யோனத்தான் தலைமைக் குருவாதல்
1நூற்று அறுபதாம் ஆண்டு* அந்தியோக்கின் மகன் அலக்சாண்டர் எப்பிப்பான் தாலமாய் நகரை அடைந்து அதைப் பிடித்தான். மக்கள் அவனை ஏற்றுக்கொள்ளவே அவன் அங்கு ஆட்சி செலுத்தினான்.
2மன்னன் தெமேத்திரி இதைக் கேள்வியுற்று மாபெரும் படையைத் திரட்டிப் போர்முனையில் அவனைச் சந்திக்கப் புறப்பட்டான்.
3யோனத்தானைப் பெருமைப்படுத்துவதற்காக தெமேத்திரி அமைதிச் சொற்கள் கொண்ட மடல் ஒன்றை அவருக்கு அனுப்பினான்.
4அவன், “யோனத்தான் நமக்கு எதிராக அலக்சாண்டரோடு சமாதானம் செய்துகொள்வதற்கு முன்பே நாம் சமாதானம் செய்து கொள்ள முந்திக் கொள்வோம்;
5ஏனெனில் யோனத்தானுக்கும் அவனுடைய சகோதரர்களுக்கும் அவனுடைய இனத்தாருக்கும் நாம் செய்த தீமைகள் யாவற்றையும் அவன் நினைவில் கொண்டிருப்பான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
6ஆதலால் தெமேத்திரி படை திரட்டவும் படைக்கலங்களைச் செய்யவும் யோனத்தானுக்கு அதிகாரம் அளித்து, அவரைத் தன் கூட்டாளியாக்கிக்கொண்டான்; கோட்டையில் இருந்த பிணைக்கைதிகளை அவரிடம் ஒப்படைக்கக் கட்டளையிட்டான்
.
7யோனத்தான் எருசலேமுக்கு வந்து எல்லா மக்களும் கோட்டைக்குள் இருந்தவர்களும் கேட்கும்படி மடலைப் படித்தார்.
8படை திரட்ட அவருக்கு மன்னன் அதிகாரம் அளித்திருந்தான் என்று மக்கள் கேள்வியுற்றபோது அவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது.
9கோட்டையில் இருந்தவர்கள் யோனத்தானிடம் பிணைக்கைதிகளை ஒப்புவித்தார்கள். அவர் அவர்களுடைய பெற்றோர்களிடம் அவர்களை ஒப்படைத்தார்.
10யோனத்தான் எருசலேமில் வாழ்ந்து அந்நகரைக் கட்டவும் புதுப்பிக்கவும் தொடங்கினார்;
11மதில் எழுப்பவும் சீயோன் மலையைச் சுற்றிச் சதுரக் கற்களால் கட்டி அதை வலுப்படுத்தவும் பணியாளர்களுக்குக் கட்டளையிட்டார். அவ்வண்ணமே அவர்கள் செய்தார்கள்.
12பாக்கீது கட்டியிருந்த கோட்டைகளுக்குள் வாழ்ந்த அயல் நாட்டினர் தப்பியோடினர்;
13ஒவ்வொருவரும் தாம் இருந்த இடத்தைவிட்டு அகன்று தம் சொந்த நாடுபோய்ச் சேர்ந்தனர்.
14திருச்சட்டத்தையும் கட்டளைகளையும் கைவிட்ட சிலர் பெத்சூரில் மட்டும் தங்கியிருந்தனர்; ஏனெனில் அது ஓர் அடைக்கல நகர்.
15தெமேத்திரி யோனத்தானுக்கு கொடுத்திருந்த எல்லா உறுதிமொழிகள் பற்றியும் அலக்சாண்டர் மன்னன் கேள்விப்பட்டான். அவரும் அவருடைய சகோதரர்களும் செய்த போர்கள், புரிந்த தீரச் செயல்கள், அடைந்த தொல்லைகள்பற்றியும் அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
16ஆகவே அவன், “இவரைப்போன்ற ஒரு மனிதரை நாம் காணக்கூடுமோ? இப்போது அவரை நாம் நம்முடைய நண்பரும் கூட்டாளியுமாகக் கொள்வோம்” என்று சொன்னான்.
17அவன் யோனத்தானுக்கு ஒரு மடல் எழுதியனுப்பினான். அது பின்வருமாறு;
18“அலக்சாண்டர் மன்னர் தம் சகோதரனாகிய யோனத்தானுக்கு வாழ்த்துக் கூறி எழுதுவது;
19நீர் சிறந்த வீரர் என்றும், எம் நண்பராய் இருக்கத் தகுதியள்ளவர் என்றும் உம்மைப்பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம்.
20ஆதலால், இன்று உம்மை உம் இனத்தாருக்குத் தலைமைக் குருவாக ஏற்படுத்துகிறோம். நீர் மன்னருடைய நண்பர் என அழைக்கப்படுவீர். நீர் எங்கள் பக்கம் இருந்து எங்களோடு உள்ள நட்பை நிலைக்கச் செய்யவேண்டும்.”
அவன் மடலோடு அரசவுடையையும் பொன்முடியையம் யோனத்தானுக்கு அனுப்பிவைத்தான்.
21நூற்று அறுபதாம் ஆண்டு* ஏழாம் மாதம் கூடாரத்திருவிழாவின்போது யோனத்தான் தலைமைக்குருவுக்குரிய திருவுடைகளை அணிந்துகொண்டார்; படை திரட்டினார்; படைக்கலன்களைப் பெருமளவில் தருவித்தார்.
அலக்சாண்டருக்கு யோனத்தானின் ஆதரவு
22தெமேத்திரி இதைக் கேள்வியுற்றுத் துயரம் அடைந்தான்.
23“அலக்சாண்டர் தம்மை வலுப்படுத்திக் கொள்ளும்பொருட்டு யூதர்களுடைய நட்பை அடைய முந்திக்கொண்டார். நாம் வாளாவிருந்து விட்டோமே!
24நானும் அவர்களுக்கு ஊக்கமூட்டும் சொற்களை எழுதி அவர்கள் எனக்கு உதவியாக இருக்கும்படி அவர்களுக்கு உயர் பதவிகளையும் அன்பளிப்புகளையும் வழங்குவேன்” என்று சொல்லிக்கொண்டான்.
25தெமேத்திரி யூதர்களுக்கு எழுதியனுப்பிய செய்தி வருமாறு:
“தெமேத்திரி மன்னன் யூத இனத்தாருக்கு வாழ்த்துக் கூறி எழுதுவது:
26நீங்கள் எம்மோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களைக் காப்பாற்றி வந்திருக்கிறீர்கள் என்றும், எங்களோடு உள்ள நட்பில் நிலைத்திருக்கிறீர்கள் என்றும், எம்முடைய பகைவர்களோடு நீங்கள் கூட்டுச்சேரவில்லை என்றும் நாம் கேள்வியுற்று மகிழ்ச்சி அடைகிறோம்.
27தொடர்ந்து எம்மட்டில் பற்றுறுதி கொண்டிருங்கள். நீங்கள் எமக்குச் செய்துவரும் யாவற்றுக்கும் கைம்மாறாக உங்களுக்கு நன்மை செய்வோம்.
28உங்களுக்குப் பல வரிவிலக்குகளை அளிப்போம்; நன்கொடைகள் வழங்குவோம்.
29திறை, உப்புவரி, அரசருக்குரிய சிறப்பு வரி ஆகியவற்றினின்று இப்போது யூத மக்கள் எல்லாரையும் விடுவித்து அவர்களுக்கு விலக்குரிமை அளிக்கிறேன்.
30உங்கள் தானியத்தில் மூன்றில் ஒரு பகுதியும் மரங்களின் கனிகளில் பாதியும் முறைப்படி எனக்குச் சேர வேண்டும். ஆனால் இன்றுமுதல் இந்த உரிமையை விட்டுக் கொடுக்கிறேன். யூதேயா நாட்டிலிருந்தும் சமாரியா, கலிலேயாவிலிருந்து பிரித்து யூதேயாவோடு இணைத்த மூன்று மாவட்டங்களிலிருந்தும் இன்றுமுதல் எக்காலமும் இவற்றைத் தண்டல் செய்யமாட்டேன்.
31எருசலேமும் அதன் எல்லைகளும் தூய்மையானவையாய் இருக்கும்; பத்திலொரு பங்கு, சுங்கவரி ஆகியவற்றினின்று விலக்கு உடையவாகவும் இருக்கும்.
32எருசலேமில் உள்ள கோட்டையின்மீது எனக்கு இருக்கும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்கிறேன்; அதைக் காப்பதற்காகத் தலைமைக் குரு தேர்ந்து கொள்ளும் மனிதரை நியமித்துக் கொள்ள அவருக்கு அதிகாரம் அளிக்கிறேன்;
33எனது நாடெங்கும் இருக்கும் யூதேயா நாட்டுப் போர்க் கைதிகள் அனைவரையும் மீட்புப் பணமின்றி விடுவிக்கிறேன். அவர்கள் எல்லாரும் வரிகளிலிருந்து விடுதலை பெறுவார்கள்; கால்நடை வரியிலிருந்தும் விடுதலை பெறுவார்கள்.
34எல்லாத் திருநாள்களையும் ஓய்வுநாள்களையும் அமாவாசை நாள்களையும் குறிப்பிட்ட நாள்களையும் திருவிழாவுக்கு முந்தின மூன்று நாள்களையும் பிந்தின மூன்று நாள்களையும் எனது அரசுக்கு உட்பட்ட எல்லா யூதருக்கும் விலக்குரிமை நாள்களாகவும் வரிவிலக்கு நாள்களாகவும் ஏற்படுத்துகிறேன்.
35இந்நாள்களில் யாரையும் கட்டாயப்படுத்தி எதையும் வாங்கவோ எதை முன்னிட்டும் தொந்தரவு செய்யவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.
36“யூதருள் முப்பதாயிரம் பேர் மன்னரின் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர். மன்னரின் படை வீரர்கள் எல்லாருக்கும் கொடுக்கப்படுவதுபோல் இவர்களுக்கும் ஊதியம் வழங்கப்படும்.
37இவர்களுள் சிலர் மன்னருடைய பெரிய கோட்டைகளில் நியமிக்கப்படுவர்; வேறு சிலர் அரசின் நம்பிக்கைக்குரிய பணிகளில் அமர்த்தப்படுவர். யூதேயா நாட்டு மக்களுக்கு மன்னர் அறிவித்துள்ள சலுகைகளுக்கு ஏற்ப இவர்களின் அதிகாரிகளும் தலைவர்களும் இவர்களிடமிருந்தே எழுவார்களாக; இவர்கள் தங்கள் சட்டங்களின்படி நடப்பார்களாக.”
38“சமாரியாவிலிருந்து பிரித்து யூதேயாவோடு இணைத்த மூன்று மாவட்டங்களும் யூதேயாவின் ஒரு பகுதியாகி ஒரே தலைவரின்கீழ் இருக்கட்டும். இவை தலைமைக்குருவுக்கே அன்றி வேறு எவருக்கும் பணிய வேண்டியதில்லை.
39எருசலேமில் உள்ள திருஉறைவிடச்செலவுக்காகத் தாலமாய் நகரையும் அதைச் சேர்ந்த நிலத்தையும் திருஉறைவிடத்திற்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளேன்.
40மேலும் குறிப்பிட்ட இடங்களிலிருந்து கிடைக்கும் அரச வருவாயில் நூற்று எழுபது கிலோ* வெள்ளியை ஆண்டுதோறும் கொடுப்பேன்;
41தொடக்க காலத்தில் அரசு அலுவலர்கள் கொடுத்து வந்து, பின்னர் கொடாது விட்ட கூடுதல் நிதியை இனிமேல் கோவில் திருப்பணிக்குக் கொடுக்கும்படி செய்வேன்.
42மேலும் திருஉறைவிடத் திருப்பணி வருமானத்திலிருந்து இதுவரை என் அதிகாரிகள் ஆண்டுதோறும் பெற்றுவந்த ஏறத்தாழ அறுபது கிலோ* வெள்ளியை அவர்கள் இனிப் பெறமாட்டார்கள். இத்தொகை அங்குத் திருப்பணி புரிந்துவரும் குருக்களைச் சேரும்.
43ஒருவர் மன்னருக்காவது வேறு யாருக்காவது கடன்பட்டிருந்தால், அவர் எருசலேமில் உள்ள கோவிலிலோ அதன் எல்லைகளிலோ தஞ்சம் புகுந்தால் அவர் விடுதலை பெறுவார்; என் அரசில் அவருக்கு உள்ள உடைமை எதுவும் பறிமுதல் செய்யப்படமாட்டாது.
44திருஉறைவிட வேலைப்பாடுகளைப் பழுது பார்த்துப் புதுப்பிப்பதற்கு ஏற்படும் செலவு அரசு வருவாயிலிருந்து கொடுக்கப்படும்.
45அதேபோன்று எருசலேம் மதில்களைக் கட்டுவதற்கும் அதைச் சுற்றிலும் வலுப்படுத்துவதற்கும் யூதேயாவில் மதில்களை எழுப்புவதற்கும் ஆகும் செலவும் அரச வருவாயிலிருந்து கொடுக்கப்படும்.”
46யோனத்தானும் மக்களும் மேற்குறித்த சொற்களைக் கேட்டபோது அவற்றை நம்பவில்லை, ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஏனென்றால் தெமேத்திரி இஸ்ரயேலுக்குப் பெரும் தீங்கு செய்திருந்ததையும் அவர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
47அலக்சாண்டரே முதலில் அமைதிச் சொற்களை அவர்களிடம் பேசியிருந்ததால் அவர்கள் அவன் சார்பாய் இருக்கும்படி முடிவு செய்தார்கள்; எப்போதும் அவனுடைய கூட்டாளிகளாய் இருந்தார்கள்.
48அலக்சாண்டர் மன்னன் பெரும்படை திரட்டித் தெமேத்திரியை எதிர்த்துப் பாசறை அமைத்தான்.
49இரண்டு மன்னர்களும் போர்தொடுத்தார்கள். தெமேத்திரியின் படை தப்பியோடியது. அலக்சாண்டர் அதைத் துரத்திச் சென்ற முறியடித்தான்;
50கதிரவன் மறையும்வரை கடுமையாகப் போர்புரிந்தான். தெமேத்திரி அன்று மடிந்தான்.
51அலக்சாண்டர் எகிப்தின் மன்னன் தாலமிக்குத் தூதர்கள் வழியாகச் சொல்லியனுப்பிய செய்தி பின்வருமாறு:
52“நான் என் நாட்டுக்குத் திரும்பி விட்டேன்; என் மூதாதையரின் அரியணையில் அமர்ந்துள்ளேன்; ஆட்சியை நிலைநாட்டியுள்ளேன்; தெமேத்திரியைத் தோற்கடித்தேன்; எங்கள் நாட்டை என் உடைமையாக்கிக்கொண்டேன்.
53அவனோடு போர்தொடுத்து அவனையும் அவனுடைய படைகளையும் முறியடித்து அவனது அரியணையில் அமர்ந்துள்ளேன்.
54ஆதலால் இப்போது நாம் ஒருவர் மற்றவரோடு நட்புறவு உண்டாக்கிக்கொள்வோம். உம் மகளை எனக்கு மணமுடித்துக்கொடும். நான் உம் மருமகனாய் இருப்பேன். உமது தகுதிக்கு ஏற்ற அன்பளிப்புகளை உமக்கும் அவளுக்கும் வழங்குவேன்.”
55தாலமி மன்னன் அவனுக்கு மறுமொழியாக, “நீர் உம் மூதாதையரின் நாட்டுக்குத் திரும்பி வந்து அரியணை ஏறிய நாள் நன்னாள்.
56நீர் எழுதியுள்ளபடி நான் உமக்குச் செய்வேன். நாம் ஒருவரோடு ஒருவர் பார்த்துப் பேசும்படி நீர் தாலமாய் நகருக்கு வாரும். நீர் கேட்டபடி நான் உமக்கு மாமனார் ஆவேன்” என்று சொல்லி அனுப்பினான்.
57ஆதலால் தாலமியும் அவனுடைய மகள் கிளியோபத்ராவும் எகிப்தை விட்டுப் புறப்பட்டு, நூற்று அறுபத்திரண்டாம் ஆண்டு* தாலமாய்க்குச் சென்றார்கள்.
58அலக்சாண்டர் மன்னன் அவனைச் சந்தித்தான். தாலமி தன் மகள் கிளியோபத்ராவை அலக்சாண்டருக்கு மணமுடித்துக்கொடுத்தான்; மன்னர்களின் வழக்கப்படி தாலமாயில் அவளுடைய மணவிழாவைச் சீரும் சிறப்பமாகக் கொண்டாடினான்.
59அலக்சாண்டர் மன்னன் தன்னைவந்து சந்திக்கும்படி யோனத்தானுக்கு எழுதினான்.
60அவரும் சீர் சிறப்புடன் தாலமாய்க்கு வந்து இரு மன்னர்களையும் சந்தித்தார்; அவர்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் பொன், வெள்ளியோடு பல அன்பளிப்புகளும் கொடுத்தார்; அவர்களது நல்லெண்ணத்தைப் பெற்றார்.
61இஸ்ரயேலிலிருந்து வந்திருந்த நச்சுப் பேர் வழிகளும் நெறிகெட்டவர்களும் ஒன்றுசேர்ந்து யோனத்தான்மீது குற்றம் சாட்டினார்கள்; ஆனால் மன்னன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.
62மாறாக யோனத்தானின் எளிய உடையைக் களைந்துவிட்டு அவருக்கு அரசவுடை அணிவிக்கும்படி மன்னன் கட்டளையிட்டான். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
63மன்னன் அவரைத் தன் அருகில் அமரும்படி செய்தான்; “நீங்கள் இவருடன் நகரின் நடுவே சென்று இவர்மீது எவனும் எக்காரியத்திலும் குற்றம் சாட்டக் கூடாது என்றும், எக்காரணத்தை முன்னிட்டும் இவருக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்றும் அறிவியுங்கள்” என்று தன் அலுவலர்களிடம் கூறினான்.
64அறிவித்தபடி, யோனத்தானுக்கு அரச மரியாதை அளிக்கப்பட்டதையும் அவர் அரசவுடை அணிந்திருப்பதையும் குற்றம் சாட்டியவர்கள் எல்லாரும் கண்டபோது தப்பியோடிவிட்டார்கள்.
65இவ்வாறு மன்னன் அவரைப் பெருமைப்படுத்தித் தம் முக்கிய நண்பர்களுள் ஒருவராக ஏற்றுக்கொண்டு படைத்தளபதியாகவும் ஆளுநராகவும் ஏற்படுத்தினான்.
66அமைதியோடும் அக்களிப்போடும் யோனத்தான் எருசலேம் திரும்பினார்.
யோனத்தானின் வெற்றி
67தெமேத்திரியின் மகன் தெமேத்திரி நூற்று அறுபத்தைந்தாம் ஆண்டு* கிரேத்து நாட்டினின்று தன் மூதாதையருடைய நாட்டிற்கு வந்தான்.
68அலக்சாண்டர் மன்னன் இதைப்பற்றிக் கேள்விப்பட்டுப் பெரிதும் வருத்தமுற்று அந்தியோக்கி நகருக்குத் திரும்பினான்.
69கூலேசிரியாவின் ஆளுநராக அப்பொல்லோனைத் தெமேத்திரி நியமித்தான். அவன் பெரும்படை திரட்டி யாம்னியாவுக்கு எதிரே பாசறை அமைத்தான்; பிறகு தலைமைக் குருவாகிய யோனத்தானுக்குச் சொல்லியனுப்பிய செய்தி பின்வருமாறு;
70“நீர் மட்டுமே எங்களை எதிர்த்தெழுகிறீர். உம்மால் நான் ஏளனத்துக்கும் பழிச்சொல்லுக்கும் உள்ளாகிறேன். மலைகளில் எங்களுக்கு எதிராய் நீர் அதிகாரம் செலுத்துவது ஏன்?
71உம் படை மீது உமக்கு நம்பிக்கை இருந்தால் எங்களிடம் சமவெளிக்கு இறங்கிவாரும். நம்மில் வலிமைமிக்கவர் யார் என அங்குத் தெரிந்து கொள்ளலாம்; ஏனெனில் நகரங்களின் படை என் பக்கம் உள்ளது.
72நான் யார் என்றும், எங்களுடன் உதவிக்கு வந்துள்ளவர்கள் யார் என்றும் கேட்டுத் தெரிந்து கொள்ளும். எங்களை எதிர்த்து நிற்க உம்மால் முடியாது என மக்கள் சொல்வார்கள்; ஏனெனில் உம் மூதாதையர் தங்கள் சொந்த நாட்டிலேயே இருமுறை முறியடிக்கப்பட்டார்கள்.
73ஓடி மறைந்து கொள்ளப் பாறையோ கல்லோ இடமோ இல்லாத இந்தச் சமவெளியில் என்னுடைய குதிரைப் படையையும் இத்துணைப் பெரிய காலாட்படையையும் உம்மால் எதிர்த்து நிற்க முடியாது.”
74அப்பொல்லோனின் சொற்களைக் கேட்ட யோனத்தான் சீற்றமுற்றார்; பத்தாயிரம் பேரைத் தேர்ந்து கொண்டு எருசலேமைவிட்டுப் புறப்பட்டார். அவருடைய சகோதரரான சீமோன் அவருக்கு உதவி செய்யும் பொருட்டு அவரோடு சேர்ந்துகொண்டார்.
75யாப்பாவுக்கு எதிரே யோனத்தான் பாசறை அமைத்தார். யாப்பாவில் அப்பொல்லோனின் காவற்படை இருந்ததால் மக்கள் யோனத்தானை நகருக்குள் விடாது அதன் வாயில்களை மூடிக் கொண்டார்கள். ஆகையால் அவர் நகரைத் தாக்கினார்.
76நகரில் இருந்தவர்கள் அஞ்சி வாயில்களைத் திறக்கவே, யாப்பா நகரை யோனத்தான் கைப்பற்றினார்.
77இதை அறிந்த அப்பொல்லோன் மூவாயிரம் குதிரை வீரரையும் எண்ணற்ற காலாட்படையினரையும் திரட்டி, நீண்ட பயணம் செய்யவேண்டியவன் போல் அசோத்து நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்; அதே நேரத்தில் சமவெளியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான்; ஏனெனில் அவனிடம் பெரியதொரு குதிரைப்படை இருந்தது; அதில் அவன் முழு நம்பிக்கை கொண்டிருந்தான்.
78யோனத்தான் அவனை அசோத்துவரை துரத்தினார். படைகள் போரில் இறங்கின.
79ஆயிரம் குதிரைவீரர்கள் யோனத்தானின் ஆள்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்குமாறு அப்பொல்லோன் ஏற்பாடு செய்திருந்தான்.
80பதுங்கிப் பாய்வோர் தமக்குப் பின்னால் இருக்கிறார்கள் என்று யோனத்தான் அறிந்தார்; ஏனென்றால் அவர்கள் அப்பொல்லோனின் படையைச் சுற்றி வளைத்துக் கொண்டு காலைமுதல் மாலைவரை அவருடைய ஆள்கள்மீது அம்புகள் எய்துகொண்டிருந்தார்கள்.
81யோனத்தான் கட்டளையிட்டபடி அவருடைய ஆள்கள் உறுதியோடு நின்றார்கள். ஆனால் எதிரிகளின் குதிரைகள் சோர்ந்துபோயின.
82குதிரைவீரர்கள் களைத்துப்போயிருந்ததால் சீமோன் தம் படையை நடத்திச்சென்று பகைவரின் காலாள்களை எதிர்த்துப் போரிட்டு முறியடிக்கவே அவர்கள் தப்பியோடினார்கள்.
83சமவெளியெங்கும் சிதறிப்போயிருந்த குதிரை வீரர்கள் அசோத்து நகருக்குத் தப்பியோடி, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தங்களுடைய தெய்வத்தின் சிலை இருந்த பெத்தாகோன் என்னும் கோவிலில் புகுந்துகொண்டார்கள்.
84யோனத்தான் அசோத்தையும் அதைச் சுற்றிலும் இருந்த நகரங்களையும் சூறையாடியபின் அவற்றைத் தீக்கிரையாக்கினார்; தாகோன் கோவிலையும் அதில் அடைக்கலம் புகுந்திருந்தவர்களையும் நெருப்பால் அழித்தார்.
85வாளுக்கிரையானவர்களும் தீக்கிரையானவர்களும் எண்ணாயிரம் பேர்.
86யோனத்தான் அவ்விடமிருந்து புறப்பட்டு அஸ்கலோனுக்கு எதிரே பாசறை அமைத்தார். அந்நகர மக்கள் சீர் சிறப்புடன் அவரைச் சந்திக்க வந்தார்கள்.
87யோனத்தான் தம்மோடு இருந்தவர்களுடன் திரளான கொள்ளைப் பொருள்களோடு எருசலேம் திரும்பினார்.
88அலக்சாண்டர் இந்நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்பட்டபோது யோனத்தானை மேலும் பெருமைப்படுத்தினான்.
89மன்னர்களின் நெருங்கிய உறவினர்களுக்குக் கொடுக்கும் வழக்கப்படி, அவருக்குப் பொன் தோளணி ஒன்று அனுப்பினான். மேலும் எக்ரோனையும் அதைச் சேர்ந்த இடங்கள் எல்லாவற்றையும் அவருக்கு உரிமைச்சொத்தாக வழங்கினான்.
10:30 1 மக் 11:34. 10:72 1 சாமு 4:2-10. 10:89 1 மக் 11:58.