தோபித்து பார்வை இழத்தல்

1சக்கர்தோன் ஆட்சியில் நான் வீடு திரும்பினேன். என் மனைவி அன்னாவும் என் மகன் தோபியாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டனர். வாரங்களின் விழாவான பெந்தெகோஸ்து திருவிழாவின்பொழுது எனக்காக நல்லதொரு விருந்து தயாரிக்கப்பட்டது. நான் உணவு அருந்த அமர்ந்தேன்.
2விருந்தின்போது எனக்குப் பலவகை உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது என் மகன் தோபியாவிடம், “பிள்ளாய், நீ போய், நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நம் உறவின் முறையாருள் கடவுளை முழு மனத்தோடு தேடும் ஏழை எவரையேனும் கண்டால், அவரை அழைத்துவா; அவர் என்னோடு உணவு அருந்தட்டும். நீ திரும்பிவரும்வரை நான் உனக்காகக் காத்திருப்பேன், மகனே” என்று கூறினேன்.
3தோபியா எங்கள் உறவின் முறையாருள் ஏழை ஒருவரைத் தேடிச் சென்றான். அவன் திரும்பி வந்து, “அப்பா” என்று அழைத்தான். நான், “என்ன மகனே?” என்றேன். அவன் மறுமொழியாக, “அப்பா, நம் இனத்தாருள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் சந்தை வெளியில் எறியப்பட்டு அங்கேயே கிடக்கிறது” என்றான்.
4உடனே நான் எழுந்து, உணவைத் தொடாமலே வெளியேறித் தெருவிலிருந்து சடலத்தைத் தூக்கிவந்தேன்; கதிரவன் மறைந்தபின் அடக்கம் செய்யலாம் என்று அதை என் வீட்டின் ஓர் அறையில் வைத்தேன்.
5வீடு திரும்பியதும் குளித்து விட்டுத் துயருடன் உணவு அருந்தினேன்.
6“உங்கள் திருநாள்களைத் துயர நாள்களாகவும் பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்” என்று பெத்தேலைக் குறித்து இறைவாக்கினர் ஆமோஸ் கூறிய சொற்களை நினைத்து அழுதேன்.
7கதிரவன் மறைந்ததும் நான் வெளியே சென்று, குழி தோண்டிச் சடலத்தைப் புதைத்தேன்.
8என் அண்டை வீட்டார், “இவனுக்கு அச்சமே இல்லையா? இத்தகையதொரு செயலைச் செய்ததற்காகத்தானே ஏற்கெனவே இவனைக் கொல்லத் தேடினார்கள். இவனும் தப்பியோடினான். இருப்பினும் இறந்தவர்களை மீண்டும் அடக்கம் செய்கின்றானே” என்று இழித்துரைத்தனர்.
9அன்று இரவு குளித்துவிட்டு என் வீட்டு முற்றத்தின் சுவர் அருகில் படுத்து உறங்கினேன். வெப்பமாக இருந்ததால் என் முகத்தை மூடவில்லை.
10என் தலைக்குமேல் சுவரில் குருவிகள் இருந்தது எனக்குத் தெரியாது. அவற்றின் சூடான எச்சம் என் கண்களில் விழுந்தது. உடனே கண்களில் வெண்புள்ளிகள் தோன்றின. நலம் பெறுமாறு மருத்துவர்களிடம் சென்றேன். அவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும் வெண்புள்ளிகளால் என் பார்வை குன்றிவந்தது. இறுதியாகப் பார்வையை முற்றும் இழந்தேன். நான் பார்வையற்றவனாக நான்கு ஆண்டுகள் வாழ்ந்தேன். என் உறவின் முறையார் அனைவரும் எனக்காக வருந்தினர். எலிமாய் செல்லும்வரை இரண்டு ஆண்டுகளாக அகிக்கார் என்னைப் பேணிவந்தான்.
11அக்காலத்தில் என் மனைவி அன்னா பெண்களுக்குரிய கைவேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.
12தன் கைவேலைப்பாடுகளை அவள் உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்க, அவர்கள் அவளுக்குக் கூலி கொடுப்பார்கள். திசித்தர் மாதம் ஏழாம் நாள் தான் நெய்திருந்ததை உரிமையாளர்களுக்கு அவள் அனுப்பிவைத்தாள். அவர்கள் அவளுக்கு முழுக் கூலியுடன், விருந்து சமைக்க ஓர் ஆட்டுக்குட்டியையும் கொடுத்தார்கள்.
13அவள் திரும்பி வந்தபொழுது ஆட்டுக்குட்டி கத்தத் தொடங்கியது. உடனே நான் அவளை அழைத்து, “இந்த ஆட்டுக்குட்டி எங்கிருந்து வந்தது?” என்று கேட்டேன். “ஒருவேளை இது திருடப்பட்டதோ? அப்படியானால் உரியவரிடம் இதைத்திருப்பிக் கொடுத்துவிடு; ஏனெனில் திருடிய எதையும் உண்ண நமக்கு உரிமை இல்லை” என்றேன்.
14அதற்கு அவள் என்னிடம், “கூலிக்கு மேலாக இது எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது” என்றாள். இருப்பினும் நான் அவளை நம்பவில்லை. உரியவருக்கு அதைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு வற்புறுத்தினேன். அவளது செயலைக் குறித்து நான் நாணினேன். அப்பொழுது அவள் மறுமொழியாக என்னிடம், “உம்முடைய தருமங்கள் எங்கே? நற்செயல்கள் எங்கே? உம்முடைய குணம் இப்பொழுது நன்றாகவே புலப்படுகிறது!” என்றாள்.

2:5 எண் 19:11=13. 2:6 ஆமோ 8:10.