1யூதித்து பாடிய பாடல்: “என்

கடவுளுக்கு முரசு கொட்டுங்கள்;*

ஆண்டவருக்கு மேள தாளங்களோடு

பண் இசையுங்கள்.

அவருக்குத் திருப்பாடலும்

புகழ்ப் பாவும்** இசையுங்கள்;

அவரது பெயரைப் புகழ்ந்தேத்துங்கள்.

2ஆண்டவர்

போர்களை முறியடிக்கும் கடவுள்;

மக்கள் நடுவே

தம் கூடாரத்தை அமைத்துள்ளார்;*

துரத்துவோரிடமிருந்து

என்னை அவர் விடுவித்தார்.

3அசீரியன்

வடக்கு மலைகளிலிருந்து வந்தான்;

எண்ணற்ற படைவீரர்களுடன் வந்தான்.

அவர்களது பெருந்திரள்

ஓடைகளைத் தடுத்து நிறுத்தியது.

அவர்களுடைய குதிரைப்படை

மலைகளெங்கும் பரவியிருந்தது.

4“உன் எல்லைகளைத்

தீக்கிரையாக்குவேன்;

உன் இளைஞர்களை

வாளுக்கிரையாக்குவேன்;

உன் குழந்தைகளைத்

தரையில் அடித்துக் கொல்வேன்;

உன் சிறுவர்களைக்

கவர்ந்து செல்வேன்;

உன் கன்னிப் பெண்களைக்

கொள்ளைப் பொருளாகக்

கொண்டுபோவேன்” என்று

அசீரியன் அச்சுறுத்தினான்.

5எல்லாம் வல்ல ஆண்டவரோ

ஒரு பெண்ணின் கையால்

அவர்களை முறியடித்தார்.

6வலிமைவாய்ந்த அவனை

இளைஞர் வெட்டி வீழ்த்தவில்லை;

அரக்கர்கள்*

அடித்து நொறுக்கவில்லை;

உயரமான இராட்சதர்கள்

தாக்கவில்லை;

ஆனால் மெராரியின் மகள் யூதித்து

தம் முக அழகால்

அவனை ஆற்றல் இழக்கச் செய்தார்.

7இஸ்ரயேலில் துயருற்றோரைத்

தூக்கிவிட அவர்

கைம்பெண்ணுக்குரிய தம்

ஆடையைக் களைந்தார்;

8தம் முகத்தில்

நறுமண எண்ணெய் பூசிக்கொண்டார்;

தலையை வாரி முடித்து

மணி முடியைச் சூடிக்கொண்டார்.

அவனை மயக்க

மெல்லிய உடையை

அணிந்து கொண்டார்.

9அவரது காலணி

அவனது கண்ணைக் கவர்ந்தது;

அவரது அழகு

அவனது உள்ளத்தைக்

கொள்ளை கொண்டது.

அவரது வாள்

அவனது கழுத்தைத் துண்டித்தது.

10பாரசீகர் அவரது

துணிவைக் கண்டு நடுங்கினர்;

மேதியர் அவரது

மனவுறுதியைப் பார்த்துக் கலங்கினர்.

11தாழ்வுற்ற என் மக்கள்

முழக்கமிட்டபோது

பகைவர்கள் அஞ்சினார்கள்;

வலிமை இழந்த

என் மக்கள் கதறியபோது

அவர்கள் நடுங்கினார்கள்;

என் மக்கள் கூச்சலிட்டபோது

அவர்கள் புறங்காட்டி ஓடினார்கள்.

12பணிப்பெண்களின் மைந்தர்கள்

அவர்களை ஊடுருவக் குத்தினார்கள்;

தப்பியோடுவோரின் பிள்ளைகளுக்கு

இழைப்பதுபோல்

அவர்களைக் காயப்படுத்தினார்கள்;

என் ஆண்டவரின் படையால்

அவர்கள் அழிந்தார்கள்.

13என் கடவுளுக்குப்

புதியதொரு பாடல் பாடுவேன்;

ஆண்டவரே, நீர் பெரியவர்,

மாட்சிமிக்கவர்;

வியத்தகு வலிமை கொண்டவர்;

எவராலும் வெல்ல முடியாதவர்.

14உம் படைப்புகள் அனைத்தும்

உமக்கே பணிபுரியட்டும்;

நீர் ஆணையிட்டீர்;

அவை உண்டாயின.

உம் ஆவியை அனுப்பினீர்;

அவை உருவாயின.

உமது குரலை எதிர்த்து நிற்பவர்

எவருமில்லை.

15மலைகளின் அடித்தளங்களும்

நீர்த்திரளும் நடுங்குகின்றன;

பாறைகள் உம் திருமுன்

மெழுகுபோல் உருகுகின்றன.

உமக்கு அஞ்சுவோருக்கோ

நீர் இரக்கம் காட்டுகின்றீர்.

16நறுமணம் வீசும் பலியெல்லாம்

உமக்குப் பெரிதல்ல;

எரிபலியின் கொழுப்பெல்லாம்

உமக்குச் சிறிதே.

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே

எக்காலமும் பெரியோர்.

17என் இனத்தாரை

எதிர்த்தெழுகின்ற நாட்டினருக்கு

ஐயோ கேடுவரும்.

எல்லாம் வல்ல ஆண்டவர்

தீர்ப்பு நாளில்

அவர்களைப் பழிவாங்குவார்;

அவர்களது சதைக்குள்

நெருப்பையும் புழுக்களையும்

அனுப்புவார்;

அவர்கள் துயருற்று

என்றும் அழுவார்கள்.”

18மக்கள் எருசலேமுக்குப்போய்ச் சேர்ந்தவுடன் கடவுளை வழிபட்டார்கள். தங்களைத் தூய்மைப்படுத்தியபின் எரிபலிகளையும் தன்னார்வப் படையல்களையும் காணிக்கைகளையும் செலுத்தினார்கள்.
19மக்கள் தமக்குக் கொடுத்திருந்த ஒலோபெரினின் கலன்கள் அனைத்தையும் யூதித்து கடவுளுக்கு உரித்தாக்கினார்; அவனுடைய படுக்கை அறையிலிருந்து தமக்கென்று எடுத்து வைத்திருந்த மேற்கவிகையையும் கடவுளுக்கு நேர்ச்சையாக்கினார்.
20மக்கள் எருசலேமில் திருவிடத்துக்குமுன் மூன்று மாதமாக விழா கொண்டாடினார்கள். யூதித்தும் அவர்களுடன் தங்கியிருந்தார்.

யூதித்தின் புகழ்

21பிறகு ஒவ்வொருவரும் அவரவர் தம் இல்லத்துக்குத் திரும்பினர். யூதித்து பெத்தூலியாவுக்குச் சென்று தம் உடைமையை வைத்து வாழ்க்கை நடத்தினார்; தம் வாழ்நாள் முழுவதும் நாடெங்கும் புகழ்பெற்றிருந்தார்.
22பலர் அவரை மணந்துகொள்ள விரும்பினர்; ஆனால் அவருடைய கணவர் மனாசே இறந்து தம் மூதாதையரோடு துயில் கொண்டபின் தம் வாழ்நாள் முழுதும் வேறு யாரையும் அவர் மணமுடிக்கவில்லை.
23அவருடைய புகழ் ஓங்கி வளர்ந்தது. அவர் தம் கணவரின் இல்லத்தில் நூற்றைந்து வயதுவரை உயிர் வாழ்ந்தார்; தம் பணிப்பெண்ணுக்கு உரிமை கொடுத்து அனுப்பிவைத்தார். பெத்தூலியாவில் உயிர் துறந்தார். அவர் கணவர் மனாசேயின் குகையில் அவரை அடக்கம் செய்தனர்.
24இஸ்ரயேல் இனத்தார் அவருக்காக ஏழுநாள் துயரம் கொண்டாடினர். அவர் தாம் இறப்பதற்கு முன்பே தம் கணவர் மனாசேயின் நெருங்கிய உறவினர், தம் நெருங்கிய உறவினர் ஆகிய அனைவருக்கும் தம் உடைமைகளைப் பகிர்ந்து கொடுத்திருந்தார்
.
25யூதித்தின் எஞ்சிய வாழ்நாளின் போதும் அவர் இறந்து நெடுங்காலத்திற்குப்பின்னரும் எவரும் இஸ்ரயேல் மக்களை மீண்டும் அச்சுறுத்தவில்லை.

16:1 திபா 150:4-5. 16:13 திபா 96:1; 144:9. 16:14 திபா 33:9; 104:30; 148:5.
16:1 * ‘முரசு கொட்டத் தொடங்குங்கள்’ என்பது மூலப் பாடம்.. 16:1 ** ‘அவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்’ என்று சில சுவடிகளில் காணப்படுகிறது. காண் 16:13. 16:2 ‘தம் கூடாரத்துக்குள் என்னை அழைத்து வந்தார்’ என்றும் மொழிபெயர்க்கலாம். 16:6 கிரேக்க பாடம்: ‘தீத்தானின் புதல்வர்கள்’.