எருசலேமின் பாவமும் மீட்பும்

1கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும் மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஐயோ கேடு!
2எந்தச் சொல்லுக்கும் அவள் செவி சாய்ப்பதில்லை; கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை; ஆண்டவர்மேல் அவள் நம்பிக்கை வைப்பதில்லை; தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.
3அந்நகரின் தலைவர்கள் கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்; அதன் நீதிபதிகள், மாலையில் கிடைப்பதை காலைவரை வைத்திராத ஓநாய்கள்.
4அதன் இறைவாக்கினர் வீண் பெருமை பேசும் வஞ்சகமிக்க மனிதர்; அதன் குருக்கள் புனிதமானதைக் களங்கப்படுத்தித் திருச்சட்டத்தை உதறித் தள்ளுபவர்கள்.
5அதனுள் இருக்கும் ஆண்டவரோ நீதியுள்ளவர்; அவர் கொடுமை செய்யாதவர்; காலைதோறும் அவர் தமது தீர்ப்பை வழங்குகின்றார்; வைகறைதோறும் அது தவறாமல் வெளிப்படும்; ஆனால் கொடியவனுக்கு வெட்கமே இல்லை.
6வேற்றினத்தாரை நான் வெட்டி வீழ்த்தினேன்; அவர்களுடைய கோட்டைகளைத் தகர்த்தெறிந்தேன்; அவர்களுடைய தெருக்களை வெறுமையாக்கினேன்; அவற்றில் நடந்துசெல்பவர் எவருமில்லை; யாரும் இராதபடி, எவரும் குடியிராதபடி அவர்களுடைய நகர்கள் பாழடைந்து போயின.
7“உறுதியாக எனக்கு நீ அஞ்சி நடப்பாய்; எனது கண்டிப்புரையை ஏற்றுக் கொள்வாய்; நான் வழங்கிய தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம் நீ மறக்கமாட்டாய்” என்று நான் எண்ணினேன்; அவர்களோ தங்கள் செயல்களைச் சீர்கேடாக்க இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.
8ஆதலால் ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: “நான் குற்றம் சாட்டுவதற்கு எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு; வேற்றினத்தாரை ஒன்று சேர்த்து, அரசுகளையும் ஒன்று திரட்டி, என் கடும்சினத்தையும் கோபத்தீயின் கொடுமை முழுவதையும், அவர்கள் மேல் கொட்டிவிடத் திட்டமிட்டுள்ளேன்; ஏனெனில், என் வெஞ்சினத் தீக்கு உலகெல்லாம் இரையாகும்.
9அக்காலத்தில் நான் மக்களினங்களுக்குத் தூய நாவினை அருள்வேன்; அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் பெயரால் மன்றாடி ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள்.
10எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் — சிதறுண்ட என் மக்கள் — எனக்குக் காணிக்கை கொண்டு வருவார்கள்.
11எனக்கு எதிராக எழுந்து நீ செய்த குற்றங்களை முன்னிட்டு அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்; ஏனெனில், அப்பொழுது இறுமாப்புடன் அக்களித்திருப்போரை உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்; இனி ஒருபோதும் எனது திருமலையில் செருக்கு அடையமாட்டாய்.
12ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்; அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள்.
13இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது; அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.”

மகிழ்ச்சிப் பாடல்

14மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி.
15ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.
16அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.
17உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.
18அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.
19இதோ!, உன்னை ஒடுக்கியவர்களை அந்நாளில் நான் தண்டிப்பேன்; கால் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றுவேன்; ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன்; அவமானமுற்ற அவர்களை உலகெங்கும் பெயரும் புகழும் பெறச்செய்வேன்.
20அக்காலத்தில் உங்களை ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்து உங்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வருவேன்; ஆம், உங்கள் கண்முன்பாகவே உங்களை முன்னைய நன்னிலைக்கு உயர்த்தி, உலகின் எல்லா மக்களிடையேயும் நீங்கள் பெயரும் புகழும் பெறுமாறு செய்வேன்” என்கிறார் ஆண்டவர்.

3:13 திவெ 14:5.