்கும் மற்ற இடங்களுக்கும் மடல்கள் விடுத்தார்.
3அவர்கள் உரோமைக்குச் சென்று ஆட்சிமன்றத்தில் நுழைந்து, “தலைமைக் குரு யோனத்தானும் யூத இனத்தாரும் உங்களோடு முன்பு கொண்டிருந்த நட்புறவையும் ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க எங்களை அனுப்பியுள்ளார்கள்” என்று சொன்னார்கள்.
4இந்தத் தூதர்கள் பாதுகாப்புடன் தங்கள் நாடு சென்றடைய உதவும்படியாக, அவர்கள் கடந்து செல்ல வேண்டிருந்த நாடுகளின் தலைவர்களுக்கு எழுதப்பட்டிருந்த மடல்களை உரோமையர்கள் அவர்களிடம் கொடுத்தார்கள்.
5யோனத்தான் ஸ்பார்த்தர்களுக்கு எழுதிய மடலின் நகல் இதுதான்;
6“தலைமைக் குருவான யோனத்தானும் நாட்டின் ஆட்சிக்குழுவினரும் குருக்களும் மற்ற யூத மக்களும் தங்களின் சகோதரர்களான ஸ்பார்தர்களுக்கு வாழ்த்துக் கூறி எழுதுவது;
7உங்கள் நாட்டை ஆண்டுவந்த ஆரியு, ‘நீங்கள் எங்கள் சகோதரர்கள்’ என்று எங்கள் தலைமைக்குருவான ஓனியாவுக்கு முன்பு எழுதியனுப்பியிருந்தார். அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
8நீங்கள் அனுப்பிய தூதரை ஓனியா மரியாதையுடன் வரவேற்றார்; ஒப்பந்தம், நட்புறவு, ஆகியனபற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருந்த மடலையும் பெற்றுக் கொண்டார்.
9எங்களிடம் இருக்கும் திருநூல்கள் எங்களுக்கு ஊக்கம் ஊட்டுவதால் இத்தகைய ஒப்பந்தம் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை.
10எனினும் உங்களோடு நாங்கள் கொண்டுள்ள சகோதர உணர்வையும் நட்புறவையும் புதுப்பிக்க உங்களுக்கு மடல் அனுப்பியுள்ளோம்; ஏனென்றால் உங்களோடு நாங்கள் கொண்டுள்ள நட்புறவை முறித்துக் கொள்ள விரும்பவில்லை. மேலும் உங்களிடமிருந்து மடல் வந்து வெகு காலம் ஆயிற்று.
11நாங்கள் எங்கள் திரு நாள்களிலும் மற்றச் சிறப்பு நாள்களிலும் செய்யும் பலிகளிலும் வேண்டுதல்களிலும் இடைவிடாமல் உங்களை நினைவுகூர்கிறோம்; ஏனெனில் சகோதரர்களை நினைவு கூர்வது நல்லதும் பொருத்தமும் ஆகும்.
12உங்கள் புகழ் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
13பல துன்பங்களும் போர்களும் எங்களைச் சூழ்ந்துகொண்டிருந்தன; சுற்றிலும் இருந்த மன்னர்கள் எங்களை எதிர்த்துப் போர் செய்தார்கள்.
14இந்தப் போர்களில் உங்களுக்கோ மற்ற நட்பு நாடுகளுக்கோ நம் நண்பர்களுக்கோ தொந்தரவு கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.
15விண்ணக இறைவனின் உதவி எங்களுக்கு இருந்ததால் எங்கள் பகைவர்களிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்பட்டோம்; எங்கள் பகைவர்கள் முறியடிக்கப்பட்டார்கள்.
16ஆதலால் அந்தியோக்கின் மகன் நூமேனியையும் யாசோனின் மகன்அந்திப்பாத்தரையும் தேர்ந்தெடுத்து, உரோமையர்களோடு நாங்கள் முன்பு கொண்டிருந்த நட்புறவையும் ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க அவர்களிடம் அனுப்பியிருக்கிறோம்.
17உங்களிடம் வந்து உங்களுக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு அவர்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறோம். நமக்கிடையே உள்ள சகோதர உறவைப் புதுப்பிப்பது தொடர்பான எங்கள் மடலை அவர்கள் உங்களிடம் கொடுப்பார்கள்.
18எங்களுடைய மடலுக்குப் பதில் எழுதும்படி இப்போது கேட்டுக்கொள்கிறோம்.”
19ஸ்பார்த்தர்கள் ஓனியாவுக்கு விடுத்த மடலின் நகல் இதுதான்:
20“ஸ்பார்த்தர்களின் மன்னர் ஆரியு தலைமைக் குரு ஓனியாவுக்கு வாழ்த்துக்கூறி எழுதுவது:
21ஸ்பார்த்தர்களும் யூதர்களும் சகோதரர்கள் என்பதும் ஆபிரகாமின் வழிமரபினர் என்பதும் ஆவணத்தில் காணப்படுகின்றன.
22நாங்கள் இப்போது இதை அறியவந்திருப்பதால் உங்கள் நலனைப்பற்றி நீங்கள் எங்களுக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
23உங்கள் கால்நடைகளும் உடைமைகளும் எங்களுக்குச் சொந்தமாகும்; எங்களுடையவை உங்களுக்குச் சொந்தமாகும் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். இதை உங்களுக்கு எடுத்துரைக்க எங்கள் தூதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறோம்.”
யோனத்தானும் சீமோனும் புரிந்த போர்கள்
24தெமேத்திரியின் படைத்தளபதிகள் முந்தியதைவிடப் பெரிய படையோடு தம்மை எதிர்த்துப் போரிடத் திரும்பிவந்திருப்பதை யோனத்தான் கேள்வியுற்றார்;
25தம்முடைய நாட்டுக்குள் அவர்கள் நுழைவதை விரும்பாததால் எருசலேமைவிட்டுப் புறப்பட்டு ஆமாத்து நாட்டில் அவர்களை எதிர்கொண்டார்;
26அவர்களின் பாசறைக்கு ஒற்றர்களை அனுப்பினார். அவர்கள் திரும்பி வந்து, பகைவர்கள் இரவில் யூதர்களைத் தாக்க அணிவகுத்திருப்பதாக அவருக்கு அறிவித்தார்கள்.
27கதிரவன் மறைந்தபோது தம்முடைய ஆள்கள் போருக்கு இரவு முழுவதும் படைக்கலங்களோடு விழித்திருக்குமாறு யோனத்தான் கட்டளையிட்டார்; பாசறையைச் சுற்றிலும் காவற்படையினரை நிறுத்தினார்.
28யோனத்தானும் அவருடைய ஆள்களும் போருக்கு முன்னேற்பாடாய் இருந்தார்கள் என்று பகைவர்கள் கேள்விப்பட்டு அஞ்சி மனக்கலக்கமுற்றார்கள். தங்களது பாசறைக்கு நடுவே தீமூட்டி விட்டு ஓடிவிட்டார்கள்.
29யோனத்தானும் அவருடைய ஆள்களும் தீ எரிவதைக் கண்டார்கள். ஆனால் எதிரிகள் ஓடிவிட்டதைப் பொழுது விடியுமட்டும் அறியவில்லை.
30யோனத்தான் அவர்களைத் துரத்திச் சென்றார்; ஆனால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை; ஏனெனில் எலூத்தர் ஆற்றை அவர்கள் ஏற்கனவே கடந்துவிட்டார்கள்.
31ஆகவே சபதேயர் என்று அழைக்கப்பெற்ற அரேபியரை நோக்கி யோனத்தான் திரும்பிச் சென்று அவர்களை முறியடித்துக் கொள்ளையடித்தார்;
32பிறகு அங்கிருந்து புறப்பட்டுத் தமஸ்கு நகருக்குச் சென்று அந்த மாநிலம் முழுவதும் சுற்றிப்பார்த்தார்.
33சீமோனும் புறப்பட்டு அஸ்கலோனுக்கும் அதை அடுத்த கோட்டைகளுக்கும் சென்றார்; பின் யாப்பா பக்கம் திரும்பி அதைக் கைப்பற்றினார்;
34ஏனெனில் தெமேத்திரியின் ஆள்களிடம் யாப்பாவின் மக்கள் தங்கள் கோட்டையை ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்தார்கள் என்று கேள்விப்பட்டிருந்தார்; அதைக் காப்பதற்குக் காவற்படை ஒன்றை நிறுவினார்.
35-36யோனத்தான் திரும்பி வந்து மக்களின் மூப்பர்களை ஒன்று கூட்டினார்; யூதேயாவில் கோட்டைகளைக் கட்டவும், எருசலேமின் மதில்களை இன்னும் உயரமாக எழுப்பவும், கோட்டைக்கும் நகருக்கும் நடுவே உயர்ந்த தடுப்புச்சுவர் எழுப்பிக் காவற்படையினர் நகருக்குள் சென்று எதையும் வாங்கவோ விற்கவோ கூடாதவாறு கோட்டையை நகரினின்று துண்டித்து விடவும் அவர்களோடு சேர்ந்து திட்டமிட்டார்.
37ஆகவே நகரை வலுப்படுத்த எல்லாரும் கூடிவந்தனர்; எனெனில் கிழக்கே பள்ளத்தாக்குக்கு மேல் இருந்த மதிலின் ஒரு பகுதி ஏற்கனவே விழுந்து விட்டது. கப்பனாத்தா என்று அழைக்கப்பெற்ற பகுதியையும் அவர் பழுது பார்த்தார்.
38அதே போன்று செபேலா பகுதியில் அதிதா நகரைச் சீமோன் கட்டியெழுப்பிக் கதவுகளும் தாழ்ப்பாள்களும் அமைத்து அதை வலுப்படுத்தினார்.
39அப்போது ஆசியாவின் அரசனாகி முடிபுனையவும் அந்தியோக்கு மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யவும் திரிபோ வழிதேடினான்;
40அதற்கு யோனத்தான் தன்னை அனுமதிக்கமாட்டார் என்றும், தன்னை எதிர்த்துப் போர்செய்வார் என்றும் அஞ்சி அவரைப் பிடித்துக் கொல்ல முயற்சி செய்தான்; அங்கிருந்து புறப்பட்டுப் பெத்சானை அடைந்தான்.
41யோனத்தான் நாற்பதாயிரம் தேர்ந்தெடுத்த படைவீரர்களொடு திரிபோவை எதிர்த்துப் பெத்சான் சென்றடைந்தார்.
42யோனத்தான் பெரும் படையோடு வந்திருப்பதைத் திரிபோ கண்டு அவரை எதிர்த்துத் தாக்க அஞ்சினான்;
43அதற்கு மாறாக, அவரைச் சிறப்போடு வரவேற்றுத் தன் நண்பர்கள் அனைவரிடமும் அவரை அறிமுகம் செய்துவைத்து, அவருக்கு அன்பளிப்புகள் வழங்கினான்; தனக்குக் கீழ்ப்படிவதுபோலவே அவருக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்று தன் நண்பர்களுக்கும் படை வீரர்களுக்கும் கட்டளையிட்டான்.
44பின் யோனத்தானை நோக்கி, “நமக்கிடையே போரே இல்லாத சூழ்நிலையில் இவ்வீரர்கள் எல்லாருக்கும் இத்துணை தொல்லை கொடுப்பானேன்?
45ஆதலால் இப்போது இவர்களை வீடுகளுக்கு அனுப்பிவிடும். உம்முடன் இருக்கச் சிலரை மட்டும் தேர்ந்துகொண்டு என்னோடு தாலமாய் நகருக்கு வாரும். அதையும் மற்றக் கோட்டைகளையும் எஞ்சியிருக்கும் படைகளையும் அலுவலர்கள் அனைவரையும் உம்மிடம் ஒப்படைத்துவிட்டு நான் வீடு திரும்புவேன். இதற்காகவே நான் இங்கு வந்தேன்” என்றான்.
46யோனத்தான் அவனை நம்பி அவன் சொற்படி செய்து தம் படைகளை அனுப்பிவிட்டார். அவர்கள் யூதேயா நாட்டுக்குத் திரும்பினார்கள்.
47ஆனால் அவர் தம்மோடு மூவாயிரம் வீரர்களை வைத்துக் கொண்டார்; இவர்களுள் இரண்டாயிரம் பேரைக் கலிலேயாவில் விட்டுச் சென்றார்; எஞ்சியிருந்த ஆயிரம் பேர் அவருடன் சென்றனர்.
48யோனத்தான் தாலமாய் நகருக்குள் நுழைந்தபோது அந்த நகரத்தார் வாயில்களை அடைத்து அவரைப் பிடித்துக் கொண்டனர்; அவருடன் சென்றவர்கள் எல்லாரையும் வாளுக்கு இரையாக்கினர்.
49மேலும் யோனத்தானுடைய வீரர்கள் எல்லாரையும் கொல்வதற்குக் காலாட்படையினரையும் குதிரைவீரர்களையும் கலிலேயாவுக்கும் பெரிய சமவெளிக்கும் திரிபோ அனுப்பினான்.
50யோனத்தானுடைய ஆள்களுடன் அவரும் பிடிபட்டுக் கொல்லப்பட்டார் என்று அவருடைய மற்ற வீரர்கள் எண்ணி, ஒருவர் மற்றவருக்கு ஊக்கமூட்டிப் போருக்கு அணிவகுத்துச் சென்றார்கள்.
51துரத்திவந்த பகைவர்கள், தங்கள் உயிருக்காக இவர்கள் போராடத் துணிந்திருந்ததைக் கண்டு திரும்பி விட்டார்கள்.
52இவர்கள் அனைவரும் பாதுகாப்போடு யூதேயா நாட்டுக்குத் திரும்பிச் சென்ற யோனத்தானுக்காகவும் அவருடன் மடிந்தவர்களுக்காகவும் துயரம் கொண்டாடினார்கள். அவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது. இஸ்ரயேல் நாடு முழுவதும் துயரில் ஆழ்ந்து புலம்பியது.
53சுற்றியிருந்த பிற இனத்தார் அனைவரும் அவர்களை அழித்தொழிக்கத் தேடினார்கள்; ஏனெனில் அவர்கள், “இவர்களுக்குத் தலைவனோ உதவியாளனோ இல்லை. ஆதலால் இப்போது இவாகள்மீது நாம் போர்தொடுத்து, மனிதர்களிடையே இவர்களின் நினைவு அற்றுப் போகும்படி செய்வோம்” என்று சொல்லியிருந்தார்கள்.