கீழ்ப்படியாமைக்கான தண்டனைகள்

1ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2“இஸ்ரயேல் புதல்வரிலோ இஸ்ரயேலில் தங்கும் அந்நியரிலோ யாரேனும் தன் வழிமரபில் ஒரு பிள்ளையை மோலெக்குக்குக் கொடுத்தால், நாட்டு மக்கள் அவனைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.
3அவனை எதிர்த்து நான் என் முகத்தைத் திருப்பிக்கொள்வேன். எனது தூயகத்தைத் தீட்டுப்படுத்தி, திருப்பெயரை மாசுபடுத்தித் தன் வழிமரபில் ஒரு பிள்ளையை மோலெக்கிற்குக் கொடுத்ததால், அவனை அவன் இனத்தில் இராதபடி அழிப்பேன்.
4தன்வழிமரபில் ஒரு பிள்ளையை மோலெக்குக்குக் கொடுத்தும், நாட்டு மக்கள் அவனைக் கொலை செய்யாது விட்டுவிட, அவன் தலைமறைவாயிருந்தால்,
5நான் அவனையும் அவன் குடும்பத்தையும் எதிர்த்து என் முகத்தைத் திருப்பிக் கொள்வேன். மோலெக்கின் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட அவனையும் அவனைப் பின்பற்றிய யாவரையும் அவர்கள் இனத்தில் இராதபடி அழிப்பேன்.
6குறிசொல்வோரையும், மைபோடுவோரையும் பின்பற்றி வழி தவறியோரை எதிர்த்து என் முகத்தைத் திருப்பிக்கொண்டு அவர்களை அவர்கள் இனத்தில் இராதபடி அழிப்பேன்.
7எனவே, நீங்கள் உங்களைப் புனிதப்படுத்தி, தூயவர் ஆகுங்கள். ஏனெனில், நான் உங்கள் கடவுள்!
8என் கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றின்படி நடங்கள். நானே உங்களைத் தூய்மைப்படுத்தும் ஆண்டவர்!
9தம் தந்தையையும் தாயையும் சபிக்கும் எவரும் கொலை செய்யப்பட வேண்டும். தம் தந்தையையும் தாயையும் சபிப்பவரின் குருதிப்பழி அவர்மேலேயே இருக்கும்.
10அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்.
11தன் தந்தையின் மனைவியோடு உடலுறவு கொள்பவன் தன் தந்தையை வெற்றுடம்பாக்கினான். எனவே, இருவரும் கொலை செய்யப்படுவர். அவர்களின் குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும்.
12ஒருவன் தன் மருமகளோடு உடலுறவுகொண்டு முறைகேடாக நடந்துகொண்டால், இருவரும் கொல்லப்படுவர். அவர்களது குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும்.
13பெண்ணோடு உடலுறவு கொள்வது போன்று, ஆணோடும் உடலுறவு கொண்டால், அவ்வாறு செய்வது அருவருப்பு. இருவரும் கொல்லப்பட வேண்டும். இருவரின் குருதிப்பழியும் அவர்கள் மேலேயே இருக்கும்.
14ஒருவன் ஒரு பெண்ணையும் அவள் தாயையும் மணம் செய்தால் அது பெருந்தவறு. அவனையும் அவர்களையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
15விலங்கோடு ஒருவன் புணர்ந்தால், அவன் கொல்லப்பட வேண்டும். அந்த விலங்கையும் கொல்ல வேண்டும்.
16ஒரு பெண் ஏதேனும் ஒரு விலங்கோடு புணர்ந்தால், அந்தப் பெண்ணையும் விலங்கையும் கொல்லவேண்டும். அத்தகைய எந்த உயிரும் சாக வேண்டும். அவற்றின் குருதிப்பழி அவற்றின் மேலேயே இருக்கும்.
17யாரேனும் ஒருவன் தன் தந்தைக்கு, அல்லது தாய்க்குப் பிறந்த மகளோடு அதாவது அவன் சகோதரியோடு உடலுறவு கொண்டால், அவளும் அதற்கு இணங்கினால் அது வெட்கக்கேடான செயல். அவர்கள் தங்கள் இனத்தோரின் முன்னிலையில் அழிக்கப்படுவார்கள். தன் சகோதரியை வெற்றுடம்பாக்கிய அவன் தன் தீவினையைச் சுமப்பான்.
18மாதவிலக்கில் இருக்கும் ஒருத்தியுடன் ஒருவன் உடலுறவுக் கொண்டால், இருவரும் தங்கள் உதிர ஊற்றைத் திறந்ததால் அவர்கள் தங்கள் இனத்தாரிடையே இல்லாதபடி அழிக்கப்படுவார்கள்.
19உன் தாயின் சகோதரியையோ, உன் தந்தையின் சகோதரியையோ வெற்றுடம்பாக்காதே. மீறுபவர் தங்கள் உடலை இழிவுபடுத்தியதால் தங்கள் பழியைத் தாமே சுமப்பர்.
20ஒருவன் தன் தந்தையின் சகோதரனின் மனைவியோடு உடலுறவு கொண்டால், அவன் தன் தந்தையின் சகோதரனை வெற்றுடம்பாக்கினான். எனவே, அவர்கள் தங்கள் பாவத்தைத்தாமே சுமப்பர்; பிள்ளையன்றி இறப்பர்.
21ஒருவன் தன் சகோதரன் மனைவியோடு உடலுறவு கொண்டால், அவன் தன் சகோதரனை வெற்றுடம்பாக்குகிறான். எனவே, அவர்கள் பிள்ளையன்றி இருப்பர்.
22நீங்கள் குடியிருப்பதற்காக உங்களை நான் கொண்டு போகிற நாடு உங்களைக் கக்கிவிடாதபடி, நீங்கள் என் அனைத்து நியமங்களைப் பற்றிக்கொண்டு அவற்றிற்கேற்ப வாழுங்கள்.
23உங்களுக்கு முன்பாக நான் விரட்டியிருக்கிற வேற்றினத்தாரின் செயற்படி நடக்க வேண்டாம்; மேற்குறிப்பிட்ட செயல்களையெல்லாம் அவர்கள் செய்தார்கள். எனவே, நான் அவர்களை வெறுத்தேன்.
24அவர்களின் நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்வீர்கள் என்று கூறினேன். பாலும் தேனும் ஓடும் அந்த நாட்டை உங்களுக்கு உடைமையாக்கினேன். உங்களை மக்களினங்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரே நான்!
25எனவே, நீங்கள் தீட்டற்ற விலங்குகளுக்கும் தீட்டான விலங்குகளுக்கும், தீட்டான பறவைகளுக்கும் தீட்டற்ற பறவைகளுக்கும், வேறுபாடு கண்டு தீட்டென்று நான் உங்களுக்குச் சொல்லிய விலக்கப்பட்ட விலங்காலும் பறவையாலும் தரையில் ஊர்ந்து செல்லுகின்ற எந்த ஒருபூச்சியாலும் உங்களை இழிவுபடுத்திக் கொள்ளாது இருப்பீர்களாக!
26எனக்கெனத் தூயவர்களாக இருப்பீர்களாக! ஏனெனில், ஆண்டவராகிய நான் தூயவராயிருந்து நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படி உங்களை மக்களினங்களினின்று பிரித்தெடுத்தேன்.
27குறிசொல்லும் அல்லது மைபோட்டுப் பார்க்கும் எந்த ஆணும் பெண்ணும் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். அவர்களின் குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும்”.

20:9 விப 21:17; மத் 15:4; மாற் 7:10. 20:10 விப 20:14; லேவி 18:20; இச 5:18. 20:11 லேவி 18:8; இச 22:30; 27:20. 20:12 லேவி 18:15. 20:13 லேவி 18:22. 20:14 லேவி 18:17; இச 27:23. 20:15-16 விப 22:19; லேவி 18:23; இச 27:21. 20:17 லேவி 18:9; இச 27:22. 20:19-20 லேவி 18:12-14. 20:21 லேவி 18:16.