யோசியா

1யோசியாவின் நினைவு,

நறுமணப் பொருள்

தயாரிப்பவரால் செய்யப்பட்ட

தூபக் கலவைபோன்றது;

எல்லாருடைய வாயிலும்

தேனைப்போலும், திராட்சை

இரசம் பரிமாறப்படும் விருந்தின்

இன்னிசைபோலும் இனியது.

2மக்களைச் சீர்படுத்துவதில்

நேர்மையாக நடந்துகொண்டார்;

தீநெறியின் அருவருப்பை நீக்கினார்.

3ஆண்டவரிடம் தம் உள்ளத்தைச்

செலுத்தினார்; தீநெறியாளர்களின்

காலத்தில் வாழ்ந்த இறைப்

பற்றுள்ளோரை உறுதிப்படுத்தினார்.

எரேமியா

4தாவீது, எசேக்கியா, யோசியா,

ஆகியோரைத்தவிர மற்ற அனைவரும்

பாவத்திற்குமேல் பாவம் செய்தனர்.

ஏனெனில் உன்னத இறைவனின்

திருச்சட்டத்தைக் கைவிட்டனர்;

யூதாவின் மன்னர்களும்

மறைந்துபோயினர்.

5அவர்கள் தங்களுடைய வலிமையைப்

பிறருக்கு விட்டுக்கொடுத்தார்கள்;

தங்களுடைய மாட்சியை அயல்

நாட்டாருக்குக் கையளித்தார்கள்.

6திருவிடம் அமைந்திருந்த

தெரிந்தெடுக்கப்பட்ட நகரை

அவர்கள் தீக்கிரையாக்கினார்கள்;

எரேமியா கூறியபடி அதன்

தெருக்களைப் பாழாக்கினார்கள்.

7தாயின் வயிற்றிலேயே

இறைவாக்கினராகத்

திருநிலைப்படுத்தப்பெற்று,

பிடுங்கவும் துன்புறுத்தவும்

இடிக்கவுமின்றி, கட்டியெழுப்பவும்

நட்டுவைக்கவும் ஏற்படுத்தப்

பெற்ற எரேமியாவை அவர்கள்

கொடுமையாய் நடத்தினார்கள்.

எசேக்கியேல்

8எசேக்கியேல் கடவுளுடைய

மாட்சியின் காட்சியைக் கண்டார்;

கெருபுகள் தாங்கின தேரின்மேல்

மிளிர்ந்த அம்மாட்சியை ஆண்டவர்

அவருக்குக் காட்டினார்.

9பகைவர்களை நினைவுகூர்ந்து

புயலை அனுப்பினார்;

நேரிய வழியில் நடந்தோருக்கு

நலன்கள் புரிந்தார்.

பன்னிரண்டு இறைவாக்கினர்

10பன்னிரண்டு இறைவாக்கினர்களின்

எலும்புகள் அவர்களது

கல்லறையிலிருந்து புத்துயிர் பெற்றெழுக.

அவர்கள் யாக்கோபின்

குலத்தாரைத் தேற்றினார்கள்;

பற்றுறுதி கொண்ட நம்பிக்கையால்

அவர்களை விடுவித்தார்கள்.

செருபாபேல், யோசுவா

11செருபாபேலை எவ்வாறு நாம்

மேன்மைப்படுத்துவோம்?

வலக்கையின் கணையாழிபோல்

அவர் திகழ்ந்தார்.

12அவரைப்போலவே யோசதாக்கின்

மகன் யோசுவாவும் விளங்கினார்.

அவர்கள் தங்கள் காலத்தில்

ஆண்டவரின் இல்லத்தைக்

கட்டினார்கள்; என்றுமுள

மாட்சிக்கென

நிறுவப்பட்ட திருக்கோவிலை

ஆண்டவருக்கு எழுப்பினார்கள்.

நெகேமியா

13நெகேமியாவின் நினைவும்

பெருமைக்குரியது.

இடிந்து விழுந்த மதில்களை

அவர் நமக்காக எழுப்பினார்;

கதவுகளையும் தாழ்ப்பாள்களையும்

பொருத்தினார்; நம் இல்லங்களை

மீண்டும் கட்டினார்.

குலமுதல்வர்கள்

14ஏனோக்குபோன்ற எவரும்

மண்ணுலகின்மீது

படைக்கப்படவில்லை. அவர்

நிலத்திலிருந்து மேலே

எடுத்துக் கொள்ளப்பெற்றார்.

15யோசேப்பைப் போன்றவர்

எவரும் பிறந்ததில்லை;

அவர் சகோதரர்களின்

தலைவராகவும் மக்களின்

ஊன்றுகோலாகவும் திகழ்ந்தார்.

அவருடைய எலும்புகளும்

காக்கப்பட்டன.

16சேம், சேத்து ஆகியோர்

மனிதருக்குள்

மாட்சிமைப்படுத்தப்பெற்றனர்.

படைக்கப்பட்ட

எல்லா உயிரினங்களுள்ளும்

ஆதாம் சிறந்து விளங்குகிறார்.


49:1-3 2 அர 22:1-2, 11-13; 23:3-25; 2 குறி 34:14. 49:6-7 எரே 1:4-10; 37:21. 49:8-9 எசே 1:3-28; 14:14-20. 49:11 ஆகா 2:23; எஸ்ரா 3:2. 49:12 ஆகா 1:1; 12:15. 49:13 நெகே 2:11-4:15; 6:1-5. 49:14 சாஞா 4:10-14; தொநூ 5:24. 49:15 தொநூ 37:1-50:26.