1“இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
2ஆனால், அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப்போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார்.
3அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர்போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போல் அவர்களைப் புடமிடுவார்.
4அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.
5அப்போது, “சூனியக்காரர், விபசாரிகள், பொய்யாணையிடுவோர், கூலிக்காரருக்குக் கூலி கொடுக்காத வம்பர், கைம்பெண்ணையும் அனாதைகளையும் கொடுமைப்படுத்துவோர், அன்னியரின் வழக்கைப் புரட்டுவோர், எனக்கு அஞ்சி நடக்காதோர் ஆகிய அனைவர்க்கும் எதிராகச் சான்றுபகர்ந்து தண்டனைத் தீர்ப்பு வழங்க நான் விரைந்து வருவேன்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
பத்தில் ஒரு பங்கு படைத்தல்
6“யாக்கோபின் பிள்ளைகளே, ஆண்டவராகிய நான் மாறாதவர். அதனால்தான் நீங்கள் இன்னும் அழியாதிருக்கிறீர்கள்.
7உங்கள் மூதாதையரின் நாளிலிருந்து என் கட்டளைகளைவிட்டு அகன்றுபோனீர்கள். அவற்றைக் கைக்கொள்ளவில்லை. என்னிடம் திரும்பி வாருங்கள்; நானும் உங்களிடம் திரும்பி வருவேன்,” என்கிறார் படைகளின் ஆண்டவர். “நீங்களோ, ‘நாங்கள் எவ்வாறு திரும்பி வருவோம்?’ என்கிறீர்கள்.
8மனிதர் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? நீங்கள் என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள்! ‘எவ்வாறு நாங்கள் உம்மைக் கொள்ளையடிக்கிறோம்?’ என்று வினவுகிறீர்கள். நீங்கள் தரவேண்டிய பத்திலொரு பங்கிலும் காணிக்கையிலும் தான்.
9நீங்களும் உங்கள் இனத்தார் அனைவரும் என்னைக் கொள்ளையடித்ததால் சாபத்துக்கு உள்ளானீர்கள்.
10என் இல்லத்தில் உணவு இருக்கும் பொருட்டுப் பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டு வந்து அங்கே களஞ்சியத்தில் சேருங்கள். அதன் பிறகு நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, உங்கள் மேல் ததும்பி வழியுமாறு ஆசி வழங்கிறேனா இல்லையா எனப் பாருங்கள்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
11“பயிரைத் தின்று அழிப்பனவற்றை உங்களை முன்னிட்டுக் கண்டிப்பேன். அவை உங்கள் நிலத்தின் விளைச்சலைப் பாழாக்கமாட்டா; உங்கள் தோட்டத்தில் உள்ள திராட்சைக் கொடிகள் கனி கொடுக்கத் தவறமாட்டா,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
12“அப்போது வேற்றினத்தார் அனைவரும் உங்களைப் ‘பேறுபெற்றோர்’ என்பார்கள். ஏனெனில் நீங்கள் இனிய நாட்டின் மக்களாய்த் திகழ்வீர்கள்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
கடவுளின் வாக்குறுதி
13“எனக்கு எதிராக நீங்கள் கடுஞ்சொற்களை உதிர்த்து வந்தீர்கள்,” என்கிறார் ஆண்டவர். “ஆயினும், ‘உமக்கு எதிராக என்ன பேசினோம்?’ என்று கேட்கிறீர்கள்.
14கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்; அவரது திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதாலும் படைகளின் ஆண்டவர் திருமுன் மனம் வருந்தி நடந்துகொள்வதாலும் நமக்கு என்ன பயன்?
15இனிமேல் நாங்கள் ‘ஆணவக்காரரே பேறுபெற்றோர்’ என்போம். கொடியோர் தழைத்தோங்குவது மட்டுமல்ல, கடவுளை அவர்கள் சோதித்துப் பார்த்தாலும், தப்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றெல்லாம் நீங்கள் கூறவில்லையா?”
16அப்போது, ஆண்டவருக்கு அஞ்சி நடந்தோர் ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டனர். ஆண்டவரும் உன்னிப்பாகக் கேட்டார். ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவரது பெயரை நினைந்து வாழ்வோருக்கென நினைவு நூல் ஒன்று அவர் திருமுன் எழுதப்பட்டது.
17“நான் செயலாற்றும் அந்நாளில் அவர்கள் எனது தனிப்பெரும் சொத்தாக இருப்பார்கள்” என்கிறார் படைகளின் ஆண்டவர். ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவதுபோல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன்.
18அப்போது நீங்கள் நேர்மையாளர்க்கும் கொடியோர்க்கும், கடவுளுக்கு ஊழியம் செய்வோர்க்கும் அவருக்கு ஊழியம் செய்யாதோர்க்கும் உள்ள வேற்றுமையை மீண்டும் கண்டுகொள்வீர்கள்.
3:1 மத் 11:10; மாற் 1:2; லூக் 1:76; 7:27. 3:2 யோவே 2:11; திவெ 6:17. 3:10 லேவி 27:30; எண் 18:21-24; இச 12:6; 14:22-29; நெகே 13:12.