தோபித்து முன்னுரை


யூதர்கள் கி.மு. 721-இல் அசீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டு அடிமைகளாக வாழ்ந்ததைப் பின்னணியாகக் கொண்டு யூதக் குடும்ப வாழ்வை விளக்கும் இக்கதை கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இது, யூத போதகர்கள் கையாண்டுவந்த விவிலிய விளக்கமுறையான ‘மித்ராஷ்’ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது என்பர் அறிஞர்; ஞான இலக்கியத்தைச் சேர்ந்ததாகக் கருதுவாரும் உளர்.

இந்நூல் முதலில் அரமேய மொழியில் எழுதப்பட்டிருக்கவேண்டும். அது முழுமையாக நமக்குக் கிடைக்காததால், அதன் கிரேக்க மொழிபெயர்ப்பே மூலபாடமாக இன்று பயன்படுகிறது. அண்மைக் காலம்வரை வத்திக்கான், அலக்சாந்திரியத் தோற்சுவடிகளினின்றே ஏறத்தாழ எல்லா மொழிபெயர்ப்புகளும் செய்யப்பட்டு வந்தன. இந்தச் சுவடிகளைவிடச் சீனாய்ச் சுவடி தொன்மை வாய்ந்ததால், இதுவே இம்மொழிபெயர்ப்புக்கு மூலபாடமாக அமைகிறது. சீனாய்ச் சுவடி முன்னையவற்றைவிடச் சற்று விரிவானது.

பல்வேறு துன்பங்களிடையிலும் தம்மீது பற்றுறுதிகொண்டு வாழ்வோர்க்குக் கடவுள் கைம்மாறு அளித்து அவர்களைக் காப்பார் என்பது இந்நூலின் மையச் செய்தியாகும்.

நூலின் பிரிவுகள்

  1. முகவுரை 1:1 - 1:2
  2. தோபித்துக்கு நேர்ந்த சோதனைகள் 1:3 - 3:15
  3. தோபித்து பெற்ற கைம்மாறு 4:1 - 11:18
  4. தோபித்தின் புகழ்ப்பாவும் அறிவுரையும் 12:1 - 14:11
  5. முடிவுரை 14:12 - 15