பாரூக்கு முன்னுரை


இறைவாக்கினர் எரேமியாவின் செயலரான பாரூக்கு இந்நூலை எழுதினார் என்பது மரபுவழிச் செய்தி. வெவ்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்ட ஐந்து சிறிய தனித்தனிப் பகுதிகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, கி.மு. முதல் நூற்றாண்டில் தனி நூலாகப் பாரூக்கின் பெயரில் வெளியிடப்பட்டன என்பர் அறிஞர். நூலின் மையப் பகுதி (3:9-5:9) கவிதை நடையில் அமைந்துள்ளது.

கடவுளையும் அவரது திருச்சட்டத்தையும் கைவிட்டமையே இஸ்ரயேலர் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதற்குரிய காரணம்; எனவே அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுக் கடவுள்பால் மனந்திரும்பி (1:1-3:8), உண்மை ஞானமாகிய திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து நடந்தால் (3:9-4:4), கடவுள் அவர்களது அடிமைத்தனத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு மீட்பை அருள்வார் (4:5-5:9) என்னும் செய்தியை இந்நூல் வலியுறுத்துகிறது.

எரேமியாவின் மடல் என அழைக்கப்படும் இறுதிப் பகுதி (6:1-72; காண் 2 மக் 2:1-3) பிற இனத்தார் நடுவே பழக்கத்தில் இருந்த சிலைவழிபாட்டை வன்மையாகக் கண்டிப்பதன்மூலம், முழு முதற் கடவுள்மீது பற்றுறுதி கொள்ளுமாறு இஸ்ரயேலரைத் தூண்டுகிறது (காண் எரே 10:1-16; எசா 44:6-20). கிரேக்க மூலத்தில் பாரூக்கு 5ஆம் அதிகாரத்தைத் தொடர்ந்து ‘புலம்பல்’ நூல் இடம்பெற, அதன் பின்னரே எரேமியாவின் மடல் காணப்படுகிறது. இருப்பினும் ‘உல்காத்தா’ எனப்படும் இலத்தின் பாடத்தைப் பின்பற்றிக் கத்தோலிக்க மரபு இம்மடலைப் பாரூக்கு 6ஆம் அதிகாரமாகப் பார்க்கிறது.

நூலின் பிரிவுகள்

  1. முகவுரை 1:1 - 9
  2. எருசலேமுக்கு விடுக்கப்பட்ட மடல் 1:10 - 3:8
  3. ஞானத்தின் புகழ்ச்சி 3:9 - 4:4
  4. எருசலேமின் புலம்பலும் நம்பிக்கையும் 4:5 - 5:9
  5. எரேமியாவின் மடல் 6:1 - 72