ஞானம் அருளும்படி மன்றாட்டு

1“மூதாதையரின் கடவுளே,

இரக்கத்தின் ஆண்டவரே,

நீர் எல்லாவற்றையும்

உமது சொல்லால் உண்டாக்கினீர்.

2நீர் உண்டாக்கிய

படைப்புகளின் மேல்

ஆட்சி செலுத்தவும்,

தூய்மையோடும் நீதியோடும்

உலகை ஆளவும்,

3நேர்மையான உள்ளத்தோடு

தீர்ப்பு வழங்கவும்,

உமது ஞானத்தால்

மானிடரை உருவாக்கினீர்.

4உமது அரியணை அருகில்

வீற்றிருக்கும் ஞானத்தை

எனக்கு அருளும்;

உம் பிள்ளைகளிடமிருந்து

என்னைத் தள்ளிவிடாதீர்.

5நான் உம் அடியான்;

உம்முடைய அடியவளின் மகன்;

வலுவற்ற மனிதன்; குறுகிய வாழ்வினன்;

நீதித்தீர்ப்பும், திருச்சட்டமும்

பற்றிச் சிற்றறிவு படைத்தவன்.

6மன்பதையில் ஒருவர் எத்துணை

நிறைவு உள்ளவராய் இருந்தாலும்,

உம்மிடமிருந்து வரும் ஞானம்

அவருக்கு இல்லையேல்,

அவர் ஒன்றும் இல்லாதவராய்க்

கருதப்படுவார்.

7“உம் மக்களுக்கு மன்னராகவும்,

உம் புதல்வர் புதல்வியருக்கு

நடுவராகவும் இருக்க

நீர் என்னைத் தெரிந்தெடுத்தீர்.

8தொடக்கத்திலிருந்தே நீர்

ஏற்பாடு செய்திருந்த தூய கூடாரத்ததை

மாதிரியாகக் கொண்டு

உம் தூய மலைமேல்

கோவில் கட்டவும்,

உமது உறைவிடமான நகரில்

பலிபீடம் எழுப்பவும்

நீர் எனக்கு ஆணையிட்டீர்.

9ஞானம் உம்மோடு இருக்கின்றது;

உம் செயல்களை அது அறியும்;

நீர் உலகத்தை உண்டாக்கியபோது

அது உடனிருந்தது;

உம் பார்வைக்கு உகந்ததை

அது அறியும்;

உம் கட்டளைகளின்படி

முறையானது எது எனவும்

அதற்குத் தெரியும்.

10உமது தூய விண்ணகத்திலிருந்து அதை அனுப்பியருளும்;

உமது மாட்சிமிக்க அரியணையிலிருந்து

அதை வழங்கியருளும்.

அது என்னோடு இருந்து

உழைக்கட்டும்.

அதனால் உமக்கு உகந்ததை

நான் அறிந்துகொள்வேன்.

11அது எல்லாவற்றையும்

அறிந்து உய்த்துணரும்;

என் செயல்களில் விவேகத்துடன்

என்னை வழி நடத்தும்;

தன் மாட்சியில் அது

என்னைப் பாதுகாக்கும்.

12அப்பொழுது என் செயல்கள்

உமக்கு ஏற்புடையனவாகும்.

உம்முடைய மக்களுக்கு நேர்மையுடன்

நீதி வழங்குவேன்;

என் தந்தையின்

அரியணையில் வீற்றிருக்கத்

தகுதி பெறுவேன்.

13“கடவுளின் திட்டத்தை

அறிபவர் யார்?

ஆண்டவரின் திருவுளத்தைக்

கண்டுபிடிப்பவர் யார்?

14நிலையற்ற மனிதரின்

எண்ணங்கள் பயனற்றவை;

நம்முடைய திட்டங்கள்

தவறக்கூடியவை.

15அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக்

கீழ்நோக்கி அழுத்துகிறது.

இந்த மண் கூடாரம்

கவலை தோய்ந்த மனதுக்குச்

சுமையாய் அமைகிறது.

16மண்ணுலகில் உள்ளவற்றையே

நாம் உணர்வது அரிது!

அருகில் இருப்பவற்றையே

கடும் உழைப்பால்தான்

கண்டுபிடிக்கிறோம்.

இவ்வாறிருக்க, விண்ணுலகில்

இருப்பவற்றைத் தேடிக்

கண்டுபிடிப்பவர் யார்?

17நீர் ஞானத்தை அருளாமலும்,

உயர் வானிலிருந்து

உம் தூய ஆவியை

அனுப்பாமலும் இருந்தால்,

உம் திட்டத்தை யாரால்

அறிந்து கொள்ள இயலும்?

18இவ்வாறு மண்ணுலகில்

வாழ்வோருடைய வழிகள்

செம்மைப்படுத்தப்பட்டன.

உமக்கு உகந்தவற்றை

மனிதர் கற்றுக்கொண்டனர்;

ஞானத்தால் மீட்பு அடைந்தனர்.”


9:1-18 1 அர 3:6-9; சாஞா 7:7. 9:7 1 குறி 28:5.