நாத்தான், தாவீது

1அவருக்குப்பின் நாத்தான்

தோன்றினார்; தாவீதின்

காலத்தில் இறைவாக்கு உரைத்தார்.

2நல்லுறவுப் பலியிலிருந்து

கொழுப்பு பிரிக்கப்படுவதுபோல்,

இஸ்ரயேல் மக்களிடமிருந்து தாவீது

தெரிந்துகொள்ளப்பெற்றார்.

3வெள்ளாடுகளுடன்

விளையாடுவதுபோலச்

சிங்கங்களுடன் விளையாடினார்;

செம்மறியாடுகளுடன்

விளையாடுவதுபோலக்

கரடிகளுடன் விளையாடினார்.

4பெருமை பாராட்டிய

கோலியாத்தை நோக்கி இளைஞர்

தாவீது தம் கைகளை ஓங்கிக்

கவண்கல்லை வீசியபோது

ஓர் அரக்கனைக் கொல்லவில்லையா?

அதனால் மக்களது

இழிநிலையை அகற்றவில்லையா?

5வலிமைமிக்க மனிதனைப்

போரில் கொன்று தம்

மக்களின் வலிமையை உயர்த்த

உன்னத இறைவனாகிய

ஆண்டவரை அவர்

துணைக்கு அழைத்தார்;

ஆண்டவரும் அவருடைய

வலக்கைக்கு வலிமையூட்டினார்.

6இவ்வாறு அவர் முறியடித்த

பத்தாயிரம் பேருக்காக மக்கள்

அவரை மாட்சிமைப்படுத்தினர்;

ஆண்டவருடைய ஆசிகளுக்காக

அவரைப் புகழ்ந்தனர்; மாட்சியின்

மணிமுடியை அவருக்குச் சூட்டினர்.

7எப்புறமும் அவர்

பகைவர்களைத் துடைத்தழித்தார்;

எதிரிகளான பெலிஸ்தியரை

அடக்கி ஒழித்தார்;

அவர்களுடைய வலிமையை

அறவே நசுக்கினார்.

8தம் எல்லாச் செயல்களிலும்

மாட்சியைச் சாற்றும் சொற்களால்

உன்னத இறைவனாகிய

ஆண்டவருக்கு

நன்றி செலுத்தினார்;

தம் முழு உள்ளத்தோடும்

புகழ்ப்பா இசைத்தார்;

தம்மைப் படைத்தவர்மீது

அன்பு செலுத்தினார்.

9தங்களுடைய குரலால்

இன்னிசை எழுப்பப்

பாடகர்களைப் பலிபீடத்திற்குமுன்

நிற்கச் செய்தார்.

10திருவிழாக்களைச்

சீரோடும் சிறப்போடும்

கொண்டாடச் செய்தார்;

ஆண்டவருடைய திருப்பெயரை

அவர்கள் புகழ்ந்து பாடுவதால்

திருவிடம் வைகறையிலிருந்து

எதிரொலிக்கும்படி ஆண்டு

முழுவதும் காலங்களைக் குறித்தார்.

11ஆண்டவர் அவருடைய

பாவங்களை நீக்கினார்;

அவருடைய வலிமையை

என்றென்றைக்கும் உயர்த்தினார்;

மன்னர்களின் உடன்படிக்கையையும்

இஸ்ரயேலில் மாட்சியின்

அரியணையையும்

அவருக்குக் கொடுத்தார்.

சாலமோன்

12தாவீதுக்குப்பின் அறிவாற்றல்

கொண்ட அவருடைய மகன்

சாலமோன் தோன்றினார்;

தாவீதின் பொருட்டு அவர்

பாதுகாப்புடன் வாழ்ந்தார்.

13சாலமோன் அமைதியான

காலத்தில் அரசாண்டார்;

கடவுள் பெயருக்கு ஓர் இல்லம்

எழுப்பவும் ஒரு திரு இடத்தை

என்றென்றைக்கும் ஏற்பாடு

செய்யவும் எல்லைகளெங்கும்

அவருக்கு அமைதி அளித்தார்.

14நீர் உம் இளமையில்

எவ்வளவோ ஞானியாய்

இருந்தீர்! ஆற்றைப்போல்

அறிவுக்கூர்மையால்

நிரம்பி வழிந்தீர்!

15உமது செல்வாக்கு

மண்ணுலகெங்கும் பரவியது.

உவமைகளாலும் விடுகதைகளாலும்

அதை நிரப்பினீர்.

16உமது பெயர் தொலைவில்

இருந்த தீவுகளையும் எட்டியது;

உம் அமைதியின் பொருட்டு

நீர் அன்பு பாராட்டப்பட்டீர்.

17உம் பாடல்கள், நீதிமொழிகள்,

உவமைகள், விளக்கங்கள்

ஆகியவற்றைக் கேட்டு நாடுகள்

வியப்படைந்தன.

18இஸ்ரயேலின் கடவுள் என

அழைக்கப்பெறும் கடவுளாம்

ஆண்டவர் பெயரால் பொன்னை

வெள்ளீயத்தைப் போலவும்

வெள்ளியை ஈயத்தைப் போலவும்

குவித்தீர்.

19ஆனால் பெண்களோடு

புணர்ச்சியால் ஈடுபட்டீர்;

உம் உடல்மீது அவர்களுக்கு

அதிகாரம் அளித்தீர்.

20உமது மாட்சிக்கு மாசு வருவித்தீர்;

உமது வழிமரபைக்

கறைப்படுத்தினீர்;

உம் பிள்ளைகள்மீது

சினத்தை வருவித்தீர்;

உம் அறிவின்மைக்காக

அவர்கள் வருந்தினார்கள்.

21இதனால் அரசு

இரண்டாக உடைந்தது;

அடங்காத அரசு ஒன்று

எப்ராயிமிலிருந்து தோன்றியது.

22ஆண்டவர் இரக்கங் காட்ட

மறுக்கமாட்டார்;

சொன்ன சொல் தவறமாட்டார்.

தாம் தெரிந்து கொண்டோரின்

வழிமரபினரைத் துடைத்தழிக்கமாட்டார்;

தம்மிடம் அன்பு பாராட்டுவோரின்

வழித் தோன்றல்களை

அழித்தொழிக்க மாட்டார்;

எஞ்சியோரை யாக்கோபுக்குக்

கொடுத்தார்; தாவீதின்

குடும்பத்திலும் ஒரு

வேரை விட்டுவைத்தார்.

ரெகபெயாம், எரொபவாம்

23சாலமோன் தம் முன்னோரோடு

துயில்கொண்டார்;

மக்களுக்குள்ளேயே அறிவிலியும்

மதி குறைந்தவனுமான

ரெகபெயாமைத் தமக்குப்பின்

தம் வழிமரபில் விட்டுச் சென்றார்.

அந்த ரெகபெயாம் தன்

அறிவுரையால் மக்கள் கிளர்ச்சி

செய்யத் தூண்டிவிட்டான்.

24அப்போது நெபாத்து மகன்

எரொபவாம் தோன்றினான்;

இஸ்ரயேலைப் பாவம் செய்யத்

தூண்டினான்; எபிராயிமுக்குப்

பாவ வழியைக் காட்டினான்.

அவர்களுடைய பாவங்கள்

மேன்மேலும் பெருகின. அவர்கள்

தங்கள் நாட்டிலிருந்து

வெளியேற்றப்பட்டார்கள்.

25ஆண்டவர் அவர்களைப்

பழிவாங்கும்வரை அவர்கள்

எல்லா வகைத் தீமைகளையும் தேடி

அலைந்தார்கள்.


47:1 2 சாமு 7:1-17; 12:1-15. 47:2-11 1 சாமு 16:1-18:9; 2 சாமு 5:1-24:25. 47:12-22 1 அர 1:5-43; 2 சாமு 7:15-16. 47:23 1 அர 11:43-12:19; 14:21-31. 47:24-25 1 அர 11:26-40; 12:20-14:20.