பிலயாமுக்காக மோவாபு மன்னன் ஆளனுப்புதல்

1அதன் பின்னர், இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு யோர்தானுக்கு அக்கரையில் எரிகோவுக்கு அருகிலுள்ள மோவாபிய சமவெளிகளில் பாளையமிறங்கினார்கள்.
2சிப்போர் மகன் பாலாக்கு இஸ்ரயேல் எமோரியருக்குச் செய்திருந்த அனைத்தையும் கண்டான்.
3இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை முன்னிட்டு மோவாபு பெரிதும் கலங்கிற்று; அம்மக்களைப் பற்றிய அச்சம் மோவாபை மேற்கொண்டது.
4மோவாபு மிதியானின் மூப்பர்களிடம், “மாடு வயல்வெளியில் புல்லை வேரற மேய்வது போல் இக்கும்பலும் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மேய்ந்துவிடும்” என்று கூறிற்று. அச்சமயம் மோவாபிய மன்னன், சிப்போர் மகன் பாலாக்கு.
5அவன் பெத்தோரைச் சார்ந்த பெகோரின் மகன் பிலயாமை அழைத்துவரத் தூதரை அனுப்பினான்; அந்த இடம் ஆமாபு நாட்டின் ஆற்றருகே இருந்தது. அவன் கூறியது:“ இதோ ஒரு மக்கள் கூட்டம் எகிப்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது; அவர்கள் நிலம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் எனக்கு எதிரில் குடியேறியிருக்கிறார்கள்.
6இப்போதே நீர் புறப்பட்டு வந்து எனக்காக இம்மக்களைச் சபித்துவிடும்; அவர்கள் என்னிலும் மிகவும் வலிமை மிக்கவராய் இருக்கின்றனர்; ஒரு வேளை நான் அவர்களை முறியடித்து நாட்டிலிருந்து துரத்தக்கூடும்; ஏனெனில், நீர் எவனுக்கு ஆசி வழங்குவீரோ அவன் ஆசிபெறுவான், நீர் எவனைச் சபிப்பீரோ அவன் சாபம் அடைவான் என்று நான் அறிவேன்.”
7அங்ஙனமே, மோவாபு மூப்பரும் மிதியான் மூப்பரும் குறிசொல்வதற்கான கட்டணத்தையும் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போயினர். அவர்கள் பிலயாமிடம் வந்து பாலாக்கு அனுப்பிய செய்தியைச் சொன்னார்கள்.
8அவர் அவர்களிடம், “இந்த இரவில் இங்குத் தங்கியிருங்கள்; ஆண்டவர் என்னோடு பேசுகிறபடி நான் உங்களுக்கு வார்த்தை தருவேன்” என்றார். அவ்வாறே மோவாபின் தலைவர்கள் பிலயாமுடன் தங்கினார்கள்.
9கடவுள் பிலயாமிடம் வந்து, “உன்னோடிருக்கிற இந்த ஆள்கள் யார்?” என்று கேட்டார்.
10பிலயாம் கடவுளிடம், “மோவாபின் மன்னனான சிப்போர் மகன் பாலாக்கு என்னிடம் அனுப்பியுள்ளான்;
11‘இதோ! ஒரு மக்கள் கூட்டம் எகிப்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது; அவர்கள் நிலம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்; இப்போதே நீர் புறப்பட்டு வந்து எனக்காக அவர்களைச் சபித்துவிடும்; ஒரு வேளை நான் அவர்களுடன் போரிட்டு அவர்களை நாட்டிலிருந்து துரத்திவிடக்கூடும்’ என்று கூறியனுப்பியுள்ளான்” என்றார்.
12கடவுள் பிலயாமிடம், “நீ அவர்களோடு போக வேண்டாம்; அம்மக்களைச் சபிக்கவும் வேண்டாம்; ஏனெனில், அவர்கள் ஆசி பெற்றோர்” என்று கூறினார்.
13அப்படியே பிலயாம் காலையில் எழுந்து பாலாக்கு அனுப்பிய தலைவர்களிடம், “உங்கள் சொந்த நாட்டுக்குப் போங்கள்; நான் உங்களோடு வருவதற்கு ஆண்டவர் அனுமதி மறுத்துவிட்டார்” என்று சொன்னார்.
14அதன்படி மோவாபின் தலைவர்கள் எழுந்து பாலாக்கிடம் போய், “பிலயாம் எங்களுடன் வர மறுக்கிறார்” என்றார்கள்.
15மீண்டும் பாலாக்கு அவர்களைவிட மதிப்பில் உயர்ந்த இன்னும் பல தலைவர்களை அனுப்பினான்.
16அவர்கள் பிலயாமிடம் வந்து, “சிப்போர் மகன் பாலாக்கு கூறுவது, “என்னிடம் நீர் வருவதைத் தடுக்க எதற்கும் இடம் கொடாதேயும்;
17உறுதியாக நான் உமக்கு மிகுந்த மரியாதை செய்வேன்; நீர் எனக்குச் சொல்லுவதையெல்லாம் நான் செய்வேன்; வாரும், இந்த மக்களை எனக்காகச் சபியும்’” என்றனர்.
18ஆனால், பிலயாம் பாலாக்கின் அலுவலர்களிடம் பதில் மொழியாகக் கூறியது: பாலாக்கு தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் எனக்குத் தந்தாலும் என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையைக் குறைவாகவோ கூடுதலாகவோ என்னால் மீற முடியாது;
19இன்றிரவு நீங்கள் தங்கிச் செல்லுங்கள்; ஆண்டவர் கூடுதலாக எனக்கு அறிவிக்கலாம்.
20கடவுள் இரவில் பிலயாமிடம் வந்து அவரிடம், “இந்த ஆள்கள் உன்னை அழைக்க வந்தால் நீ எழுந்து அவர்களுடன் போ; ஆயினும் நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்” என்றார்.
21அங்ஙனமே, பிலயாம் காலையில் எழுந்து தம் கழுதைக்குச் சேணங்கட்டி மோவாபின் தலைவர்களோடு போனார்.

பிலயாமும் அவர் கழுதையும்

22ஆயினும், அவர் போனதை முன்னிட்டுக் கடவுளின் சினம் மூண்டது; ஆண்டவரின் தூதர் வழியிலே அவருக்கு எதிரியாக நின்றார். அப்போது அவர் தம் கழுதைமேல் ஏறித் தம் பணியாளர் இருவருடன் சென்று கொண்டிருந்தார்.
23ஆண்டவரின் தூதர் கையில் உருவிய வாளுடன் பாதையில் நின்றுகொண்டிருப்பதைக் கழுதை கண்டது; எனவே, கழுதை பாதையை விட்டு விலகி வயலுக்குள் சென்றது; பாதைக்கு அது திரும்பும்படி பிலயாம் கழுதையை அடித்தார்.
24அடுத்து, ஆண்டவரின் தூதர் திராட்சைத் தோட்டங்களிடையே இருபுறமும் சுவர்களுள்ள ஒரு குறுகிய பாதையில் நின்றார்.
25ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை சுவரில் முட்டிப் பிலயாம் காலைச் சுவரோடு நெருக்கியது; ஆதலால், அதை அவர் மறுபடியும் அடித்தார்.
26பின் ஆண்டவரின் தூதர் முன்னதாகவே சென்று வலப்புறமோ இடப்புறமோ திரும்ப முடியாத ஒரு குறுகிய இடத்தில் நின்றார்.
27ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை பிலயாமுக்கு அடியில் படுத்துக்கொண்டது; பிலயாம் சினம் கொண்டு தம் கோலால் கழுதையை அடித்தார்.
28உடனே ஆண்டவர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது அவரிடம், “நீர் மூன்று முறை இவ்வாறு என்னை அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்?” என்றது.
29பிலயாம் கழுதையிடம், “நீதான் என்னை ஏளனம் செய்து கொண்டிருக்கிறாய்; என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்தால் உன்னை இந்நேரம் கொன்றிருப்பேன்” என்றார்.
30கழுதை பிலயாமிடம், “நான் உம் கழுதையன்றோ? இன்றுவரை உம் வாழ்நாளெல்லாம் என் மீது ஏறி வந்துள்ளீரே! எப்போதாவது நான் இப்படிச் செய்து பழக்கமுண்டா?” என்றது, அதற்கு அவர், “இல்லை” என்றார்.
31ஆண்டவர் பிலயாமின் கண்களைத் திறந்தார், கையில் உருவிய வாளுடன் ஆண்டவரின் தூதர் பாதையில் நின்றுகொண்டிருப்பதை அவர் கண்டார்; அவர் தலை வணங்கி முகங்குப்புற விழுந்தார்.
32ஆண்டவரின் தூதர் அவரிடம் கூறியது: “ஏன் மூன்று முறை இவ்வாறு கழுதையை அடித்தாய்? இதோ நான் உனக்கு எதிரியாக வந்திருக்கிறேன்; ஏனெனில், என் பார்வையில் உன் வழி தவறானது.
33இந்தக் கழுதை என்னைக் கண்டு இந்த மூன்று முறையும் என் முன்னின்று திரும்பி விலகியது. அது என் முன்னின்று திரும்பி விலகாதிருந்தால் உறுதியாக இப்போதே உன்னை நான் கொன்று, அதை வாழ விட்டிருப்பேன்.”
34பிலயாம் ஆண்டவரின் தூதரிடம், “நான் பாவம் செய்துவிட்டேன்; நீர் பாதையிலே எனக்கு எதிராக நின்றதை நான் அறிந்து கொள்ளவில்லை; எனவே, இப்போதும் இது உம் பார்வையில் தீயதாக இருப்பின் நான் திரும்பிப் போய்விடுகிறேன்” என்றார்.
35ஆண்டவரின் தூதர் பிலயாமிடம், “இந்த ஆள்களுடன் நீ போ; ஆயினும், நான் சொல்லும் வார்த்தையை மட்டுமே நீ பேச வேண்டும்” என்றார். அவ்வாறே, பிலயாம் பாலாக்கு அனுப்பிய தலைவர்களுடன் போனார்.

பாலாக்கு பிலயாமை வரவேற்றல்

36பிலயாம் வந்திருப்பதைப் பாலாக்கு கேட்டதும் அவரைச் சந்திக்கும்படி அவன் மோவாபு நகருக்குப் புறப்பட்டுப்போனான்; அது அர்னோன் எல்லையின் இறுதியில் இருந்தது.
37பாலாக்கு பிலயாமிடம், “நான் உம்மை அழைத்து வர ஆளனுப்பவில்லையா? பின்னர் ஏன் நீர் வரவில்லை? உமக்கு மரியாதை செய்ய நான் இயலாதவனோ?” என்று கேட்டான்.
38பிலயாம் பாலாக்கிடம், “இதோ நான் உம்மிடம் வந்துள்ளேன்; நானாக எதையும் பேச இப்போது என்னால் இயலாதே! கடவுள் என் வாயில் வைக்கும் வார்த்தையாலேயே நான் பேச வேண்டும்” என்றார்.
39அதன்பின், பிலயாம் பாலாக்குடன் போனார்; அவர்கள் கிர்யத்து குசோத்துக்கு வந்தனர்.
40பாலாக்கு ஆடு மாடுகளைப் பலியிட்டு அவற்றிலிருந்து பிலயாமுக்கும் அவரோடிருந்த தன் அலுவலர்க்கும் கொடுத்தடுப்பினான்.

பிலயாமின் முதல் உரை

41மறுநாள் பாலாக்கு பிலயாமை பாமோத்து பாகாலுக்குக் கூட்டிக் கொண்டு வந்தார்; அங்கிருந்து அவன் இஸ்ரயேல் மக்களில் மிகவும் அண்மையிலிருந்தோரைப் பார்த்தான்.

22:5 எண் 31:8; 2 பேது 2:15-16; யூதா 11.