சாலமோனின் ஞானம் முன்னுரை


‘சாலமோனின் ஞானம்’ என்னும் இந்நூல் சாலமோனைப் பற்றிய சில மறைமுகக் குறிப்புகளைக் கொண்டிருந்தாலும் (காண் 8:9-15; 9:7-8,12), காலத்தாலும் கருத்தாலும் பிந்தியது என்பது உறுதி. பாலஸ்தீனத்துக்கு வெளியே, எகிப்து நாட்டு அலக்சாந்திரியாவில் வாழ்ந்துவந்த ஒரு யூதரால் கி.மு. முதல் நூற்றாண்டின் நடுவில் இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்; இதுவே பழைய ஏற்பாட்டு நூல்களுள் இறுதியாக எழுத்து வடிவம் பெற்றிருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

பாலஸ்தீனத்துக்கு வெளியே வாழ்ந்துவந்த யூதர்களுள் சிலர், கிரேக்க மொழி, மெய்யியல், பண்பாடு, வழிபாட்டு முறை, வாழ்க்கை முறை முதலியவற்றின் மீது அளவற்ற நாட்டம் கொண்டதோடு, யூத மறையைவிடக் கிரேக்கர்களின் மறைவான சமயச் சடங்குகள் உயர்ந்தவை என்னும் தவறான எண்ணத்தால் தூண்டப்பெற்று யூத மறையைக் கைவிட்டனர். இவர்கள் யூத மறைக்கு மனம் மாறி வர அழைப்பு விடுப்பதே இந்நூலாசிரியரின் முதன்மை நோக்கம். அதே நேரத்தில், யூதக் கோட்பாடுகளில் பிடிப்போடு இருந்தவர்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்துகிறார் ஆசிரியர்; விசுவாசத்தில் தளர்ந்து தடுமாற்ற நிலையில் இருந்தவர்களை எச்சரிக்கிறார்; கிரேக்கருடைய சிலைவழிபாட்டின் மூடத்தனத்தை அடையாளம் காட்டுவதோடு, ஆண்டவர்மீது அச்சம் கொள்வதே — அவரது திருச்சட்டத்தின்படி ஒழுகுவதே — உண்மையான, உயரிய ஞானம் என்று கோடிட்டுக் காட்டி, யூத மறையைத் தழுவுமாறு வேற்றினத்தாரைத் தூண்டுகிறார். கிரேக்கருக்கும் கிரேக்கச் சூழலில் வாழ்ந்துவந்த யூதருக்கும் யூதநெறிக் கோட்பாடுகளை விளக்க எழுந்த இந்நூலில் கிரேக்க மெய்யியல், நடை, சொல்லாட்சி முதலியன மிகுதியாகக் காணப்படுகின்றன.

முழு நூலும் இனிய கவிதை நடையில் அமைந்துள்ளது. நூலின் இறுதிப் பகுதி (அதி 10-19) யூதப் போதகர்கள் கையாண்டுவந்த விவிலிய விளக்க முறையான ‘மித்ராஷ்’ என்னும் இலக்கியவகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

நூலின் பிரிவுகள்

  1. ஞானமும் மனிதரின் முடிவும் 1 - 5
  2. ஞானத்தின் தோற்றம், இயல்பு, அதை அடையும் வழி 6 - 9
  3. மீட்பு வரலாற்றில் ஞானம் 10 - 19