1“எனவே, நமக்கும் இஸ்ரயேலை வழிநடத்திவந்த நம் நீதித் தலைவர்கள், மன்னர்கள், தலைவர்கள், யூதா நாட்டு மக்கள், இஸ்ரயேல் நாட்டு மக்கள் ஆகிய அனைவருக்கும் எதிராகத் தாம் கூறியிருந்த வாக்கை ஆண்டவர் நிறைவேற்றினார்.
2எருசலேமுக்கு நேரிட்ட பெருங்கேடுகள் போன்று வானத்தின்கீழ் வேறெங்கும் இதுவரை நிகழ்ந்ததேயில்லை. மோசேயின் சட்டத்தில் எழுதியுள்ளவாறே இவை அனைத்தும் நிகழ்ந்தன.
3இதனால் நாம் ஒவ்வொருவரும் நம் சொந்தப் புதல்வர், புதல்வியருடைய சதையையே தின்னவேண்டியிருந்தது.
4மேலும், ஆண்டவர் இஸ்ரயேல் மக்களை நம்மைச் சுற்றிலும் உள்ள எல்லா அரசுகளுக்கும் அடிமைகளாய் இருக்கும்படி ஒப்படைத்தார்; அண்டை நாட்டார் அனைவர் நடுவிலும் அவர்களைச் சிதறடித்தார்; பழிச்சொல்லுக்கும் பாழ்நிலைக்கும் உள்ளாக்கினார்.
5இவ்வாறு, நாம் உயர்த்தப்படாமல் தாழ்த்தப்பட்டோம்; ஏனெனில் நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குப் பணிந்து நடக்காமல் அவருக்கு எதிராய்ப் பாவம் செய்தோம்.”
6“நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நீதி உரியது. ஆனால் நமக்கும் நம் மூதாதையருக்கும் இன்று போலத் தலைக்குனிவுதான் உரியது.
7ஆண்டவர் நமக்கு அறிவித்திருந்த இக்கேடுகள் அனைத்தும் நம்மை வந்தடைந்தன.
8ஆயினும் நாம் ஒவ்வொருவரும் நம் தீய உள்ளத்தின் போக்கிலிருந்து மனம் மாறும்படி ஆண்டவர் திருமுன் கெஞ்சி மன்றாடவில்லை.
9ஆகையால் ஆண்டவர் நம் தீய செயல்களை விழிப்புடன் கவனித்து, அவற்றுக்கு உரிய தண்டனையை நம்மீது சுமத்தினார். ஏனெனில் அவர் நமக்குக் கட்டளையிட்டிருந்த செயல்களை அனைத்திலும் நீதி பிறழாதவர்.
10இருப்பினும் நாம் அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; அவர் நமக்குக் கொடுத்த கட்டளைகளின்படி நடக்கவுமில்லை.

விடுதலைக்காக மன்றாட்டு

11“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! கை வன்மையாலும் அடையாளங்களாலும் வியத்தகு செயல்களாலும் மாபெரும் ஆற்றலாலும் ஓங்கிய புயத்தாலும் எகிப்து நாட்டிலிருந்து உம் மக்களை அழைத்து வந்தீர்; அதனால் இன்று வரை உமக்குப் புகழ் தேடிக்கொண்டீர்.
12எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, நாங்கள் பாவம் செய்தோம்; இறைப்பற்றில்லாதவர்களாய் வாழ்ந்தோம்; உம்முடைய நீதிநெறிகள் எல்லாவற்றையும் மீறி நடந்தோம்.
13உமது சீற்றம் எங்களைவிட்டு நீங்கட்டும்; ஏனென்றால் வேற்றினத்தார் நடுவே உம்மால் சிதறடிக்கபட்டுள்ள நாங்கள் எண்ணிக்கையில் குறைந்துள்ளோம்.
14ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுக்கும் விண்ணப்பத்துக்கும் செவிசாயும்; உம் பெயரின் பொருட்டு எங்களை விடுவியும். எங்களை நாடுகடத்தியோர் எங்கள்மீது இரக்கம் காட்டச் செய்யும்.
15இதனால் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் நீரே என்பதை உலகம் முழுவதும் அறிந்துகொள்ளும்; ஏனெனில் இஸ்ரயேலும் அவர் வழிமரபினரும் உமது பெயரைத் தாங்கியுள்ளனர்.”
16“ஆண்டவரே, உமது தூய இல்லத்திலிருந்து எங்களைக் கண்ணோக்கும்; எங்களை நினைவுகூரும்.
17ஆண்டவரே, எங்களுக்குச் செவிசாயும்; உம் கண்களைத் திறந்து பாரும்; ஏனெனில், உயிர் உடலைவிட்டுப் பிரிந்த நிலையில் பாதாளத்திற்குச் சென்றோர் ஆண்டவரின் மாட்சியையும் நீதிச்செயல்களையும் அறிக்கையிடமாட்டார்கள்.
18ஆனால், ஆண்டவரே, மிகவும் துன்புற்று, குனிவுற்று, தளர்வுற்று, பார்வை குன்றிப் பசியுற்றுத் திரியும் மனிதரே உம் மாட்சியையும் நீதியையும் அறிக்கையிடுவர்.”
19“எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள் மூதாதையர்கள், மன்னர்கள் ஆகியோருடைய நீதிச் செயல்களை முன்னிட்டு உம் திருமுன் நாங்கள் உமது இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடவில்லை.
20உம் அடியார்களாகிய இறைவாக்கினர்கள் வாயிலாக நீர் கூறியிருந்தவாறு உம் சினத்தையும் சீற்றத்தையும் எங்கள்மீது காட்டினீர்.”
21அவர்கள் உரைத்தது பின்வருமாறு; “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீங்கள் தாள் பணிந்து பாபிலோன் மன்னருக்கு பணிவிடை புரிவீர்களாயின் நான் உங்கள் மூதாதையருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் தொடர்ந்து வாழ்வீர்கள்.
22ஆனால், நீங்கள் ஆண்டவரின் குரலுக்குச் செவிசாய்க்காமலும் பாபிலோனிய மன்னருக்கு பணிவிடை புரியாமலும் இருந்தால்,
23யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் தெருக்களிலும் மகிழ்ச்சியின் ஒலியும் அக்களிப்பின் ஆரவாரமும் மணமக்களின் குரலொலியும் அற்றுப்போகச் செய்வேன். நாடு முழுவதும் குடியிருப்பாராற்றுப் பாழடைந்துபோகும்.”
24“ஆனால் நாங்கள் உமது குரலுக்குச் செவிகொடுக்கவுமில்லை; பாபிலோனிய மன்னருக்கு பணிவிடை புரியவுமில்லை. எனவே உம் அடியார்களாகிய இறைவாக்கினர்கள் வாயிலாக நீர் கூறியிருந்ததை நிறைவேற்றினீர்; அதாவது, எங்கள் மன்னர்களின் எலும்புகளும் மூதாதையர்களின் எலும்புகளும் அவர்களுடைய கல்லறைகளினின்று வெளியேற்றப்பட்டன. அவை வெளியே எறியப்பட்டு,
25இதோ! பகலின் வெயிலிலும் இரவின் குளிரிலும் கிடக்கின்றன. அவர்கள் பஞ்சம், வாள், கொள்ளைநோய் ஆகிய கொடுந்துயர்களுக்கு இரையாகி மடிந்தார்கள்.
26இஸ்ரயேல் வீட்டாரும் யூதா வீட்டாரும் தீச்செயல் புரிந்ததால், உமது பெயர் விளங்கும் இல்லத்தை இன்றுள்ள கீழ் நிலைக்கு உள்ளாகிவிட்டீர்.”
27“ஆயினும் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உமது பரிவுக்கும் இரக்கப் பெருக்கத்திற்கும் ஏற்ப நீர் எங்களை நடத்திவந்திருக்கிறீர்.
28இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் உமது திருச்சட்டத்தை எழுதுமாறு உம் அடியார் மோசேக்குக் கட்டளையிட்ட நாளில் அவர் வாயிலாக நீர் மொழிந்தது இதுவே;
29‘நீங்கள் என் குரலுக்குச் செவிசாய்க்காவிட்டால், இம்மாபெரும் மக்கள் கூட்டத்தை மிகவும் சிறியதாக்கி, வேற்றினத்தார் நடுவே சிதறடிப்பேன்.
30அவர்கள் எனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், அவர்கள் யாருக்கும் வணங்காதவர்கள்; ஆனால் தாங்கள் அடிமைகளாக இருக்கும் நாட்டில் தங்கள் இயல்பான நிலைக்கு திரும்புவார்கள்.
31அப்பொழுது தங்கள் கடவுளாகிய ஆண்டவர் நான்தான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். ஏனெனில், கீழ்ப்படியும் உள்ளத்தையும் கேட்கக்கூடிய செவிகளையும் நான் அவர்களுக்குக் கொடுப்பேன்.
32அவர்கள் தாங்கள் அடிமைகளாக இருக்கும் நாட்டில் என்னைப் புகழ்வார்கள்; என் பெயரை நினைவுகூர்வார்கள்.
33தங்கள் பிடிவாதத்தினின்றும் தீச்செயல்களினின்றும் மனந்திரும்புவார்கள்; ஏனெனில் ஆண்டவர் முன்னிலையில் பாவம் செய்திருந்த தங்கள் மூதாதையரின் வழிகளை நினைவுகூர்வார்கள்.
34அவர்களின் தந்தையராகிய ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு ஆகியோருக்கு கொடுப்பதாக நான் ஆணையிட்டு உறுதியளித்த நாட்டுக்கு அவர்களை மீண்டும் அழைத்து வருவேன். அவர்கள் அதை ஆள்வார்கள். நான் அவர்களைப் பெருகச் செய்வேன். அவர்கள் எண்ணிக்கையில் குறையமாட்டார்கள்.
35நான் அவர்களோடு முடிவில்லா உடன்படிக்கை ஒன்றைச்செய்து கொள்வேன். அதனால் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பார்கள். என் மக்களாகிய இஸ்ரயேலுக்கு நான் கொடுத்துள்ள நாட்டிலிருந்து அவர்களை இனிமேல் வெளியேற்ற மாட்டேன்.’ ”

2:1 தானி 9:12. 2:3 லேவி 26:29; 2 அர 6:28-29. 2:21-23 எரே 7:34; 27:10-12. 2:24 எரே 8:1-2. 2:28-29 இச 28:58-62. 2:30 விப 32:9. 2:34 எரே 16:15. 2:35 எரே 32:38-40.