விளக்குத்தண்டைக் குறித்த காட்சி
1என்னோடு பேசிய தூதர் மீண்டும் வந்து, உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி,
2“நீ என்ன காண்கிறாய்?” என்று என்னைக் கேட்க, நான், “இதோ முழுவதும் பொன்னாலான விளக்குத் தண்டு ஒன்றைக் காண்கிறேன்; அதன் உச்சியில் கிண்ணம் ஒன்று உள்ளது; அக்கிண்ணத்தின்மேல் ஏழு அகல்கள் இருக்கின்றன; மேலே உள்ள ஒவ்வோர் அகலுக்கும் ஏழு மூக்குகள் உள்ளன;
3விளக்குத் தண்டின் அருகில் வலப்புறம் ஒன்றும் இடப்புறம் ஒன்றுமாக இரு ஒலிவ மரங்கள் இருக்கின்றன” என்றேன்.
4அப்போது என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரை நோக்கி, நான், “என் தலைவரே! இவை எதைக் குறிக்கின்றன?” என்று வினவினேன். என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர்,
5“இவை எதைக் குறிக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா?” எனக் கேட்டார். நான் “என் தலைவரே! எனக்குத் தெரியாது” என்றேன்.
செருபாபேலுக்கு ஆண்டவரின் வாக்குறுதி
6மீண்டும் அவர் என்னிடம், “செருபாபேலுக்கு ஆண்டவர் அருளியவாக்கு இதுவே: உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல; ஆனால் எனது ஆவியாலே ஆகும்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
7மாபெரும் மலையே! செருபாபேலுக்குமுன் உன் நிலை என்ன? ஒரு சமவெளிக்கு ஒப்பாவாய்; அவரே தலையாய கல்லைக் கொண்டு வருவார்; அப்போது அதன்மேல் ‘அருள்பொழிக! அருள்பொழிக!’ என்ற ஆரவாரம் ஒலிக்கும்” என்றார்.
8ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது.
9“செருபாபேலின் கைகளே இக்கோவிலுக்கு அடித்தளம் இட்டன. அவர் கைகளே இவ்வேலையை முடித்துவைக்கும். என்னை உங்களிடம் அனுப்பியவர் படைகளின் ஆண்டவரே என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள்.”
10வேலை தொடங்கிய நாளை அவமதித்தவர்கள் யாரோ அவர்கள் செருபாபேலின் கையில் இரு தூக்கு நூற்குண்டு இருப்பதைக் கண்டு அகமகிழ்வார்கள்.
11“அந்த அகல்கள் ஏழும் நிலவுலகெங்கும் சுற்றிப் பார்க்கும் ஆண்டவரின் கண்கள்” என்றார். அப்போது நான், “விளக்குத் தண்டின் அருகில் வலப்புறமும் இடப்புறமும் உள்ள இந்த இரு ஒலிவ மரங்களும் எதைக் குறிக்கின்றன?” என வினவினேன்.
12மீண்டும் நானே அவரிடம், “எண்ணெய் ஊற்றுவதற்கென வைத்திருக்கும் இரண்டு பொற்குழாய்களின் அருகில் ஒலிவ மரக்கிளைகள் இரண்டு இருப்பதன் பொருள் என்ன?” எனக் கேட்டேன்.
13அதற்கு அவர், “இவை எதைக் குறிக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா?” என்றார். நான், “தெரியாது என் தலைவரே” என்றேன்.
14அதற்கு அவர், “இவை அனைத்துலகின் ஆண்டவர் திருமுன் நிற்கின்ற திருநிலைப்படுத்தப்பட்ட இருவரைக் குறிக்கின்றன” என மறுமொழி பகர்ந்தார்.
4:3 திவெ 11:4. 4:6 எஸ்ரா 5:2. 4:10 திவெ 5:6. 4:11 திவெ 11:4.