யூதித்தின் விழுமிய ஒழுக்கம்

1ஒலோபெரின் தன் வெள்ளிக் கலன்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு யூதித்தை அழைத்துவரக் கட்டளையிட்டான். தான் உண்டுவந்த அறுசுவை உணவையே அவள் உண்ணவும், தன் திராட்சை மதுவையே அவள் பருகவும் ஏற்பாடு செய்ய ஆணையிட்டான்.
2அதற்கு யூதித்து, “இவற்றை நான் உண்ணமாட்டேன். அது குற்றமாகும். நான் கொண்டுவந்துள்ள உணவுப் பொருளே எனக்குப் போதும்” என்றார்.
3ஒலோபெரின் அவரிடம், “நீ கொண்டு வந்துள்ள உணவுப்பொருள்கள் தீர்ந்து போகுமானால் அவை போன்ற உணவை உனக்குக் கொடுக்க எவ்வாறு எங்களால் முடியும்? உன் இனத்தாருள் ஒருவரும் எங்கள் நடுவே இல்லையே!” என்றான்.
4“என் தலைவரே, உம் உயிர்மேல் ஆணை! உம் அடியவள் என்னிடம் உள்ள உணவுப் பொருள்கள் தீர்ந்து போவதற்கு முன்னரே ஆண்டவர் தாம் திட்டமிட்டுள்ளதை என் வழியாய்ச் செயல்படுத்துவார்” என்றார் யூதித்து.
5பிறகு ஒலோபெரினின் பணியாளர்கள் யூதித்தைக் கூடாரத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். அவர் நள்ளிரவுவரை உறங்கினார்; வைகறை வேளையில் துயிலெழுந்தார்.
6“உம் அடியவள் வெளியே சென்று இறைவனிடம் மன்றாடும்படி என் தலைவர் கட்டளையிடட்டும்” என்று யூதித்து ஒலோபெரினுக்குச் சொல்லியனுப்பினார்.
7அவரைத் தடைசெய்யாமலிருக்க ஒலோபெரின் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான். யூதித்து மூன்று நாள் பாளையத்தில் தங்கியிருந்தார்; இரவுதோறும் பெத்தூலியாவின் பள்ளத்தாக்குக்குச் சென்று, பாளையத்தின் அருகில் இருந்த நீரூற்றில் குளிப்பார்.
8குளித்து முடித்தபின் தம் இனத்து மக்களுக்கு வெற்றி அளிக்கும் வழியைத் தமக்குக் காட்டுமாறு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை மன்றாடுவார்.
9அவர் தூய்மை அடைந்தவராய்த் திரும்பிவந்து, மாலையில் உணவு அருந்தும்வரை கூடாரத்துக்குள்ளேயே தங்கியிருப்பார்.

ஒலோபெரின் அளித்த விருந்து

10நான்காம் நாள் ஒலோபெரின் தனக்கு நெருக்கமான பணியாளர்களுக்கு மட்டும் விருந்து அளித்தான்; படைத் தலைவர்களுள் ஒருவரையும் அழைக்கவில்லை.
11தன் உடைமைகள் அனைத்துக்கும் பொறுப்பாய் இருந்த பகோவா என்ற உயர் அலுவலரிடம்,* “நீர் உடனே சென்று, உம் பொறுப்பில் உள்ள அந்த எபிரேயப் பெண் வந்து நம்மோடு உண்டு பருக இணங்கச் செய்யும்.
12இத்தகைய பெண்ணுடன் நாம் உறவுகொள்ளாமல் விட்டுவிடுவது நமக்கு இழிவாகும். அவளை நாம் கவர்ந்திழுக்கத் தவறினால் அவள் நம்மை எள்ளி நகையாடுவாள்” என்றான்.
13ஒலோபெரினிடமிருந்து பகோவா வெளியேறி யூதித்திடம் சென்று, “என் தலைவர் முன்னிலையில் பெருமை அடையவும், எங்களோடு திராட்சை மது அருந்தி மகிழ்ந்திருக்கவும், நெபுகத்னேசரின் அரண்மனையில் பணியாற்றும் அசீரியப் பெண்களுள் ஒருத்தி போல மாறவும் இத்துணை அழகு வாய்ந்த பெண்மணியாகிய தாங்கள் தயங்காமல் வரவேண்டும்” என்றான்.
14யூதித்து அவனிடம், “என் தலைவர் சொன்னதைச் செய்ய மறுக்க நான் யார்? அவருக்கு விருப்பமானதை நான் உடனே செய்வேன். நான் இறக்கும் வரை அது எனக்கு மகிழ்ச்சி தரும்” என்றார்.
15ஆகவே யூதித்து எழுந்து சிறப்பாடை அணிந்து, பெண்களுக்குரிய எல்லா அணிகலன்களாலும் தம்மை அழகுபடுத்திக்கொண்டார். அவருடைய பணிப்பெண் அவருக்குமுன்னே சென்றாள்; யூதித்து நாள்தோறும் உணவு அருந்துகையில் விரித்து அமர்வதற்காகப் பகோவா கொடுத்திருந்த கம்பளத்தை ஒலேபெரினுக்கு முன்னிலையில் பணிப்பெண் தரையில் விரித்தாள்.
16பின் யூதித்து உள்ளே சென்று அதன்மேல் அமர்ந்தார். ஒலேபெரினுடைய உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது; அவனது மனம் கிளர்ந்தெழுந்தது; அவரைக் கண்ட நாள்முதலே அவரோடு உறவு கொள்ள வாய்ப்புத் தேடியிருந்ததால் இப்பொழுது அவரை அடைய அவன் ஏக்கம் கொண்டான்.
17எனவே ஒலோபெரின் அவரிடம், “மது அருந்தி எங்களுடன் களிப்புற்றிரு” என்றான்.
18அதற்கு யூதித்து, “என் தலைவரே! நான் மகிழ்ச்சியோடு மது அருந்துவேன்; ஏனெனில் இந்நாள் என் வாழ்வின் பொன்னாளாகும்” என்றார்.
19தம் பணிப்பெண் சமைத்திருந்ததை எடுத்து அவன் முன்னிலையில் உண்டு பருகினார்.
20ஒலோபெரின் அவரிடம் தன் மனத்தைப் பறிகொடுத்து, மட்டுமீறிக் குடித்தான். பிறந்தநாள் முதல் அன்றுபோல அவன் என்றுமே குடித்ததில்லை.

12:2 தோபி 1:11; தானி 1:8; யூதி 10:5.
12:11 ‘அலி’ என்றும் மொழிபெயர்க்கலாம்.