தானியேல் (இ) முன்னுரை


தானியேல் என்னும் நூல் விவிலியத்தின் கிரேக்கத் திருமுறையில் மூன்று பெரும் இணைப்புகளைக் கொண்டுள்ளது:

  1. இளைஞர் மூவரின் பாடல்: பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் நிறுவிய பொற்சிலையை வணங்க மறுத்ததற்காக அனனியா, மிசாவேல், அசரியா என்ற மூன்று இளைஞர்கள் சூளையில் எறியப்பட்டார்கள். இத்தகைய தீங்குகளினின்று தங்களையும் தங்கள் மக்கள் இஸ்ரயேலரையும் விடுவிக்குமாறு ஆண்டவரிடம் அசரியா மன்றாட (1 - 22), அவரும் அவர்களைப் பாதுகாத்தார் (23 -27). பின் அம்மூவரும் சேர்ந்து ஆண்டவருக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்தனர் (28-67).

    இப்பகுதி ‘உல்காத்தா’ எனப்படும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் தானி 3:24-90 ஆகக் காணப்பாடுகிறது.

  2. சூசன்னா: யூத ஒழுக்கத்தின்படி அப்பழுக்கற்றவராய் வாழ்ந்துவந்த சூசன்னாவின் பேரழகில் மயங்கிய முதியோர் இருவர் காமுற்று அவரை அடைய முயன்றனர் (1-27). அது நிறைவேறாததால் அவர்மீது பொய்க்குற்றம் சுமத்தி, அவருக்குச் சாவுத் தண்டனை விதித்தனர் (28-41). ஆண்டவரோ தானியேல் வழியாக அவருக்கு முறையான தீர்ப்பு வழங்கி, அவரைச் சாவின் பிடியிலிருந்து விடுவித்தார் (42-64).

    இலத்தீன் பாடத்தில் இப்பகுதி, தானியேல் நூலின் 13ஆம் அதிகாரமாக இடம்பெறுகிறது.

  3. பேல் தெய்வமும் அரக்கப்பாம்பும்: இப்பகுதி எரேமியா இறைவாக்கினரின் சொற்களை (51:34,35,41) அடிப்படையாகக் கொண்டது. பேல் என்னும் தெய்வம் முழுமுதற் கடவுள் அல்ல என்பது இதன்மூலம் தெளிவாகிறது (1-22). இதே போன்று, பாபிலோனியர் வணங்கிவந்த அரக்கப்பாம்பும் கடவுள் அல்ல என்பது வெளிப்படுகிறது (23-30). இவற்றுடன் இறைவாக்கினர் அபகூக்குப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றும் இணைக்கப்படுகிறது (33-39). இறுதியில் ஆண்டவர் தானியேலைச் சிங்கக் குகையினின்று வியத்தகு முறையில் விடுவிப்பது விளக்கப்படுகிறது (31-32, 40-42).

    இலத்தீன் பாடத்தில் இப்பகுதி, தானியேல் நூலின 14ஆம் அதிகாரமாக இடம்பெறுகிறது.

இப்பகுதிகள் மூன்றும் கிரேக்க மொழியில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். ‘செப்துவாசிந்தா’ பாடத்தை விடத் தெயொதோசியோன் மொழிபெயர்ப்பு தொன்மை வாய்ந்தது; ஆதலால் இதுவே இங்கு மூலபாடமாக அமைகிறது.

‘இஸ்ரயேலின் கடவுள் அனைத்துலகிற்கும் ஆண்டவர் ஆவார்; அவர் வரலாற்றில் குறுக்கிட்டுத் தம்மில் நம்பிக்கை கொள்வோரை எவ்வகைத் துன்பத்திலிருந்தும் காப்பாற்றுவார்’ என்ற தானியேல் நூலினது எபிரேய மொழி வடிவத்தில் நாம் காணும் மையக் கருத்தையே இம்மூன்று பகுதிகளும் வலியுறுத்துகின்றன.