யூதர்களின் வெற்றி

மொர்தெக்காய் பெற்ற சிறப்பு

1ஆண்டவர் அன்று இரவு மன்னருக்குத் தூக்கம் வராமலிருக்கச் செய்தார். ஆகவே, குறிப்பேட்டைக் கொண்டு வந்து தமக்குப் படித்துக்காட்டுமாறு மன்னர் தம் செயலரைப் பணித்தார்.
2காவற்பணியில் இருந்த இரண்டு அலுவலர்கள் அர்த்தக்சஸ்தா மன்னரைக் கொல்லச் சூழ்ச்சி செய்தியிருந்தது பற்றி மொர்தெக்காய் மன்னரிடம் தெரிவித்தது தொடர்பான குறிப்புகள் அதில் எழுதியிருக்கக் கண்டார்.
3உடனே மன்னர், “இதற்காக மொர்தெக்காய்க்கு நாம் என்ன சிறப்பு அல்லது கைம்மாறு செய்தோம்?” என்று வினவினார். “அவருக்குத் தாங்கள் ஒன்றுமே செய்யவில்லை” என்று மன்னரின் பணியாளர்கள் மறுமொழி கூறினார்கள்.
4மொர்தெக்காய் செய்திருந்த நற்பணி பற்றி மன்னர் விசாரித்துக் கொண்டிருந்தபோது ஆமான் அரண்மனை முற்றத்திற்குள் வந்தான். “முற்றத்தில் இருப்பவர் யார்?” என்று மன்னர் வினவினார். தான் ஏற்பாடு செய்திருந்த மரத்தில் மொர்தெக்காயைத் தூக்கிலிடுவதுபற்றிப் பேசுவதற்காக ஆமான் அப்போதுதான் உள்ளே வந்திருந்தான்.
5“ஆமான்தான் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்” என்று பணியாளர்கள் மன்னரிடம் கூறினார்கள். “அவரை உள்ளே வரச்சொல்” என்று மன்னர் சொன்னார்.
6பின் மன்னர், “நான் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கு என்ன செய்யலாம்?” என்று ஆமானிடம் கேட்டார். ‛என்னைத் தவிர வேறு யாரை மன்னர் பெருமைப் படுத்தப்போகிறார்’ என்று ஆமான் தனக்குள் நினைத்துக் கொண்டான்.
7எனவே அவன் மன்னரிடம், “மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கென,
8மன்னர் அணியும் விலையுயர்ந்த மெல்லிய ஆடைகளையும், பயன்படுத்தும் குதிரையையும் பணியாளர்கள் கொண்டு வரட்டும்.
9அந்த ஆடைகளை மன்னரின் மதிப்பிற்குரிய நண்பர் ஒருவரிடம் கொடுக்கட்டும். அவர் அவற்றை மன்னர் அன்பு செலுத்தும் அம்மனிதருக்கு அணிவிக்கட்டும். குதிரைமீது அவரை அமர்த்தி நகரின் தெருக்களில் வலம் வரச்செய்து, ‛மன்னர் பெருமைப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே செய்யப்பெறும்’ என அறிவிக்கட்டும்” என்றான்.
10அதற்கு மன்னர், “சரியாகச் சொன்னீர். அரண்மனையில் பணிபுரியும் மொர்தெக்காய்க்கு அவ்வாறே செய்யும். நீர் சொன்னவற்றில் எதையும்விட்டுவிட வேண்டாம்” என்று ஆமானிடம் கூறினார்.
11எனவே, ஆமான் ஆடைகளையும் குதிரையையும் கொண்டுவந்தான்; ஆடைகளை மொர்தெக்காய்க்கு அணிவித்து, குதிரை மீது அவரை அமர்த்தினான். “மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே செய்யப்பெறும்” என்று அறிவித்துக்கொண்டே நகரின் தெருக்களில் அவர் வலம் வரச்செய்தான்.
12பின் மொர்தெக்காய் அரண்மனைக்குத் திரும்பினார். ஆமானோ தன் தலையை மூடிக்கொண்டு துயரத்தோடு தன் வீட்டுக்கு விரைந்தான்.
13தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் ஆமான் தன் மனைவி சோசராவிடமும் நண்பர்களிடமும் தெரிவித்தான். “மொர்தெக்காய் யூத இனத்தைச் சார்ந்தவர் என்றால், அவருக்கு முன்பாக நீர் சிறுமைப்படும் நிலை தொடங்கி விட்டது என்றால், நீர் வீழ்ச்சி அடைவது உறுதி. அவரை எதிர்த்து வெல்ல உம்மால் முடியாது; ஏனெனில் என்றுமுள கடவுள் அவரோடு இருக்கிறார்” என்று அவர்கள் அவனிடம் கூறினார்கள்.
14அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே அண்ணகர்கள் வந்து எஸ்தர் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு ஆமானை விரைவாக அழைத்துச் சென்றார்கள்.