மேற்கு நாடுகளோடு போரிடத் திட்டம்

1அசீரிய மன்னன் நெபுகத்னேசர் சூளுரைத்திருந்தவாறு எல்லா நாடுகளையும் பழிவாங்குவான் என்று அவனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டு, முதல் மாதம் இருபத்திரண்டாம் நாளன்று அரண்மனையில் பேசப்பட்டது.
2அவனும் தன் பணியாளர்கள், உயர்குடி மக்கள் யாவரையும் அழைத்துத் தனது இரகசியத் திட்டம் பற்றி அவர்களோடு கலந்தாலோசித்தான்; அந்த நாடுகளின் சூழ்ச்சிபற்றித் தன் வாய்ப்பட முழுமையாக எடுத்துரைத்தான்.
3மன்னன் இட்ட கட்டளையை ஏற்காத அனைவரும் அழிக்கப்படவேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
4ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அசீரிய மன்னன் நெபுகத்னேசர் தன் படைத் தலைவனும் தனக்கு அடுத்த நிலையில் இருந்தவனுமான ஒலோபெரினை அழைத்து அவனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்:
5“அனைத்துலகின் தலைவராகிய மாமன்னர் இவ்வாறு கூறுகிறார்: இங்கிருந்து உடனே புறப்பட்டுச் செல்லும்; போரிடத் தயங்காத ஓர் இலட்சத்து இருபதாயிரம் காலாட் படையினரையும் பன்னிரண்டாயிரம் குதிரைப் படையினரையும் உம்மோடு கூட்டிக்கொள்ளும்.
6நான் கொடுத்த ஆணைக்கு மேற்கு நாட்டவருள் எவருமே பணியாததால், அவர்களுக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லும்.
7அவர்கள் நிலத்தின் விளைச்சலையும் தண்ணீர் வசதியையும்* எனக்கு அளிப்பதற்கு அவர்களை ஆயத்தமாய் இருக்கச் சொல்லும். ஏனெனில், நான் சினமுற்று அவர்களை எதிர்த்துச் செல்லவிருக்கிறேன். அவர்களது நாடு முழுவதையும் என்படைவீரர்களின் காலடிகள் மூடும். அதனை அவர்கள் சூறையாடும்படி கையளிப்பேன்.
8அவர்களுள் காயமடைந்தோர் பள்ளத்தாக்குகளை நிரப்புவர்; ஓடைகளும் ஆறுகளும் அவர்களின் பிணங்களால் நிரம்பி வழியும்.
9நிலத்தின் கடை எல்லைக்கே அவர்களை நாடுகடத்துவேன்.
10நீர் எனக்கு முன்னதாகப் புறப்பட்டுச் சென்று, அவர்களின் நாடுகளையெல்லாம் என் பெயரால் கைப்பற்றும். அவர்கள் உம்மிடம் சரணடைந்தால், அவர்களை நான் தண்டிக்கும் நாள்வரை காவலில் வைத்திரும்.
11பணிய மறுப்பவர்களுக்கோ இரக்கம் காட்டாதீர். நீர் கைப்பற்றும் நாடெங்கும் அவர்களைக் கொலைக்கும் கொள்ளைக்கும் கையளித்துவிடும்.
12என் உயிர்மேல் ஆணை! என் அரசின் ஆற்றல்மேல் ஆணை! நான் சொன்னதையெல்லாம் என் கையாலேயே செய்து முடிப்பேன்.
13உம் தலைவரின் ஆணைகளில் எதனையும் மீறாதீர். நான் உமக்குக் கட்டளையிட்டவாறே அவற்றைத் திண்ணமாய்ச் செய்து முடியும்; காலம் தாழ்த்தாமல் செயல்புரியும்.”

ஒலோபெரினின் படையெடுப்பு

14ஒலோபெரின் தன் தலைவனிடமிருந்து சென்று அசீரியப் படையின் தலைவர்கள், தளபதிகள், அலுவலர்கள் ஆகிய அனைவரையும் தன்னிடம் அழைத்தான்.
15தலைவன் தனக்கு ஆணையிட்டபடி ஓர் இலட்சத்து இருபதாயிரம் தேர்ந்தெடுத்த வீரர்களையும் வில் வீரர்களான குதிரைப்படையினர் பன்னிரண்டாயிரம் பேரையும் திரட்டினான்.
16பெரும் படை ஒன்று போர் தொடுக்கச் செல்லும் முறைப்படி, அவர்களை அணிவகுக்கச் செய்தான்;
17-18மேலும் தங்கள் பொருள்களைச் சுமந்து செல்லப் பெருந்திரளான ஒட்டகங்களையும் கழுதைகளையும் கோவேறுகழுதைகளையும், உணவுக்குத் தேவைப்பட்ட எண்ணற்ற செம்மறியாடுகளையும் மாடுகளையும் வெள்ளாடுகளையும், அனைவருக்கும் போதுமான உணவுப் பொருள்களையும், அரண்மனையிலிருந்து மிகுதியான பொன்னையும் வெள்ளியையும் திரட்டிக்கொண்டான்.
19இவ்வாறு தேர்ப்படையினர், குதிரைப் படையினர், தேர்ந்தெடுத்த காலாட் படையினர் ஆகியோர் அடங்கிய தன் முழுப் படையுடன், நெபுகத்னேசர் மன்னனுக்கு முன்னதாகச் சென்று, மேற்குப் பகுதி முழுவதையும் நிரப்புமாறு ஒலோபெரின் புறப்பட்டான்.
20அப்பொழுது பல இனங்களைச் சேர்ந்த, எண்ணிலடங்காத பெருங் கூட்டம் ஒன்று வெட்டுக்கிளிகளின் திரள்போலும் நிலத்தின் புழுதிபோலும் அவர்களோடு புறப்பட்டுச் சென்றது.
21அவர்கள் நினிவேயிலிருந்து புறப்பட்டுப் பெக்திலேது சமவெளியை நோக்கி மூன்று நாள் பயணம் சென்றார்கள்; அதைத் தாண்டி மேல் சிலிசியாவுக்கு வடக்கே மலை அருகில் பாசறை அமைத்தார்கள்.
22ஒலோபெரின் தன் காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை அடங்கிய முழுப்படையையும் அங்கிருந்து நடத்திக்கொண்டு, மலைநாட்டிற்குள் முன்னேறிச் சென்றான்;
23வழியில் பூது, லூது என்னும் நகர்களைப் பாழ்படுத்தியபின், கெலயோன் நாட்டிற்குத் தெற்கே பாலை நிலத்தின் ஓரத்தில் வாழ்ந்துவந்த இராசியர், இஸ்மவேலர் ஆகிய அனைவரையும் கொள்ளையடித்தான்;
24யூப்பிரத்தீசு கரை வழியாகச் சென்று, மெசப்பொத்தாமியாவைக் கடந்து அப்ரோன் ஓடைமுதல் கடல்வரை இருந்த அரண்சூழ் நகர்கள் அனைத்தையும் தரைமட்டமாக்கினான்.
25மேலும் சிலிசியா நாட்டை அவன் கைப்பற்றித் தன்னை எதிர்த்த யாவரையும் கொன்றான்; பிறகு அரேபியாவிற்கு எதிரே இருந்த எப்பெத்தின் தென் எல்லையை அடைந்தான்;
26மிதியானியர் யாவரையும் சுற்றி வளைத்து, அவர்களின் கூடாரங்களைத் தீக்கிரையாக்கி, ஆட்டுக் கொட்டில்களைக் கொள்ளையடித்தான்.
27கோதுமை அறுவடைக் காலத்தில் அவன் தமஸ்குச் சமவெளிக்கு இறங்கிச் சென்றான்; அவர்களுடைய வயல்களுக்குத் தீவைத்தான்; ஆடு மாடுகளை அழித்தான்; நகர்களைச் சூறையாடினான்; வயல்வெளிகளைப் பாழாக்கினான்; இளைஞர்கள் அனைவரையும் வாளுக்கிரையாக்கினான்.
28சீதோன், தீர், சூர், ஒக்கினா, யாம்னியா ஆகிய கடலோர நகர்களில் வாழ்ந்தோர் யாவரும் அவனுக்கு அஞ்சி நடுங்கினர்; அசோத்து, அஸ்கலோனில் வாழ்ந்தோரும் அவனுக்குப் பெரிதும் அஞ்சினர்.

2:7 ‘படைக்குத் தேவையான அனைத்தும்’ என்பது பொருள். நிபந்தனையின்றிச் சரணடைவதன் அடையாளம் இது.