1தூய இறைவாக்கினர்

ஒருவரின் வாயிலாக

இஸ்ரயேலர்களுடைய செயல்களை

ஞானம் சிறப்புறச் செய்தது.

2குடியிருப்பாரற்ற பாழ்வெளி வழியாக

அவர்கள் பயணம் செய்தார்கள்;

மனித நடமாட்டமற்ற இடங்களில்

தங்கள் கூடாரங்களை

அமைத்தார்கள்.

3தங்கள் பகைவர்களை

எதிர்த்து நின்றார்கள்;

போரிட்டு எதிரிகளைத்

துரத்தினார்கள்.

தண்ணீரால் அழிவும் விடுதலையும்

4இஸ்ரயேலர்களுக்குத்

தாகம் எடுத்தபோது

உம்மை மன்றாடினார்கள்.

உடனே செங்குத்தான

பாறைகளிலிருந்து

தண்ணீர் வழிந்தோடியது.

கடினமான பாறையிலிருந்து

அவர்கள் தாகத்தைத்

தணித்துக் கொண்டார்கள்.

5எவற்றால் பகைவர்கள்

தண்டிக்கப்பட்டார்களோ

அவற்றாலேயே சிக்கலான

நேரங்களில் இஸ்ரயேலர்

நன்மை அடைந்தார்கள்.

6-7குழந்தைகளைக் கொல்லவேண்டும்

என்று எதிரிகள் பிறப்பித்திருந்த

ஆணையைக் கண்டிக்க,

வற்றாத ஊற்றிலிருந்து ஓடும்

ஆற்று நீருக்கு மாறாக,

குருதியால் கலங்கி மாசுபட்ட நீரை

அவர்களுக்குக் கொடுத்தீர்;

இஸ்ரயேலருக்கோ

எதிர்பாரா வகையில்

மிகுதியான தண்ணீர் வழங்கினீர்.

8அவர்களுடைய பகைவரை

எவ்வாறு தண்டித்தீர் என்பதை

அவ்வேளையில் அவர்களை

வாட்டிய தாகத்தால் காட்டினீர்.

9இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட பொழுது

இரக்கத்தால்

பயிற்றுவிக்கப்பட்டனர் என்றும்,

கடவுள் சினம்கொண்டு

தீர்ப்பளிக்கும்பொழுது

இறைப்பற்றில்லாதவர்கள்

எவ்வாறு வதைக்கப்படுவார்கள்

என்றும் இதன் வாயிலாக

அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

10ஏனெனில்

ஒரு தந்தை எச்சரிப்பதுபோல,

நீர் இஸ்ரயேலரைச் சோதித்தீர்.

ஆனால் இரக்கமற்ற மன்னர்

தீர்ப்பு அளிப்பதுபோல,

நீர் எதிரிகளைக் கூர்ந்து

சோதித்துப் பார்த்தீர்.

11இஸ்ரயேலர்களுக்கு

அருகில் இருந்தபோதும்,

தொலைவில் இருந்தபோதும்,

எகிப்தியர்கள் பெருந்துயருற்றார்கள்.

12இருமடங்கு துயரம்

அவர்களை ஆட்கொண்டது.

கடந்த கால நிகழ்ச்சிகளை நினைத்து,

ஏங்கிப் பெருமூச்சு விட்டார்கள்.

13தங்களுக்கு வந்துற்ற

தண்டனைகளால் நீதிமான்கள்

நன்மை அடைந்தார்கள் என்று

எகிப்தியர்கள் கேள்வியுற்றபோது,

அது ஆண்டவரின் செயல் என்று

உணர்ந்து கொண்டார்கள்.

14எவரை முன்னொரு காலத்தில்

குழந்தையாக இருந்தபோது

அவர்கள் வெளியே எறிந்தார்களோ,

எவரை நகைத்துப் புறக்கணித்தார்களோ,

அவரைக் குறித்தே நிகழ்ச்சிகளின்

முடிவில் வியப்புற்றார்கள்.

ஏனெனில், நீதிமான்கள்

கண்டிராத தாகத்தை எதிரிகள்

கொண்டிருந்தார்கள்.

கடவுளின் அருளிரக்கம்

15எகிப்தியர்கள்

பகுத்தறிவற்ற பாம்புகளையும்

பயனற்ற விலங்குகளையும்

வணங்கினார்கள்.

இவ்வாறு நெறி தவறத் தூண்டிய

அவர்களுடைய அறிவற்ற தீய

எண்ணங்களுக்காக அவர்களைப்

பழிவாங்கும் பொருட்டு,

பகுத்தறிவில்லா

உயிரினங்களின் கூட்டத்தை

அவர்கள்மீது நீர் ஏவி விட்டீர்.

16ஒருவர் எதனால்

பாவம் செய்கிறாரோ

அதனாலேயே அழிந்து போவார்

என்பதை இதனால்

அவர்களுக்கு அறிவுறுத்தினீர்.

17ஏனெனில் உருவமற்ற

பருப்பொருளைக் கொண்டு

உலகைப் படைத்த எல்லாம் வல்ல

உமது கைவன்மைக்கு

கரடிகளின் கூட்டத்தையோ

துணிவுள்ள சிங்கங்களையோ

அவர்கள்மிது அனுப்பி வைப்பது

முடியாததன்று.

18புதிதாகப் படைக்கப்பட்ட

முன்பின் பார்த்திராத,

சீற்றம் நிறைந்த

காட்டு விலங்குகளையோ,

வெப்ப மூச்சுவிடும் விலங்குகளையோ,

ஏப்பமாக அடர்ந்த புகைப்படலத்தை

வெளியிடும் விலங்குகளையோ,

கண்களில் தீப்பொறி பறக்கும்

விலங்குகளையோ,

அவர்கள்மீது அனுப்பி வைப்பது

உம் கைவன்மைக்கு இயலாததன்று.

19அவை மனிதர்களைத் தாக்கி

முற்றிலும் அழித்துவிடக் கூடியவை

மட்டுமல்ல,

தங்கள் தோற்றத்தாலேயே

அவர்களை அச்சுறுத்திக்

கொன்றுவிடக்கூடியவை.

20இவை இன்றியே மனிதர்கள்

ஒரே மூச்சினால்

வீழ்த்தப்பட்டிருப்பார்கள்.

நீதியால் துரத்தப்பட்டு,

உமது ஆற்றலின் மூச்சினால்

சிதறடிக்கப்பட்டிருப்பார்கள்.

ஆயினும் நீர் அனைத்தையும்

அளவோடும் கணக்கோடும்

நிறையோடும் ஏற்பாடு செய்தீர்.

21உமது மாபெரும் ஆற்றலை

எப்போது நீர் காட்ட இயலும்.

உமது கைவன்மையை

எதிர்த்து நிற்க எவரால் இயலும்?

22தராசில் மிக நுண்ணிய

எடை வேறுபாடு காட்டும்

தூசிபோலவும் நிலத்தின் மீது விழும்

காலைப்பனியின்

ஒரு சிறு துளி போலவும்

உலகம் முழுவதும்

உம் கண்முன் உள்ளது.

23நீர் எல்லாம் வல்லவராய்

இருப்பதால்

எல்லார்மீதும் இரங்குகின்றீர்;

மனிதர்கள் தங்களுடைய

பாவங்களைவிட்டு மனந்திரும்பும்

பொருட்டே நீர் அவற்றைப்

பார்த்ததும் பாராமல் இருக்கின்றீர்.

24படைப்புகள் அனைத்தின்மீதும்

நீர் அன்புகூர்கிறீர்.

நீர் படைத்த எதையும்

வெறுப்பதில்லை.

ஏனெனில் நீர் எதையாவது

வெறுத்திருந்தால்

அதைப் படைத்திருக்கவே மாட்டீர்!

25உமது திருவுளமின்றி

எதுதான் நீடித்திருக்க முடியும்?

அல்லது, உம்மால்

உண்டாக்கப்படாதிருந்தால்

எதுதான் காப்பாற்றப்படக்கூடும்?

26ஆண்டவரே, உயிர்கள்மீது

அன்புகூர்கின்றவரே,

நீர் எல்லாவற்றையும்

வாழவிடுகின்றீர்;

ஏனெனில் அவை யாவும்

உம்முடையன.


11:1-5 விப 15:22-27:16. 11:6-7 விப 1:9-19; 7:19-20. 11:8-14 எண் 20:7-13. 11:15 விப 8:1-24; 10:12-15. 11:21 2 குறி 20:6. 11:23 சீஞா 18:13; 1 பேது 3:9.