நாசீர் விதிகள்

1ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஓர் ஆணோ பெண்ணோ தன்னை ஆண்டவருக்குத் தனிப்படுத்திச் சிறப்பான பொருத்தனையான நாசீர்* பொருத்தனை செய்து ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தால்,
3திராட்சை இரசம், மது ஆகியவற்றை அவன் விலக்க வேண்டும்; திராட்சை இரசம், மது ஆகியவற்றின் காடியை அருந்தக் கூடாது. திராட்சைப்பழச் சாற்றைக் குடிக்கக் கூடாது. திராட்சைப் பழங்களையோ, வற்றலையோ உண்ணவும் கூடாது.
4பொருத்தனைக் காலம் முழுதும் திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கும் எதையும், விதைகள், தோல்களைக் கூட, அவன் உண்ணக்கூடாது.
5அர்ப்பணம் செய்துகொண்ட பொருத்தனைக் காலம் முழுதும் சவரக்கத்தி அவன் தலையில் படக்கூடாது; ஆண்டவருக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முடியுமட்டும் அவன் தூய்மையுடன் இருப்பான்; அவன் தன் தலை முடியை நீளமாக வளர விடுவான்.
6ஆண்டவருக்கென்று தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முழுதும் பிணத்தருகே அவன் போகக்கூடாது.
7தன் தந்தை, தாய், சகோதரன், சகோதரி இறந்தால் கூட அவர்களுக்காகத் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது; ஏனெனில், கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதின் அடையாளம் அவன். தலையில் இருக்கிறது.
8அர்ப்பண காலம் முழுதும் அவன் ஆண்டவருக்குத் தூய்மையாக இருப்பான்.
9எவரேனும் திடீரென அவன் அருகே இறந்து, புனிதப்படுத்தப்பட்ட அவன் தலையைத் தீட்டுப்படுத்தினால் தூய்மைப்படுத்தும் நாளில் அவன் தன் தலையைச் சிரைத்துக் கொள்ள வேண்டும். ஏழாம் நாளில் அவன் அதைச் சிரைத்துக்கொள்வான்;
10எட்டாம் நாளில் அவன் இரு காட்டுப் புறாக்களையோ, இரு மாடப்புறாக்குஞ்சுகளையோ சந்திப்புக் கூடாரநுழை வாயிலுக்கு குருவிடம் கொண்டு வர வேண்டும்.
11குரு ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் ஒப்புக் கொடுப்பார்; பிணத்தை முன்னிட்டு அவன் பாவம்செய்துள்ளதால், அவனுக்காகக் கறைநீக்கம் செய்வார்; அதே நாளில் அவன் தலையையும் புனிதப்படுத்துவார்.
12அவன் பொருத்தனை செய்த காலத்திற்காக மீண்டும் தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பான்; குற்றநீக்கப்பலிக்காக ஓராண்டு ஆட்டுக்கிடாய் ஒன்றைக் கொண்டு வருவான்; அவன் அர்ப்பண நிலை தீட்டுப்பட்டதால் கடந்துவிட்ட காலம் கணக்கில் வராது.
13அர்ப்பண காலம் நிறைவுறும் போது நாசீருக்கான சட்டம் இதுவே; சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்கு அவன் கொண்டு வரப்படுவான்;
14ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப் பொருள்; பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, பாவ நீக்கப் பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு ஆட்டுக்குட்டி ஒன்று, நல்லுறவுப் பலிக்காகப் பழுதற்ற ஆட்டுக்கிடாய் ஒன்று.
15புளிப்பற்ற அப்பம் ஒரு கூடை, எண்ணெயில் மெல்லிய மாவைப் பிசைந்து செய்த நெய்யப்பங்கள், எண்ணெய் தடவிப் புளிப்பற்ற மாவால் செய்த அடைகள், அவற்றின் உணவுப் படையல், நீர்மப்படையல் ஆகியவை.

குருத்துவ ஆசிமொழிகள்

16குரு அவற்றை ஆண்டவர்முன் கொண்டு வந்து அவனுக்காகப் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் நிறைவேற்றுவார்.
17கூடையிலுள்ள புளிப்பற்ற அப்பத்தோடு ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்கு நல்லுறவுப் பலியாக ஒப்புக்கொடுப்பார்; மேலும், அவனுக்காக குரு உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் படைப்பார்;
18நாசீர் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் மழித்து, புனிதப்படுத்தப்பட்ட தன் தலைமுடியை எடுத்து நல்லுறவுப் பலியின் அடியில் இருக்கும் நெருப்பில் போடுவான்.
19அவன் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையை மழித்த பின்னர் குரு வெந்துகொண்டிருக்கும் ஆட்டுக்கிடாயின் முன் சந்தை எடுத்து, கூடையிலிருந்து நெய்யப்பம் ஒன்றையும் புளிப்பற்ற அடை ஒன்றையும் எடுத்து நாசீர் கைகளில் வைப்பார்.
20அவற்றை ஆரத்திப் படையலாகக் குரு ஆண்டவர் திருமுன் காட்டுவார். ஆரத்தியாகக் காட்டப்பட்ட மார்புப்பகுதியும் உயர்த்திப் படைக்கப்பட்ட தொடையும் புனிதப் பங்காகக் குருவைச் சேரும்; அதன் பின்னரே, நாசீர் திராட்சை இரசம் குடிக்கலாம்.
21நாசீர்ப் பொருத்தனை செய்பவனுக்கான சட்டம் இதுவே; ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப்படையல், அவனது நாசீர்ப் பொருத்தனைக்கேற்ப இருக்க வேண்டும்; இது மற்றப்படி அவன் தர இயன்றதற்கு நீங்கலானது; அவனது பொருத்தனைக்கேற்பத் தன் நாசீர் அர்ப்பணத்துக்குரிய சட்டத்தின்படி அவன் செய்ய வேண்டும்.
22ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
23நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை:

24“ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி

உன்னைக் காப்பாராக!

25ஆண்டவர் தம் திருமுகத்தை

உன்மேல் ஒளிரச்செய்து

உன்மீது அருள் பொழிவாராக!

26ஆண்டவர் தம் திருமுகத்தை

உன் பக்கம் திருப்பி

உனக்கு அமைதி அருள்வாராக!”

27இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

6:3 லூக் 1:15. 6:13-21 திப 21:23-34.
6:2 எபிரேயத்தில், ‘பிரித்தெடுக்கப்பட்டவர்’ என்பது பொருள்.